இந்தியாவில் வாழ்ந்த வீட்டை 70 ஆண்டுக்குப் பிறகு வீடியோவில் பார்த்த பாகிஸ்தான் பெண்

  • 12 ஆகஸ்ட் 2017

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் 70-ஆவது சுதந்திர தினம் தற்போது நெருங்குகிறது. பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி தொடரின் ஒரு பகுதி.

Image caption சஃபியா ஹம்தானி

நாடு சுதந்திரம் அடைந்தது கொண்டாட்டங்களுக்கான காரணமாக இருந்தாலும், அந்த மகிழ்ச்சியின் நிழலில் படர்ந்திருந்த சோகம் பாகிஸ்தான்- இந்தியா பிரிவினை. நிழலின் அருமை வெயிலில் தெரியலாம், ஆனால் இந்த நிழலின் நினைவுகள் என்றும் மனதை வாட்டக்கூடியவை.

லட்சக்கணக்கான மக்கள் வீடிழக்க, நாடு மாற அடிகோலிய பிரிவினை நடந்து 70 ஆண்டுகள் முடியும் நிலையிலும் அதன் வலியை வேதனையை இன்னமும் உணரமுடிகிறது.

பிரிவினைக்கு முன் தங்கள் முன்னோர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த வீட்டை ஒருமுறையேனும் பார்க்க முடியாதா, என்று ஏங்கும் முதியவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

பிபிசி உருதுவில் பணிபுரியும் ரஜா ஹம்தானியின் தாய் சஃபியாவின் மனதிலும் அப்படி ஓர் ஆசை நிராசையாக இருந்தது.

Image caption பிரிவினைக்கு முன் சஃபியா, இந்தியாவில் இருக்கும் பஞ்சாபின் ஃபிரோஜ்புரில் வசித்தார்

ஃபிரோஜ்புர்

பிரிவினைக்கு முன் சஃபியா தனது குடும்பத்தினரோடு தற்போது இந்தியாவில் இருக்கும் பஞ்சாபின் ஃபிரோஜ்புரில் வசித்தார்.

தனது தாயாரை அவரது மூதாதையரின் வீட்டுக்கு ஒரு முறையேனும் அழைத்து வரவேண்டும் என்று ரஜா மிகுந்த பிரயாசைகள் எடுத்தார். ஆனால் சஃபியாவுக்கு இந்தியா வருவதற்கான விசா கிடைக்கவில்லை.

நேரிடையாக வருவதற்காக விசா கிடைக்காவிட்டால் என்ன? தொழில்நுட்ப முன்னேற்றத்தின் உச்சத்தில் இருக்கும் இன்று எதுவும் சாத்தியமே!

சஃபியா ஹம்தானி என்ற தாயின், ஒரு முதியவரின் ஆசையை நிறைவேற்றும் எண்ணத்துடன் ஃபிரோஜ்புருக்கு சென்றேன்.

சஃபியாவிடம் பேசி, அவர் வசித்த தெருவின் குறிப்புகளை வாங்கிக் கொண்டேன். எழுபது ஆண்டுகள் ஆனாலும், தனது வீடு இருந்த வீதி, கடைகளின் பெயர் என அவருக்கு அனைத்தும் நீங்காமல் நினைவில் இருந்தன.

Image caption ஃபிரோஜ்புரில் சஃபியாவின் வீட்டுக்கு செல்லும் வழி

ஃபிரோஜ்புர் சென்று சேர்வது சுலபமாகவே இருந்தது. ஆனால் புதிய ஊரில் எழுபது ஆண்டுக்கு முந்தைய வீட்டை கண்டறிவதற்காக உள்ளூர் பத்திரிகையாளர் மல்கீத் சிங்கின் உதவியைக் கோரினேன்.

பிறந்ததில் இருந்து ஃபிரேஜ்புரில் வசிக்கும் மல்கீத் சிங்குக்கு அங்கிருக்கும் மூலை முடுக்குகள் அனைத்தும் அத்துப்படி என்று சொல்வதில் தவறொன்றும் இல்லை. அவரின் உதவியில்லாமல் சஃபியாவின் வீட்டை என்னால் கண்டுபிடித்திருக்கமுடியாது.

சஃபியா கொடுத்த குறிப்பின்படி, 'குச்சா காதிர் பக்‌ஷா வீதி'க்கு அழைத்துச் சென்றார். ஆனால் சஃபியா சொன்னவற்றில் பல மாறுதல்கள் இருந்தஃன. வீதியின் பெயரே தற்போது 'கூச்சா டாகூர் சிங் தமீஜா' என்று மாறிவிட்டது.

Image caption ஃபிரோஜ்புரின் கூச்சா டாகூர் சிங் தமீஜா வீதி

அங்கு வசித்தவர்களிடம் குறிப்புகளைச் சொல்லி வழி கேட்டோம். வீதியில் இருந்து திரும்பியதுமே வலது புறத்தில் வீடு இருக்கும் என்றும், மிகப்பெரிய கதவு இருக்கும் என்றும் அடையாளம் சொல்லியிருந்தார் சஃபியா.

அவர் சொன்ன அடையாளம் அப்படியே மாறாமல் இருந்தது.

வீட்டை அடையாளம் கண்டோம்

நாங்கள் தேடிய வீட்டை கண்டுபிடித்துவிட்டோம் என்று எனக்கு புரிந்துவிட்டது. ஆனால் அதை உறுதி செய்ய வேண்டியவர் பாகிஸ்தானில் இருக்கும் சஃபியா.

வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு சஃபியாவுக்கு வீட்டைக் காட்டினோம். அதுதான் குழந்தைப் பருவத்தில் வாழ்ந்த வீடு என்பதை பார்த்த கணத்திலேயே சொல்லிவிட்டார் சஃபியா.

Image caption சஃபியா இழந்த வீடு

வெளியில் பார்த்ததுமே அவர் வீட்டை அடையாளம் கண்டு கொண்டாலும், வீட்டிற்கு உள்ளே சென்று பார்க்க விரும்பினோம். அதை சஃபியாவுக்கும் காட்ட ஆசைப்பட்டோம்.

ஆனால் தற்போது அந்த வீட்டின் உரிமையாளரிடம் அனுமதி வாங்கவேண்டும்.

அண்டை அயலாரிடம் பேசினோம். தற்போது கிடங்காக மாற்றப்பட்டிருக்கும் சஃபியாவின் வீட்டின் தற்போதைய உரிமையாளர், கபூர் எலக்ட்ரிகல்ஸின் கபூர் குடும்பத்தினர் என்பது தெரியவந்தது.

கபூர் எலக்ட்ரிகல்ஸுக்கு சென்றோம். உரிமையார் சஞ்சீப் கபூரும் அவருடைய அண்ணனும் இருந்தார்கள். நாங்கள் விசயத்தை விவரித்தோம்.

நாங்கள் சொன்னதில் முதலில் நம்பிக்கை ஏற்படவில்லை என்பதால் தயக்கம் காட்டினார்கள். எங்களுடைய அடையாள அட்டையைக் காட்டினோம்.

வெகுதொலைவில் இருந்து ஒரு முதியவரின் விருப்பத்தை நிறைவேற்ற வந்திருக்கிறோம் என்பதை புரிந்துக் கொண்ட பிறகு, மிகவும் மரியாதையாக உபசாரமும் செய்தார்கள்.

Image caption பிரிவினைக்கு முன் சஃபியா வாழ்ந்த வீடு

சஃபியாவின் வீட்டிற்குள் சென்று அவரது வீட்டை வீடியோ மூலமாக அவருக்கு காட்டவேண்டும் என்று தாபம் மனதில் எழுந்தது. மகிழ்ச்சியுடன் கபூர் குடும்பத்தினருடன் நீங்கா நினைவில் இடம் பெற்ற அந்த வீட்டிற்கு செல்லும்போது மனதில் இனம்புரியாத ஓர் உணர்வு ஏற்பட்டது.

கபூர் எலக்ட்ரிகல்ஸின் கிடங்கிற்குள் சென்ற பிறகு, சஃபியாவிடன் மீண்டும் வீடியோ கால் செய்து பேசினோம். வீட்டின் உட்புறத்தையும் காட்டினோம்.

சஃபியாவின் குரல் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தது. ஒரு குழந்தையாகவே மாறிப்போனார். எழுபது ஆண்டுகளுக்கு முன் விட்டுச் சென்ற இடத்தை பார்க்கும் ஆசை, நிராசையாகவே போய்விடுமோ என்று ஏங்கியவருக்கு ஏதோ ஒரு விதத்தில் ஆத்ம திருப்தி ஏற்பட்டது புரிந்தது.

எழுபது ஆண்டுகளுக்கு பிறகும் தனது வீட்டின் ஒவ்வொரு மூலையும் சஃபியாவுக்கு நினைவில் இருந்தது. இங்கிருந்து வலதுபுறமாக போங்கள், அங்கே அது இருக்கும் என்று சொல்லி குழந்தையை போல குதூகலித்து, ஆர்வத்துடன் வீட்டை சுற்றிப்பார்த்தார் வீடியோ மூலம்.

Image caption வீட்டின் தாழ்வாரம்

வீட்டிற்குள் நுழைந்ததும் ஒரு கிணறு இருக்கும் என்றார் சஃபியா. அந்த கிணற்றை மூடிவிட்டதாக சஞ்சீவ் கூறினார்.

கிணற்றை அடுத்து தாழ்வாரம். சஃபியா சொன்னது இம்மியும் மாறவில்லை, அவரின் மனப்பதிவுகள் சரியாகவே இருந்தன. வீட்டைப்பற்றிச் சொல்ல அவரிடம் ஆயிரம் விடயங்கள் இருந்தன.

எந்த ஒரு மகிழ்ச்சிக்கும் கால வரையறை உண்டே!

இறுதியாக, 'என் அம்மா-அப்பாவுடன் வாழ்ந்த குழந்தைப்பருவ நினைவுகள் நினைவுக்கு வந்துவிட்டன, நிராசை நிறைவேறியது' என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் சஃபியா.

மனமிருந்தால் மார்க்கமுண்டு. பிரிவினையால் பிரிந்து, அண்டை நாட்டினரானாலும், முந்தைய நினைவுகள் பசு மரத்தாணி போல் நினைவில் இருக்கும். அதை நிறைவேற்ற பல்வேறு தடைகள் இருந்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சியும், சிறிய பிரயாசையும் இருந்தால் போதும், நிராசைகள் நிறைவேறும்…

இந்த ஆண்டு சுதந்திர தினத்தை சஃபியா ஹம்தானி எழுபது ஆண்டுகளுக்கு பிறக்கு சற்றே மனநிறைவுடன் கொண்டாடுவார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :