இவான்கா டிரம்ப் இந்தியா வருகிறார்: சமூக வலைத்தளத்தில் ஒரு யுத்தம்!

நரேந்திர மோதி கடந்த மாதம் அமேரிக்கா சென்றிருந்தபோது, இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

படக்குறிப்பு,

இவான்கா டிரம்ப்

பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது, 2010-ஆம் ஆண்டு முதன் முதலாக நடந்த சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு, இந்த ஆண்டு எட்டாவது முறையாக நடக்கிறது. இந்தியாவில் இது நடப்பது இதுவே முதல் முறை.

ஐதராபாத்தில் வரும் நவம்பர் மாதம் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அதிபர் டிரம்பின் ஆலோசகரும் அவரது மகளுமான இவான்கா டிரம்ப் இந்தியா வருகிறார் என்று அமெரிக்கா சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கக் குழுவுக்கு இவான்கா தலைமை தாங்குவார் என்று டிரம்ப் ட்விட்டரில் அறிவித்துள்ளதோடு, இவான்காவின் வருகையை எதிர்பார்த்திருப்பதாக மோதியும் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் குழுவுக்குத் தலைமையேற்பதும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆர்வமுள்ள இளம் தொழில் முனைவோரைச் சந்திப்பது தனக்குப் பெருமை என்றும் இவான்கா ட்விட்டரில் கூறியுள்ளார்.

இதற்கு பல அமெரிக்கர்களும் ட்விட்டரில் எதிர்வினை ஆற்றுகின்றனர். டிரம்ப்புடன் இவான்கா மற்றும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னர் இருக்கும் படத்தைப் பதிவிட்டுள்ள கேத்தரின் என்னும் பயன்பாட்டாளர், "நான் டிரம்ப்புக்கு வாக்களிக்கவில்லை. அவருடன் இருக்கும் இருவருக்கும் யாருமே வாக்களிக்கவில்லை," என்று கூறியுள்ளார்.

பெண்களுக்கு முதலிடம், எல்லோருக்கும் வளம் (Women First, Prosperity for All) என்னும் கருத்தை மையமாகக் கொண்டு நடத்தப்படவுள்ள இந்த ஆண்டிற்கான மாநாட்டில் கலந்துகொள்ள வரும் பெண் தொழில் அதிபரான இவான்காவிடம், "அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேலை உங்களுக்கு இல்லை. நீங்கள் தேர்ந்தெடுக்கப்படவும் இல்லை. செனட் சபையால் ஒப்புதல் அளிக்கப்படவும் இல்லை," என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

அதிபரின் ஆலோசகராக இருந்தாலும் இவான்கா சம்பளம் பெறுவதில்லை. "அதிபரின் மகள் எதற்கு குழுவுக்குத் தலைமை தாங்குகிறார்? வெள்ளை மாளிகையில் அவரின் பதவி என்ன? அவர் அங்கு சம்பளம் வாங்கும் ஊழியரா," என்று ஸ்டீவீ என்னும் பயன்பாட்டாளர் கேட்கிறார்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் முறைகேடாக தங்கள் உறவினர்களுக்கு உதவுதல் என்பதைக் குறிக்கும் பதமான நெபோட்டிசம் (Nepotism) என்பதற்கான விளக்கத்தை கேரி என்பர் பின்னூட்டமிட்டுள்ளார். தன் தந்தையின் பதவியை, தன் தொழிலுக்காகப் பயன்படுத்துவதாக அவர் மீது பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன.

டெப்பி என்னும் பயன்பாட்டாளரோ, "இது நகைப்புக்கு உரியது. டிரம்ப் அதிபராகி ஆறு மாதங்களே ஆகின்றது. இவான்கா பல ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறார்," என்று கூறியுள்ளார்.

"வரி செலுத்துபவர்களின் செலவில் உலகைச் சுற்றி விடுமுறையைக் கழிப்பதே அவரின் வேலை," என்று விக் மெக்ஃபெர்சன் எனும் பயன்பாட்டாளர் கூறியுள்ளார்.

இவான்காவுக்கு இந்தியத் தரப்பில் இருந்து ஆதரவும் கிடைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர்களில் ஒருவரான ஆர்.பி.சிங், "இந்தியாவுக்கு உங்களை வரவேற்கிறோம்," என்று இவான்காவின் பதிவிற்கு இந்தியில் மறுமொழி கூறியுள்ளார்.

இந்தியாவில் பெண்களையும் தொழில் துறையை முன்னேற்றவும் வருமாறு வெங்கட கிருஷ்ண ராவ் என்பவர் அழைப்பு விடுத்துள்ளார்.

தொன்மை வாய்ந்த ஆன்மீக நாட்டிற்கு உங்கள் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று டாக்டர் நரைன் ரூபானி என்பவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

பா.ஜ.க-வின் முழக்கமான, 'சப்கா சாத், சப்கா விகாஸ்' (அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி) என்றுகூட ஒரு இந்தியர் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் நிதி ஆயோக் இந்த மாநாட்டின் ஏற்பாடுகளை முன்னெடுத்துச் செய்து வருவதாக அமெரிக்கத் தூதரகத்தின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :