அமெரிக்கா-வட கொரியா பதற்றம்: அண்டை நாடுகள் யாருக்கு ஆதரவு?

  • தெவான்ஷு கெளர்
  • பிபிசி மானிடரிங்

அமெரிக்கா - வட கொரியா நாடுகள் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், போர் ஏற்படுமா? போர் வந்தால் என்ன செய்ய வேண்டும்? என்ற இரண்டு முக்கிய கேள்விகள் கொரிய பிராந்திய ஊடகங்களிடையே எழுந்துள்ளன.

இரு நாடுகள் இடையே ஆயுதப் போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என சீனா அஞ்சுகிறது.

``வட கொரியாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களை சாதாரணமானதாக எடுத்துக்கொள்ள முடியாது`` என சீன அரசால் நடத்தப்படும் சீனா டெய்லி நாளிதழ் கூறியுள்ளது.

போரினை எப்படித் தடுப்பது என்றும் இந்த தடுப்பு முயற்சிகள் தோல்வி அடைந்தால் என்ன செய்வது என்றும் இப்பிராந்தியத்தில் உள்ள நாளிதழ்களில் விவாதங்களுடன் கூடிய செய்திகள் வெளியாகின்றன.

கொரிய பிராந்தியத்தில், அமெரிக்காவும் தென் கொரியாவும் தங்கள் ராணுவ பயிற்சிகளை நிறுத்தி வைப்பதற்குப் பதிலாக வட கொரியா தனது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனையை நிறுத்த வேண்டும் என்ற இரட்டை ஒப்பந்தத்திற்கு இரு நாடுகளும் உடன்படுமாறு சீனா வலியுறுத்தியது.

இதே கோரிக்கையினை பல ஊடகங்களும் எதிரொலித்தன.

``இந்த ஒப்பந்தம் மூலம் மட்டுமே வட கொரியாவை சமாதானப்படுத்த முடியாது என்றாலும், இந்த ஒப்பந்தங்கள் போர் நிறுத்தத்திற்கான ஆரம்பப் புள்ளி`` என சீனா டெய்லி கூறியிருந்தது.

குவாம் தீவினை வட கொரியா தாக்கினால் சீனா நடுநிலையாகச் செயல்படும் என்றும், அதே வேளை அமெரிக்காவும் தென் கொரியாவும், வட கொரியா மீது தாக்குதல் நடத்தினால் இதனைத் தடுக்க சீனா உறுதியாக தலையிடும் என்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.

``அமெரிக்க பிராந்திய கடல் பகுதியில் இருந்து 30-40 கி.மீ. தொலைவில் உள்ள கடல் பகுதிகள் தாக்கப்படும் என வட கொரியா அச்சுறுத்துகிறது. இது நேரடி போர் அறிவிப்பாக இருக்கலாம்`` என ரஷ்யாவின் பிரபல வணிக நாளிதழ் தெரிவித்துள்ளது.

இது போன்ற ஒரு தாக்குதல் நடந்தால், அதற்கு அமெரிக்காவே முழுப் பொறுப்பு எனவும் அது கூறியுள்ளது.

தென் கொரிய ஊடகங்கள் பெரும் அச்சத்துடன் இருக்கின்றன.

``ஒரு சிறிய தப்புக்கணக்கு கூட, திட்டமிடப்படாத தாக்குதல்கள் நடப்பதற்கான சாத்தியங்களை ஏற்படுத்தும்`` என ஒரு பிரபல தென் கொரிய நாளிதழ் கூறியுள்ளது.

இரு நாடுகள் இடையே தொடர்ந்து வரும் பதற்றங்கள் ``போர் ஆபத்தை அதிகரிக்கும்`` என அஷாஹி ஷிம்புன் என்ற ஜப்பானிய நாளிதழ் கூறியுள்ளது.

குவாமை குறி வைக்கும் வட கொரிய ஏவுகணைகளை ஜப்பான் இடைமறிக்கும் என ஜப்பான் ராணுவ அமைச்சர் கூறியிருக்கிறார்.

அமெரிக்கா வட கொரியா மீது தாக்குதல் நடத்தினால், வட கொரியாவிற்கு எதிரான போரில் ஆஸ்திரேலியாவும் பங்குபெறும் என ஆஸ்திரேலியா பிரதமர் மால்கம் ட்ர்ன்புல் கூறியுள்ளார்.

இதற்கிடையில் குவாம் தீவின் கவர்னர் எட்டி பாஸா கால்வா, அமைதி காத்து வருகிறார்.

``தற்போது நமது தீவுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என குவாம் தீவு மக்களிடம் மீண்டும் உறுதியளிக்க விரும்புகிறேன்`` என அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :