வெனிசுவேலா மீது ராணுவ நடவடிக்கை: மிரட்டும் டிரம்ப்

  • 12 ஆகஸ்ட் 2017

வெனிசுவேலாவில் நிலவும் சிக்கலைக் கையாள ராணுவ நடவடிக்கையைப் புறந்தள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அங்குள்ள மக்கள் இன்னலுக்கு ஆளாவதாகவும், தங்கள் உயிர்களை இழப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

அதிபர் டிரம்ப் அவ்வாறு கூறுவது 'ஒரு முட்டாள்தனமான செயல்' என்று வெனிசுவேலாவின் பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ கூறியுள்ளார்.

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ புதிதாக உருவாக்கியுள்ள அரசியலமைப்பு அவை ஜனநாயகத்துக்கு எதிரானது என்று பரவலாக விமர்சிக்கப்படுகிறது. மதுரோவை ஒரு சர்வாதிகாரி என்று கூறியுள்ள அமெரிக்கா, சமீபத்தில், அவருக்கு எதிராகப் பல தடைகளை விதித்துள்ளது.

"வெனிசுவேலாவைக் கையாள நமக்குப் பல தேர்வுகள் உள்ளன. தேவைப்பட்டால், சாத்தியக்கூறுகள் நிறைந்த ராணுவ ரீதியான தேர்வும் அவற்றுள் ஒன்றாக இருக்கும்," என்று வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறினார்.

"உலகின் தொலைதூரங்களில் உள்ள இடங்களில்கூட நமது படைகள் உள்ளன. வெனிசுவேலா ஒன்றும் நமக்கு மிகவும் தொலைவில் இல்லை. அங்குள்ள மக்கள் இன்னலுக்கு ஆளாவதுடன், உயிரிழக்கவும் செய்கிறார்கள்," என்று அவர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வெனிசுவேலா நாட்டின் எதிர்க்கட்சிகளின் போராட்டம்

வெனிசுவேலா அதிபர் மதுரோ, அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் பேசுவதற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஆனால், வெனிசுவேலாவில் ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டவுடன் மதுரோவுடன், டிரம்ப் மிகவும் மகிழ்ச்சியுடன் தொலைபேசியில் பேசுவார் என்று வெள்ளை மாளிகை அதற்குப் பதில் அளித்துள்ளது.

புதிய அரசியலமைப்பு அவை அமைக்கப்பட்டதற்கு, அந்தப் பிராந்தியத்தில் இருந்து வரும் கண்டனங்களுக்கு, வெனிசுவேலா 'ஏற்றுக்கொள்ள முடியாத' அளவுக்கு பதிலளித்ததால், தனது தலைநகரான லிமாவில் இருந்து வெனிசுவேலா நாட்டின் தூதரை வெளியேறுமாறு, சக தென்னமெரிக்க நாடான பெரு உத்தரவிட்டுள்ளது.

வெனிசுவேலா தூதர், டியாகோ மொலேரோ, பெருவை விட்டு வெளியேற ஐந்து நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வெனிசுவேலா நெருக்கடி: இறுதி கட்டம் நெருங்குகிறதா?

இரு அமெரிக்க கண்டங்களையும் சேர்ந்த 11 நாடுகள் புதிய அரசிலமைப்பு அவையை அமைத்தற்காக வெனிசுவேலாவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

அந்த அவை அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி எழுத அதிகாரம் பெற்றுள்ளதோடு, எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பாராளுமன்றத்தின் அதிகாரங்களைவிட கூடுதல் அதிகாரம் பெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ

மதுரோ தனது நம்பகத்தன்மையை இழந்துள்ளதாகக் கூறியுள்ள பெரு அதிபர் பெட்ரோ பாப்லோ குசின்ஸ்கி, அவர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். "சர்வாதிகாரியான மதுரோ, நாடாளுமன்றத்தை அகற்றுவதற்காக ஒரு போலியான தேர்தலை நடத்தி, அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளார்," என்று ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் குசின்ஸ்கி கூறியுள்ளார்.

அந்தத் தேர்தலைப் புறக்கணித்த வெனிசுவேலா நாட்டின் எதிர்க்கட்சிகள், அதிபர் மதுரோ அதிகாரத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கவே விரும்புவதாகக் குற்றம்சாட்டியுள்ளன. அதை மதுரோ மறுத்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு அவை நாட்டிற்கு அமைதியைக் கொண்டு வரும் என்று அவர் தொடர்ந்து கூறி வருகிறார். அங்கு ஏப்ரல் மாதம் முதல் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்கள் நிறைந்த போராட்டங்களில் 120-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :