வடகொரிய சிக்கலை மோசமாக்க வேண்டாம்: டிரம்பை வலியுறுத்தும் சீனா

சொல்லாலும் செயலாலும் பதற்றத்தை தீவிரப்படுத்த வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பையும், வடகொரியாவையும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார் என சீனாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை SAUL LOEB/AFP/ Getty Images
Image caption ஜெர்மனியில் அண்மையில் நடந்த ஜி 20 மாநாட்டின்போது சந்தித்துக்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்.

வடகொரியா மீது 'தீயும், சினமும்' பாயும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து டிரம்பும் வடகொரியாவும் பகைமையான சொற்பதங்களால் மோதி வருகின்றன. ஆனால், வடகொரியாவின் ஒரே பெரிய நட்பு நாடான சீனா சுயகட்டுப்பாட்டை வலியுறுத்தி வருகிறது.

கோபமூட்டும், பிரச்சனையைப் பெரிதாக்கும் செயல்களை வடகொரியா கைவிடவேண்டும் என்பதில் அமெரிக்காவும் சீனாவும் உடன்படுவதாக வெள்ளை மாளிகையில் இருந்து வெளியான அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பில் நீண்டகாலம் நிலவும் பதற்றம், அந் நாடு இரு கண்டம் விட்டுப் பாயும் ஏவுகணைகளை ஜூலையில் சோதித்துப் பார்த்தது முதல் மோசமடைந்துள்ளது.

வடகொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அதிகரிக்க கடந்த வாரம் ஐ.நா. எடுத்த முடிவு அந் நாட்டை மேலும் கோபமூட்டியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வடகொரியத் தலைவர் கிம் ஜான்-உங்

தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் நிலைமையை மோசமாக்கும் சொற்களையும், செயலையும் நிறுத்த வேண்டும் என்று டிரம்புடனான தொலைபேசி உரையாடலில் ஜி ஜின்பிங் தெரிவித்தார் என்று சீனாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதத்தை அகற்றுவதிலும், அங்கே அமைதியைப் பேணுவதிலும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் பொதுவான நலன்கள் இருப்பதாக ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

இத் தொலைபேசி உரையாடல் தொடர்பாக வெள்ளை மாளிகையில் இருந்து வெளியான அறிக்கையில் ஜி ஜின்பிங் விடுத்த இந்த வேண்டுகோள் குறித்த குறிப்பு இல்லை.

ஜின்பிங்-டிரம்ப் இடையே நெருக்கமான உறவு இருப்பதாகவும், வடகொரியச் சிக்கலை அமைதியான முறையில் தீர்க்க இந்த உறவு உதவும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

வடகொரியாவை கட்டுக்குள் வைக்கத் தவறுவதாக சீனாவை ஏற்கெனவே விமர்சித்த டிரம்ப், சீனா இன்னும் நிறைய செய்ய முடியும் என்று குறிப்பிட்டிருந்தார்.

பசிபிக் கடற்பகுதியில் உள்ள குவாம் தீவுக்கு அருகே ஏவுகணைத் தாக்குதல் நடத்த இருப்பதாக வடகொரியா அறிவித்திருந்தது. ஆனால், அப்படி ஒரு தாக்குதல் நிச்சயம் நடப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.

ஆயிரம் சதவீத உத்தரவாதம்

குவாமுக்கு ஏதாவது நடந்தால் வடகொரியா மிகப் பெரிய சிக்கலை எதிர்கொள்ளவேண்டி இருக்கும் என்று வெள்ளிக்கிழமை அன்று டிரம்ப் புதிய எச்சரிக்கையை விடுத்தார்.

"டிரம்பைவிட அதிகமாக யாரும் அமைதித் தீர்வை நாடவில்லை என்று சொல்வேன்" என்றும் அவரே கூறியுள்ளார்.

குவாம் ஆளுநர் எட்டி கால்வோவை வெள்ளிக்கிழமை தொலைபேசி மூலம் அழைத்த டிரம்ப் அவரது தீவு பாதுகாப்பாக இருப்பதாக உத்தரவாதம் அளித்தார். "1,000 சதவீதம் நாங்கள் உங்களோடு இருக்கிறோம்" என்று டிரம்ப் அப்போது குறிப்பிட்டார். இந்த அழைப்பைப் பதிவு செய்து யூடியூபில் பதிவிட்டுள்ளார் கால்வோ.

இதனிடையே, கொரிய தீபகற்பத்தை அமெரிக்கா அணு ஆயுதப் போரின் விளிம்புக்குத் தள்ளியிருப்பதாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது.

வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இந்த சொற்போர் தங்களை கவலை கொள்ளச் செய்திருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது. ஜெர்மனியும் எச்சரிக்கை உணர்வை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வட கொரிய ராணுவத்தின் முழுத்திறனை நீங்கள் பார்த்ததுண்டா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :