வடகொரிய விவகாரம்: டிரம்புடன் முரண்படும் அமெரிக்க அதிகாரிகள்

அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே அணு ஆயுதப் போர் நிகழ்வதற்கான சாத்தியம் உள்ள இந்தச் சூழலில், சமீப வாரங்களில், அதிபர் டொனல்டு டிரம்ப் மற்றும் அவரது உயர் அதிகாரிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் ஒன்றோடு ஒன்று முரண்பட்டவையாக உள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ், ராஜதந்திர ரீதியான நடவடிக்கைகள் பலன் தருவதாகக் கூறிய சில மணி நேரங்களிலேயே அதிபர் டிரம்ப், வட கொரியாவைத் தாக்க அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.

வட கொரியா கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய ஜூலை 28 முதல் டிரம்ப் நிர்வாகத்தின் முரண்பட்ட கருத்துக்களில் ஒரு சில.

டிரம்ப் என்ன சொன்னார்:

வட கொரியா மீதான தடைகளுக்கு ஐ.நா அவை ஒப்புதல் அளித்தது குறித்து மகிழ்ச்சியாக இருந்தாலும், ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளும் சாத்தியம் என்று அவர் வலியுறுத்தினார். கடந்த செவ்வாய்க்கிழமை, வட கொரியா தங்களை அச்சுறுத்தினால், அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று கூறினார்.

அமெரிக்காவின் பிராந்தியமான குவாம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக வட கொரியா கூறியதும், அமெரிக்கா அல்லது அதன் கூட்டாளிகள் மீது தாக்குதல் நடத்த நினைத்தால் கிம் ஜாங்-உன் தலைமையிலான அரசு நடுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று கூறியதோடு மட்டுமின்றி, அமெரிக்காவிடம் 'ஒழுங்காக நடந்துகொள்ளாத' சில நாடுகள் பிரச்சனைகளை சந்தித்ததைப் பற்றியும் கூறினார்.

அதிகாரிகள் என்ன சொன்னார்கள்:

ஆனால், ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸ், போர் பேரழிவை உண்டாக்கும் என்றும், ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் பலனளித்து வருவதாகவும் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரெக்ஸ் டில்லர்சன்

வெளியுறவு செயலர் ரெக்ஸ் டில்லர்சன், டிரம்ப் கூறியதற்கு முரணாக, அதிபர் ராஜதந்திர ரீதியிலான தீர்வுகளையே விரும்புகிறார் என்றார்.

டிரம்ப் என்ன சொன்னார்:

சமீப மாதங்களில் சீனா, வட கொரியாவுடன் வர்த்தக உறவைத் தொடர்வதை விமர்சித்த டிரம்ப், சீனா வட கொரியா விவகாரத்தில் பேசுவதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை என்றார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வட கொரிய ராணுவத்தின் முழுத்திறனை நீங்கள் பார்த்ததுண்டா?

ஜூலை மாத இறுதியில், வட கொரியாவின் ஏவுகணை சோதனையை சீனா தடுக்காததால் மிகவும் அதிருப்தியில் இருப்பதாக கூறினார்.

அதிகாரிகள் என்ன சொன்னார்கள்:

ஜூன் மாதம், வட கொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணை நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த சீனா எடுக்கும் நடவடிக்கைகளை மேட்டிஸ் பாராட்டினார்.

ஆகஸ்ட் 2-ஆம் தேதி, வட கொரியாவில் நிலவும் சூழ்நிலைக்கு நாங்கள் சீனாவை நிச்சயமாகக் குறை கூறவில்லை என்றார் டில்லர்சன்.

டிரம்ப் என்ன சொன்னார்:

குவாம் பிராந்தியம் மீது தாக்குதல் நடத்தினால், பெரிய பிரச்சனையை சந்திக்க தயாராக இருக்குமாறு வட கொரியாவை டிரம்ப் எச்சரித்தார்.

குவாம் அல்லது வேறு ஏதாவது அமெரிக்க பிராந்தியம் அல்லது அமெரிக்க கூட்டாளிகளின் பிராந்தியம் ஆகியவற்றை தாக்கினால், அதை நினைத்து கிம் ஜாங்-உன் நிச்சயம் வருத்தப்படுவார் என்றார் டிரம்ப்.

அதிகாரிகள் என்ன சொன்னார்கள்:

தன்னுடைய அதிபர் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தாலும், உடனடியாக பெரிய அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று டில்லர்சன் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜெனரல் மேட்டிஸ்

சமீப நாட்களில் சூழ்நிலை பெரிதாக எதுவும் மாறவில்லை என்றும் அமெரிக்கர்கள் 'இரவில் நன்றாகத் தூங்கலாம்' என்றும் அவர் புதன்கிழமை கூறினார்.

அதிபரின் உதவியாளர், செபாஸ்டியன் கோர்கா, டில்லர்சன் சொல்வது வெள்ளை மாளிகையின் நிலைப்பாடு அல்ல என்று பிபிசியிடம் கூறியதுடன், "நீங்கள் அதிபர் சொல்வதையே கவனிக்க வேண்டும். ராணுவ நடவடிக்கை பற்றி செயலர் டில்லர்சன் விவாதிப்பது முட்டாள்தனமானது," என்றார்.

சில நேரங்களில் டிரம்பின் அதிகாரிகள் அவர்களுக்கும் வேறுபடுகிறார்கள். அமெரிக்காவின் மேற்கு கடல் எல்லையைத் தாக்க முடியும் என்று ஜூலை மாதம் வட கொரியா கூறியபோது, "நாங்கள் ஆட்சி மாற்றத்தையோ, ஆட்சி கவிழ்வதையோ விரும்பவில்லை. நாங்கள் உங்கள் எதிரியில்லை," என்று வட கொரியாவிடம் கூறினார்.

ஆனால், சில நாட்கள் கழித்து, வட கொரியாவின் செயல்கள், "அதன் ஆட்சியின் முடிவாகவும், அதன் மக்களின் அழிவாகவும் இருக்கும், " என்று ஜெனரல் மேட்டிஸ் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :