தேசிய கீதத்தை பாடி பாகிஸ்தானியர்களின் மனதை வென்ற இந்திய இசைக்குழு

  • 14 ஆகஸ்ட் 2017
தேசிய கீதத்தை பாடி பாகிஸ்தானியர்களின் மனதை வென்ற இந்திய இசைக்குழு படத்தின் காப்புரிமை YOUTUBE/VOICEOFRAM

பாகிஸ்தான் தேசிய கீதத்தைப் பாடி காணொளி வெளியிட்ட இந்தியாவை சேர்ந்த இசைக் குழுவை, பாகிஸ்தானின் முன்னணி ஊடகங்களும், சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களது 70-ஆவது சுதந்திர தினத்தை இந்தாண்டு கொண்டாட உள்ளன. பாகிஸ்தான் ஆகஸ்ட் 14-ம் தேதி தனது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், இந்தியா ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடுகிறது.

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக, இந்தியா மீது பாகிஸ்தானும், பாகிஸ்தான் மீது இந்தியாவும் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றன.

இதனால் இரு நாடுகளிடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தக் காணொளி வெளியாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை Twitter

பாகிஸ்தானுக்கான பரிசு

பல பாகிஸ்தான் நாளிதழ்களும், டிவிட்டர் பயன்பாட்டாளர்களும் இந்தக் காணொளியை பாகிஸ்தானுக்கான பரிசு என வர்ணித்துள்ளனர்.

`இந்தியன் அகபெல்லா பேண்ட் வாக்ஸ்சோர்ட்` என்ற இசைக்குழு ஆகஸ்ட் 11-ம் தேதி யூடியூப்பிலும் ஃபேஸ்புக்கில் இந்தக் காணொளியை வெளியிட்டது.

``பாகிஸ்தான் சுதந்திர தின பரிசாக, இந்தியர்கள் பாகிஸ்தான் தேசிய கீதத்தை பாடியுள்ளனர்`` என எக்ஸ்பிரஸ் ட்ரைப்யூன் என்ற ஆங்கில நாளிதழ் கூறியுள்ளது.

``ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு சில நாட்களுக்கு முன்பாக, இந்த அருமையான பாடல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானியர்களும், இதே போல இந்தியர்களுக்குப் பரிசளிப்பார்களா? காத்திருந்து பார்ப்போம்`` என டான் நாளிதழ் கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Twitter

அன்புள்ள இந்திய நண்பர்களுக்கு நன்றி

``பாகிஸ்தான் தேசிய கீதத்தைப் பாடும் இந்தியர்கள் - அமைதியையும் அன்பையும் பரப்பும் இந்திய நண்பர்களுக்கு நன்றி`` என செய்தியாளர் ஹமீத் ட்விட் செய்துள்ளார்.

பாகிஸ்தான் டிவிட்டர் பயன்பாட்டாளர்கள் காணொளியைப் பகிர்ந்து வருவதுடன், இம்முயற்சியை எடுத்த இசைக்குழுவை பாராட்டியும் வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :