2021-ஆம் ஆண்டு வரை தற்காலிகமாக மெளனிக்கும் லண்டன் பிக் பென் கடிகார மணியோசை!

பிக் பென் கடிகார கோபுரம் படத்தின் காப்புரிமை Reuters

மிக முக்கியமான பழுது நீக்கும் வேலைகள் நடைபெற இருப்பதால், வரும் 2021-ஆம் ஆண்டு வரை லண்டனின் மிகப்பிரபலமான பிக் பென் கடிகாரத்தின் மணி ஓசை ஒலிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் இறுதி மணி ஓசையானது, பிரிட்டன் நேரப்படி திங்கள்கிழமை மாலை ஒலித்தது.

கடந்த 157 ஆண்டுகளாக இந்த கடிகாரம், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒலித்து வந்தது.

இதற்கு முன்னதாக 2007-ஆம் ஆண்டு பிக் பென் கடிகார மணி ஒலிப்பது நிறுத்தப்பட்டது. அதற்கு முன்னர் 1983-ஆம் ஆண்டிலிருந்து 1985-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பெரிய சீரமைப்புப் பணிகளுக்காக கடிகார மணி ஒலிப்பது நிறுத்தப்பட்டது.

பிக் பென் கோபுர பழுது நீக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் நன்மைக்காக கடிகார மணி ஒலிப்பது நிறுத்தப்பட்டது என நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடிகார மணி ஒலிப்பது நிறுத்தப்பட்டுள்ளது, பின் பென் கடிகாரத்தை சீரமைக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள `குறிப்பிடத்தக்க மைல்கல்` என, கடிகார காப்பாளரான ஸ்டீவ் ஜாக்ஸ் தெரிவிக்கிறார்.

`நீண்ட காலத்திற்கு இந்த கடிகாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், கடிகாரம் அமைந்துள்ள எலிசபெத் கோபுரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்` என அவர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை PA

இந்த கோபுரத்தைச் சுற்றி சாரம் கட்டப்பட்டு, பழுது நீக்கும் வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன.

சீரமைப்பு பணிகளின் போது மின் தூக்கி,கழிவறை, உணவகம் போன்ற வசதிகள் பிக் பென் கோபுரத்தில் அமைக்கப்படும் என இந்த திட்டத்தின் தலைமை கட்டட வடிவமைப்பாளரான ஆடம் வட்ராப்ஸ்கி பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும் பிக் பென் கடிகாரத்தின் பாகங்கள் அனைத்தும் கழற்றப்பட்டு, அவை சுத்தம் செய்யப்பட்டு, பழுது நீக்கப்படும்.

நாடாளுமன்றம் நடப்பதை குறிப்பதற்காக ஒளிரும் ஏர்டன் விளக்கும், இந்த பணிகளின் போது சீரமைக்கப்பட உள்ளது.

சீரமைப்புப் பணிகளின் போது கழற்றப்படும் கடிகாரத்தின் பழைய இயந்திர அமைப்புகள் மீண்டும் பொருத்தப்படும் வரை, மின்னணு மோட்டார் ஒன்று கடிகாரத்தை சுற்றச் செய்யும். இதனால் பிக் பென் கடிகாரம் தொடர்ந்து மணியை கூறி வரும்.

ஆனால் சீரமைப்புப் பணிகளின் போது, கடிகாரத்தின் முகப்புப் பகுதிகள் தற்காலிகமாக மறைக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

நாடாளுமன்ற கட்டடம் அமைந்துள்ள பகுதிகளையும் சீரமைக்க வேண்டி உள்ளது. பல பில்லியன் பவுண்ட் திட்ட மதிப்பு கொண்ட இந்த சீரமைப்புப் பணிகளுக்காக,எம்.பி.க்களை தற்காலிகமாக இடமாற்றம் செய்யும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.

பிக் பென் கடிகார மணியோசையை தொடர்ந்து ஒளிபரப்பி வரும் `பிபிசி 4` வானொலி பிரிவானது, கடிகார மணியோசை நிறுத்தப்பட்டாலும், பதிவு செய்யப்பட்ட மணியோசை தொடர்ந்து ஒலிபரப்பப்படும் என அறிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்