பிபிசி ஊழியர்களின் சொத்துகளை முடக்கியது இரான்

  • 15 ஆகஸ்ட் 2017

இரானில் உள்ள பிபிசி ஊழியர்களின் சொத்துகளை நடைமுறையளவில் முடக்குவது போல் தோன்றும் உத்தரவை ரத்து செய்யுமாறு, பிபிசி இரானிய ஆட்சியாளர்களை வலியுறுத்தியுள்ளது.

Image caption பிபிசி பாரசீக மொழி சேவையின் சின்னம்

பிபிசி பாரசீக மொழிச் சேவையின் ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள் மற்றும் சில செய்தி வழங்குநர்களைக் வெளிப்படையாக 'இலக்கு வைத்து நடத்தப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதலை' வன்மையாகக் கண்டிப்பதாக பிபிசி உலக சேவையின் இயக்குனர், ஃபிரான்செஸ்கா அன்ஸ்வொர்த், தெரிவித்துள்ளார்.

பிபிசி ஊழியர்கள் சொத்துகள், வாகனங்கள் மற்றும் இதர பொருட்களை வாங்குவதையும் விற்பதையும் இந்த உத்தரவு தடை செய்கிறது என்றும் இந்த உத்தரவை இரான் அரசு விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிபிசியின் பாரசீக மொழி சேவை இரானில் தடை செய்யப்பட்டுள்ளதுடன், அந்த செய்திச் சேவைக்காக ஊழியர்கள் அங்கு பணியாற்றுவதும் சட்ட விரோதமாக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், பிபிசி ஊழியர்களும், அவர்களின் குடும்பத்தினரும் இரானிய அதிகாரிகளின் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் தொடர்ச்சியாக ஆளாக்கப்பட்டு வருகின்றனர்

பணம் அல்லாத சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கும், தனது 152 ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள் மற்றும் செய்தி வழங்குநர்களின் பட்டியலைக் கொண்டுள்ள ஒரு நீதிமன்ற உத்தரவை பிபிசி பாரசீக சேவை பெற்றுள்ளது.

டெஹ்ரானின் எவின் சிறையில் உள்ள ஷாஹித் மொகடாஸ் நீதிமன்றத்தால் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த நீதிமன்ற உத்தரவு குறித்து பிபிசிக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பிபிசி பாரசீக மொழி சேவையில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் உறவினர், அவர்கள் சார்பாக சொத்து ஒன்றை விற்க முயற்சி செய்தபோதுதான் அந்த சொத்துக்கள் முடக்கம் பற்றித் தெரிய வந்தது.

இரானிய நீதித்துறை, இந்த நீதிமன்ற உத்தரவு தொடர்பாக எந்த விளக்கமும் தரவில்லை.

செவ்வாயன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "பிபிசியின் பாரசீக சேவை ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள் மற்றும் செய்தி வழங்குநர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருப்பதாகத் தோன்றும் இந்த உத்தரவை வன்மையாகக் கண்டிக்கிறோம்," என்று அன்ஸ்வொர்த் கூறியுள்ளார்.

Image caption 152 பேரின் பெயர்களைக்கொண்ட பட்டியல் குறித்து பிபிசியிடம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

"பிபிசியுடன் தொடர்பு வைத்திருப்பதற்காக யாரேனும் சட்ட ரீதியான அல்லது நிதி ரீதியான விளைவுகளைச் சந்திக்க வேண்டியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்து, இரானில் உள்ள பிபிசியின் இந்நாள் மற்றும் முன்னாள் ஊழியர்கள் தங்கள் சக குடிமக்களை போன்ற பொருளாதார உரிமைகளைப் பெற அனுமதிக்க வேண்டும் என்று இரானிய அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறோம்," என்று அன்ஸ்வொர்த் தெரிவித்துள்ளார்.

பாகுபாடின்றி செயல்படும் ஊடகவியலாளர்களை ஒடுக்க முயலும், இரானிய நீதித்துறையின் இன்னொரு முயற்சி இது," என்று இந்த நீதிமன்ற உத்தரவு குறித்து பிபிசி பாரசீக சேவையின் நிர்வாகம் கூறியுள்ளது.

"பிபிசி பாரசீக சேவையில் பணியாற்றும் ஊழியர்கள், உலகெங்கிலும் உள்ள பாரசீக மொழி பேசும் மக்களுக்காக, சுதந்திரமான, பாகுபாடற்ற மற்றும் நம்பகத்தன்மை நிறைந்த செய்திகளை, தொடர்ந்து அளிப்பார்கள்," என்று அதன் ஆசிரியர் (பொறுப்பு) அமீர் அஸிமி கூறியுள்ளார்.

இரானில் தடை உள்ளபோதிலும், சமீபத்திய தரவுகளின்படி, பிபிசி உலக சேவைக்கு இரானில் 1.3 கோடி வாசகர்கள் / பார்வையாளர்கள் உள்ளனர். இதன் மூலம் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு உலகின் ஏழாவது மிகப்பெரிய சந்தையாக இரான் விளங்குகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்