'சிறுநீர் கழிக்க ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே கழிப்பிடம்' - புதிய முயற்சி சாத்தியமாகுமா?

  • 16 ஆகஸ்ட் 2017
நின்றுகொண்டே சிறுநீர் கழிப்பதால், ஒரு நாளைக்கு 160 டன் நீரை சேமிக்க முடியும் என தனது மாணவிகளிடம் சீனாவின் ஷான்க்‌ஷி நார்மல் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமை AFP
Image caption நின்றுகொண்டே சிறுநீர் கழிப்பதால், ஒரு நாளைக்கு 160 டன் நீரை சேமிக்க முடியும் என தனது மாணவிகளிடம் சீனாவின் ஷான்க்‌ஷி நார்மல் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

பொது இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சிறுநீர் கழிப்பிடங்களை , ஆண்களும் பெண்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மாற்றி அமைக்க ஜெர்மனி தலைநகர் பெர்லினில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சிறுநீர் போன்ற இயற்கை அழைப்புகளை நாம் என்ன நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாது. இப்போதுதான் வர வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கவும் முடியாது. இது ஆண், பெண் என இருபாலருக்கும் பொருந்தும்.

ஆனால் இந்தியா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளிலும் பொது இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சிறுநீர் கழிப்பிடங்கள், கழிவறைகள் போன்றவை பெரும்பாலும் ஆண்களுக்கானதாக உள்ளது. இதனைத் தாண்டியும் பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் செயல்களில் ஆண்கள்தான் அதிக அளவில் ஈடுபடுகின்றனர்.

ஆனால் இந்த விடயத்தில் பெண்கள் படும்பாடு மிகவும் வருத்தத்திற்குரியது. பொதுவாக கழிவறைகளையே, சிறுநீர் கழிப்பிடங்களாக பெண்கள் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், பெண்களுக்கான கழிவறைகள் பொது இடங்களில் போதுமான அளவு இல்லாததால், சிறுநீர் கழிக்க பெண்கள் பெரிய வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது மற்றும் அந்த கழிப்பறைகளை சுகாதாரமாக வைத்திருப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், `ஆண்கள் சிறுநீர் பிறைகளை பெண்களையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பது அல்லது இருபாலரும் பயன்படுத்தும் வகையில் புதுமையான வகையில் சிறுநீர் கழிப்பிடங்களை உருவாக்குவது` என்ற புதிய திட்டத்தை ஜெர்மனி தலைநகரான பெர்லின் நகர அதிகாரிகள் பரிசீலித்து வருகிறனர்.

`அனைத்து இடங்களிலும் தற்போது ஆண்கள் பயன்படுத்தும் வகையிலான `சிறுநீர் பிறைகள்` அமைக்கப்பட்டுள்ளன. இதனை இருபாலரும் பயன்படுத்தும் வகையில் மாற்ற வேண்டும்`என `தி டாய்லெட் கான்செப்ட்` என்ற புதுமையான கழிவறை குறித்த 99 பக்க திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`எதிர்காலத்தில் அமைக்கப்படும் சிறுநீர் கழிப்பிடங்கள், அனைத்து பாலினத்தவரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட வேண்டும்.பெண்களுக்காக அமைக்கப்படும் சிறுநீர் பிறைகள் , பெர்லினின் புதுமையான கண்டுபிடிப்புகளை கொண்ட நகரம் என்பதை அனைவருக்கும் உணர்த்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்` என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்த சிறுநீர் கழிப்பிடங்கள் பொதுவான வடிவமைப்பை கொண்டிருந்தாலும், இருபாலரும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட உள்ளன.

இந்த இருபாலருக்குமான சிறுநீர் கழிப்பிடங்கள் வெளிச்சமான வெளிப்புறம், அவசர கால அழைப்பு மணி, பாகுபாடுகள் இல்லை என்பதை குறிக்கும் விளக்கப் படங்கள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுநீர் கழிப்பிடங்கள் நல்ல நோக்கத்திற்காகவே பயன்பட்டு வருவதாகவும், மேலும் அவை பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை (பெரும்பாலும் ஆண்கள்) தடுக்க உதவும் சிறந்த திட்டம் எனவும் அந்த அறிக்கையை உருவாக்கியவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுவாக பெண்களுக்கான சிறுநீர்கழிப்பிடங்கள் ,உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இருபாலருக்கான சிறுநீர் பிறைகள் அமைக்கப்படும் போது, உட்காரும்படியான சிறுநீர் கழிப்பிடங்கள் அமைக்கப்பட வாய்ப்பில்லை.

எனவே சிறுநீர் கழிப்பிடங்களுக்கு முன்னர், ஆண்களைப் போல நின்றுகொண்டு சிறுநீர் கழிக்க பெர்லின் நகர பெண்கள் ஒப்புக் கொள்வார்களா? அல்லது தங்களுக்கென தனியான சிறுநீர் கழிப்பிடங்கள் வேண்டுமென்றோ அல்லது திரைகள் வேண்டுமென்றோ கோரிக்கை வைப்பார்களா? என்பது குறித்து அந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

இந்த திட்டத்திற்கு பெர்லின் மக்களின் ஆதரவு எப்படி?

இடதுசாரி கூட்டணியின் ஆதரவுடன் நடைபெற்று வரும் ஜெர்மனி அரசு இந்த புதிய திட்டத்தை பரிசீலனை செய்து வருகிறது.ஆனால் இந்த திட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் ஜெர்மனி பெண்கள் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

பழமைவாத கிறிஸ்துவ ஜனநாயக கட்சியுடன் தொடர்புடைய பெர்லினை சேர்ந்த பெண் ஒருவர்,`எதற்கு நான் நின்று கொண்டே சிறுநீர் கழிக்க வேண்டும் என ஜெர்மனி அரசு விரும்புகிறது? பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு உட்பட விவாதிப்பதற்கு பல முக்கியமான விடயங்கள் உள்ளன பெண்களே!` என தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அந்நாட்டின் விண்டர்தெர் நகரில் உள்ள திரையரங்கில் அமைக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சிறுநீர் பிறையை பயன்படுத்திவிட்டு, அதில் தான் சிறுநீர் கழிக்க சிரமப்பட்டதாக கூறி #Fail என்ற ஹேஷ்டாக்கை பதிவிட்டுள்ளார்.

தண்ணீர் சேமிப்பில் முக்கியப் பங்கு

ஜெர்மனியைச் சேர்ந்த கழிவறை வடிவமைப்பு நிபுணரான பேராசிரியர் மெடே டெமிரிஸ், `ஜெட்ஸ்ட்.டி` என்ற இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், `இரு பாலினத்தவரும் பயன்படுத்தும் சிறுநீர் கழிப்பிடங்கள் தண்ணீரை சேமிப்பதில் சிறப்பாக செயல்படுகின்றன.

ஏனெனில், பொதுக் கழிப்பறைகளை ஒவ்வொரு முறை பெண்கள் பயன்படுத்தும் போதும், மூன்று முறை தண்ணீரை திறந்துவிடுவதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன` என தெரிவித்துள்ளார்.

இவருடைய அணியினர் பெண்களுக்கான சிறுநீர் பிறை ஒன்றை உருவாக்கி, அதனை ஜெல்சென்கிர்சென் பல்கலைகழகத்தில் நிறுவியுள்ளனர். இந்த சிறுநீர் கழிப்பிடம் சிறிய அறையில் ஒரு குட்டிக் கதவுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இது ஆண்களுக்கான சிறுநீர் கழிப்பிடங்கள் போலவே செயல்படும். ஆனால் சிறுநீர் கழிப்பிடங்கள் வழக்கமான உயரத்துடன் சற்று கீழே அமைக்கப்பட்டிருக்கும்.` என அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர், இத்தாலியைச் சேர்ந்த நிறுவனமான சிண்டெசிபாக்னோ என்ற நிறுவனம் இருபாலரும் பயன்படுத்தக் கூடிய `கேர்ள்லி` என்ற சிறுநீர் கழிப்பிடத்தை ஏற்கனவே வடிவமைத்துள்ளது.

ஆனால், இருபாலருக்கான பொதுவான சிறுநீர் கழிப்பிடங்கள் அமைக்கும் திட்டத்தை, எப்போது பெர்லின் நகர அரசு செயல்படுத்த உள்ளது என்பது குறித்து தெளிவாக தெரிவிக்கவில்லை.

சீனாவின் ஜியான் நகரில் உள்ள ஷான்க்‌ஷி நார்மல் பல்கலைகழகம், பெண்களுக்கான சிறுநீர் கழிப்பிடங்களை அமைத்து அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற விளக்க பலகைகளையும் வைத்துள்ளது.

ஏற்கனவே லண்டனில் அமைந்துள்ள கலையரங்கமான பார்பிக்கன் அரங்கில், இரு பாலருக்கும் பொதுவாக அமைக்கப்பட்ட சிறுநீர் கழிப்பிடங்களுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்