தேவாலயத்தில் பாவ மன்னிப்பு வழங்கும் கூண்டில் ஆபாசப்படம் எடுக்கப்பட்டதா?

  • 16 ஆகஸ்ட் 2017
தில்பர்க்கில் உள்ள புனித ஜோசப் தேவாலயம் படத்தின் காப்புரிமை Alamy
Image caption புனித ஜோசப் தேவாலயத்தை சுத்தம் செய்வதற்காக, கடந்த ஜனவரி மாதம் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

நெதர்லாந்து நாட்டின் தில்பர்க் நகரில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றின் பாவ மன்னிப்பு வழங்கும் கூண்டில் இருவர் உடலுறவு கொள்வது போல் ஆபாசப்படம் எடுக்கப்பட்டதாக தேவாலயத்தின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரை வழக்கறிஞர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளனர்.

இந்த ஆபாச காணொளி, இந்த ஆண்டின் துவக்கத்தில் நெதர்லாந்து நாட்டின் ஆபாச இணையதளம் ஒன்றில் வெளியானது.

ஆபாசப்படம் எடுப்பது சட்ட விரோதமானது என்றாலும் மத நம்பிக்கைகளை புண்படுத்துவதற்கு எதிராக சட்டங்கள் ஏதும் நடைமுறையில் இல்லை என நெதர்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தின் இந்த முடிவு மிகவும் மன வருத்தத்தை அளிப்பதாக புனித ஜோசப் கத்தோலிக்க தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜான் வான் நூர்வேகென் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Alamy
Image caption புனித ஜோசப் தேவாலயத்தை சுத்தம் செய்வதற்காக, கடந்த ஜனவரி மாதம் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

தேவாலயத்தின் மற்றுமொரு நிர்வாகி, சட்ட நடைமுறைகளில் மிகப்பெரிய தவறு இருப்பதாக புகார் அளித்துள்ளார்.

இந்த ஆபாசப்படமானது பிரபல டச்சு ஆபாசப்பட நடிகையான கிம் ஹாலண்டின் இணையதளத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியானது.

இந்த ஆபாசப்படத்தை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்ட நடிகை கிம் ஹாலண்ட், இந்த படம் வெளியில் இருந்து வந்த நபர் ஒருவரால் தயாரிக்கப்பட்டது எனவும், இனி அந்த படம் தனது இணையதளத்தில் இடம்பெறாது எனவும் தெரிவித்ததாக உள்ளூர் ஊடக நிறுவனமான ஓம்ரொயெப் ப்ராபண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரார்த்தனையின்போது, தேவாலயத்தின் புனிதத்தன்மைக்கு எதிராக நடைபெற்ற செயலுக்காக பாதிரியார் வான் நூர்வேகென் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இந்த பிரச்சனையை தேவாலய நிர்வாகிகள் அரசு வழக்கறிஞரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

ஆனால் இதனை தற்போது அரசு வழக்கறிஞர்கள் நிராகரித்துள்ளனர்.

`இது தவறானது மற்றும் மரியாதை குறைவானது என எங்களுக்கு தெரியும். ஆனால் சட்ட ரீதியாக ஆராய்ந்து பார்க்கும் போது, இதில் குற்றச் செயல்கள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. மத நிந்தனை நெதர்லாந்தில் குற்றம் கிடையாது. மேலும் அத்துமீறி நுழைந்தார்கள் என்பதற்கான காரணங்களும் இதில் இல்லை.` என அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

`உள்ளே வர அனுமதி இல்லை`

தற்போது இந்த ஆபாச காணொளியை சிவில் வழக்காக எடுத்துச் செல்லும் முடிவு தேவாலயத்தின் கையில் உள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்த அந்த தேவாலயத்தின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான ஹாரி டே ஸ்வர்ட், `ஆபாசப்படம் எடுத்தவர்கள் வேலியைத் தாண்டி குதித்து பாவ மன்னிப்பு கேட்கும் பெட்டிக்குள் சென்றார்கள் ` என தெரிவித்துள்ளார்.

`உள்ளே யாரும் வரக்கூடாது` என்ற அறிவிப்புப் பலகை தேவாலயத்தில் வைத்திருக்க வேண்டும் எனவும், அதற்கு பின்னர் அதனை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் நீதித்துறை அமைச்சகம் கூறுகிறது. ஆனால், தேவாலயத்தின் கதவுகள் மீது இது போன்ற அறிவிப்பை ஒட்ட வேண்டும் என்பது அபத்தனமானது.` என அவர் கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பிற்கு பாதிரியார் வான் நூர்வேகெனும் வருத்தம் தெரிவித்துள்ளார். `சற்று கற்பனை செய்து பாருங்கள். தற்போது தேவாலயத்தில் நடந்த இந்த செயல், நாளை உணவகத்திலோ, வேறு ஏதாவது முக்கியமான இடத்திலோ நடக்காது என்பது என்ன நிச்சயம்` என அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்