டிரம்பின் தொலைபேசி அழைப்புக்காக காத்திருக்கும் காடுகள்

  • 17 ஆகஸ்ட் 2017

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பருவநிலை தொடர்பான கொள்கைகளால் உண்டாகும் மோசமான விளைவுகளை ஈடுகட்ட உலகெங்கிலும் உள்ள பலர் 1,20,000 மரங்களை வளர்க்க உறுதியேற்றுள்ளனர்.

படத்தின் காப்புரிமை MARTIN BERNETTI
Image caption அதிபர் டிரம்பின் கொள்கைகளால் உண்டாகும் சூழல் விளைவுகளை இந்த காடுகள் ஈடுகட்டும் என்று செயல்பாட்டாளர்கள் நம்புகின்றனர்

பருவநிலை அறிவியலில் டிரம்ப் கொண்டுள்ள 'அறியாமையால்' கவலையுற்றிருப்பதாகக் கூறும் சுற்றுச்சூழல் பிரசாரகர்களால் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

'டிரம்ப் ஃபாரஸ்ட்' (Trump Forest) திட்டம் மூலம், மக்கள் தாங்களாகவே உள்ளூரில் மரம் வளர்க்கலாம் அல்லது உலகில் உள்ள பல ஏழை நாடுகளில் மரங்களை நட்டு பராமரிப்பதற்கு நிதி உதவி செய்யலாம்.

பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான சர்வதேச ஒப்பந்தங்களில் அமெரிக்கா தொடர்ந்து நீடித்தால், அது அந்நாட்டின் பொருளாதரத்தை பாதித்து, பலரையும் வேலை இழக்கச் செய்யும் என்றும் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு சந்தைப் போட்டியில் சாதகமான சூழலை உருவாக்கும் என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.

டிரம்பின் கொள்கைகளால் உண்டாகும் விளைவுகளை ஈடுகட்ட, அமெரிக்காவில் உள்ள கென்டகி மாகாணத்தின் பரப்பளவுக்குச் சமமான இடத்தில் காடுகள் வளர்க்கப்பட வேண்டும் என்று இந்தக் காடு வளர்ப்புத் திட்டத்தை செயல்படுத்துபவர்கள் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஒபாமாவின் பருவநிலை குறித்த கொள்கை முடிவுகளில் இருந்து டிரம்ப் வேகமாக விலகிவிட்டார்.

கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் 450 பேர் மரம் வளர்ப்பதாக உறுதி அளித்துள்ளனர். முதல் ஒரு மாதத்தில் 15,000 மரங்கள் நடுவதற்காக உறுதி ஏற்கப்பட்டது. இப்போது அந்த எண்ணிக்கை 1,20,000-ஐ கடந்துள்ளது.

மடகாஸ்கர், ஹைத்தி, எத்தியோப்பியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ள காடுகளைப் புணரமைக்க சிலர் நிதி உதவி செய்துள்ளனர். சிலரோ மரக் கன்றுகளை வாங்கி வீட்லேயே நட்டுவிட்டு, அதற்கான ரசீதை இந்தத் திட்டத்தை ஒருங்கிணைப்பவர்களுக்கு அனுப்பியுள்ளனர்.

நீண்ட காலமாகப் பருவநிலை மாற்றம் தொடர்பாக பிரசாரம் செய்து வரும் இதன் ஒருங்கிணைப்பாளர்கள், டிரம்பின் கொள்கைகளால் உலக அளவில் ஒரு ஏமாற்றம் நிறைந்த ஆற்றாமை நிலவுவதாகக் கூறியுள்ளனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அமெசான் காடுகள் அணைகளால் அழியுமா?

பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது வகுக்கப்பட்ட பருவநிலை தொடர்பான சட்டங்களை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டதுடன், பாரி பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.

"வங்கதேசம், மங்கோலியா மற்றும் சில நாடுகளில் பருவநிலை மாற்றம் குறித்த செயல்பாடுகளில் முன்னணியில் இருக்கும் சிலரை நாங்கள் சந்தித்தோம். அப்போது டிரம்ப்பின் ஆழமான அறியாமை பலரையும் மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது," என்று டிரம்ப் ஃபாரஸ்ட் திட்டத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஏட்ரியன் டெய்லர் கூறுகிறார்.

"டிரம்ப் நிர்வாகத்தின் முடிவால், வளி மண்டலத்தில் வெளியேறும் வாயுக்களை உள்வாங்கும் திறன் உடைய ஒரு சர்வதேச வனப் பரப்பை உருவாக்கவே நாங்கள் விரும்புகிறோம். இது சற்று வேடிக்கையாகத் தோன்றலாம்; ஆனால் சாத்தியமானதுதான்," என்கிறார் இன்னொரு நிறுவனரான மருத்துவர் டேனியல் பிரைஸ்.

பொதுவாக பெரிய ஆதரவு இருந்தாலும், டிரம்பின் கொள்கைகளை ஆதரிப்பவர்களிடம் இருந்து சில வெறுப்பை வெளிப்படுத்தும் மின்னஞ்சல்களும் வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

'டிரம்ப் ஃபாரஸ்ட்' என்று இந்தத் திட்டத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது, அதிபரின் அகம்பாவத்தைத் தூண்டுவதாக இருக்கும் என்றும் சிலர் முணுமுணுப்பதையும் கேட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை TRUMP FOREST
Image caption 'டிரம்ப் ஃபாரஸ்ட்' மார்ச் 2015-இல் சூழலியல் பிரசாரகர்களால் நியூசிலாந்தில் தொடங்கப்பட்டது

"நாங்கள் அவர் (டிரம்ப்) காடுகளை நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இது அவரின் காடு. அவர் இதைப்பற்றி டிவிட்டரில் பதிவிட வேண்டும் என்று நாங்கள் மிகவும் விரும்புகிறோம்," என்கிறார் டெய்லர்.

"அவர் உருவாக்கிய இந்த தளர்ச்சியான சூழலை வேகப்படுத்தவே நாங்கள் செயல்படுகிறோம். அவர் செய்ய வேண்டிய செயல்களையே நாங்கள் செய்கிறோம்," என்கிறார் பிரைஸ்.

"டிரம்ப் வோட்கா, டிரம்ப் டவர் போன்று இந்தக் காடுகளின் உரிமையையும் அவரே எடுத்துக்கொள்ள விரும்பினால், எங்கள் தொலைபேசிக்கு எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆகவே, மிஸ்டர்.பிரெசிடெண்ட் ஒரு வேலை நீங்கள் இதைப் படித்தால்.....," என்று நம்பிக்கையும், புதிரும் கலந்து முடிக்கிறார் பிரைஸ்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :