இந்தியாவுடனான மோதல் பற்றிய சீன ஊடகத்தின் இனவெறிக் காணொளி

  • 18 ஆகஸ்ட் 2017

இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனையை கண்டித்து சீன அரசு ஊடகம் வெளியிட்டுள்ள பரப்புரை காணொளி மீது இனவெறி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை XINHUA

சீக்கியர்கள் தலையில் கட்டிக்கொள்ளும் டர்பனை அணிந்திருக்கும் சீன நடிகர், இந்திய உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுவதை காட்டும் இந்த ஆங்கில மொழி காணொளி, இந்தியா குற்றங்கள் புரிந்துள்ளதாக குற்றம்சாட்டுகிறது.

இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதி பற்றி உரையாடும் ஒரு விவாத நிகழ்ச்சியில் இருந்து, சிறு காணொளி பகுதியை சின்குவா செய்தி நிறுவனம் வெளியிட்டது.

இது இந்தியாவிலும், சீக்கியர்களின் மத்தியிலும் ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காணொளியில் என்ன உள்ளது?

"இந்தியாவின் ஏழு குற்றங்கள்" என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த காணொளியை சீனாவின் பெண் தொகுப்பாளர் டிர் வாங் தொகுத்து வழங்குகிறார்.

சீனா, இந்தியா மற்றும் பூடானின் எல்லையில் அமைந்துள்ள டோக்லாம் பகுதியில் தொடர்ந்து நிலவி வரும் எல்லை சர்ச்சை விவகாரத்தில், இந்தியாவுக்கு எதிரான சீனாவின் குற்றச்சாட்டுக்களை அந்த தொகுப்பாளர் பட்டியலிடுகிறார்.

ஆங்கில மொழி இணையதள உரையாடல் நிகழ்ச்சித் தொடரான "த ஸ்பார்க்" என்பதில் இடம்பெற்ற சமீபத்திய நிகழ்ச்சி, சின்குவா செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

ஆச்சரியமான தொனியில் இந்திய உச்சரிப்பில் பேசும் அவர், சர்வதேச சட்டத்திற்கு எதிராக இந்தியா செயல்படுவதாவும், இந்த சட்டப்பூர்வமற்ற நடவடிக்கைகளை நல்லதுபோல தோற்றுவிக்க பல்வேறு சாக்குப்போக்குகளை இந்தியா கண்டுபிடிப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார்.

படத்தின் காப்புரிமை XINHUA

சீன நடிகர் ஒருவரால் தலையில் டர்பன் கட்டி, சன் கிளாஸ் அணிந்து, முகத்திற்கு பொருந்தாத மோசமான தாடியுடன் இந்தியரை போல வேடமிட்ட ஒருவரின் உரையாடலுக்கு இடைஇடையே அந்த தொகுப்பாளரின் குரல் ஒலிப்பதாக உள்ளது.

"நகைச்சுவை முயற்சி" என தோன்ற செய்ய பலரின் சிரிப்பு ஒலிக்கு மத்தியில் தலையை ஆட்டிக்கொண்டும், மிகைப்படுத்தப்பட்ட இந்திய உச்சரிப்பிலான ஆங்கிலத்திலும் அவர் பேசுகிறார்.

இன்னொரு காட்சியில், பூட்டானை பிரதிநிதித்துவப்படுத்தும் இன்னொரு நடிகரை நோக்கி தொகுப்பாளர் கத்தரியை காட்டுகிறார்.

"சிறிய இமாலய நாடான பூட்டானை இந்தியா கேலிக்குட்படுத்துகிறது" என்கிற சீனாவின் பார்வையை வெளிப்படுத்தும் தெளிவான சைகை இதுவாகும்.

இந்த காணொளி வெளிநாட்டு பாவையாளர்களை இலக்கு வைத்து வெளியிடப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.

இது ழுழுவதும் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டுள்ளது. சின்குவா செய்தி நிறுவனத்தின் யு டியூப், டிவிட்டர், ஃபேஸ்புக் பக்கங்கள் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதும், அந்த சமூக ஊடக பக்கங்களில் இந்த விமர்சன காணொளி பகிரப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை XINHUA

முந்தைய நிகழ்ச்சிகளில், சீன - இந்திய எல்லை பிரச்சனை, சீன - இந்திய உறவுகள் மற்றும் அமெரிக்கா, அதிபர் டொனால்ட் டிரம்போடு உள்ள உறவுகள் பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால், அவை இப்போது வெளியானதை விட மிகவும் தெளிவானதாக இருந்தன.

எதிர்வினை என்ன?

இந்திய செய்தி ஊடகங்கள் இந்த காணொளியை "இனவெறி விமர்சனம்" என்று கண்டித்துள்ளன.

சீக்கிய சிறுபான்மையினரையும் இந்தியரையும் விமர்சிக்கும் இனவெறி காணொளியை சின்குவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளதாக "தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்" தெரிவித்துள்ளது.

செய்தி சேவை வழங்கும் "த குய்ன்ட்", எல்லைப் பிரச்சனை பற்றிய தீவிரமான விவாதத்தை உருவாக்க சீன ஊடகங்கள் மேற்கொண்ட இன்னொரு முயற்சி இது என குறிப்பிட்டுள்ளது.

"இந்தியா டுடெ", இந்தியாவை கேலி செய்வதில் சீன ஊடகங்கள் மேலும் ஒருபடி மேலே சென்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.

ஐக்கிய ராஜ்ஜியத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சீக்கிய செய்தி கூட்டமைப்பு, இந்திய மக்கள்தொகையில் 2 சதவீதத்திற்கும் குறைவான சீக்கியர்களே இருப்பதை சுட்டிக்காட்டி, இந்தியாவுக்கு எதிரான சீன நாட்டின் பரப்புரைக்கு சீக்கிய அடையாளத்தை சீன ஊடகங்கள் வைத்துள்ளன. அதன் மூலம் சீனாவுக்கு தலைகுனிவை அந்த காணொளி ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்திருக்கிறது.

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரின் விமர்சனங்களையும் இந்த காணொளி பெற்றிருக்கிறது.

படத்தின் காப்புரிமை .

டோக்லாம் பகுதி பற்றிய விவாதத்தை இந்த காணொளி உருவாக்கியுள்ளது. "ஃபேஸ்புக்" பக்கத்தில் பலரும் டோக்லாம் பகுதி எந்த நாட்டின் இறையாண்மைக்குரிய பகுதி? என்று பலர் தங்களின் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.

எப்படி தொடங்கியது?

இந்தியாவில் டோக்லாம் என்றும், சீனாலில், டொங்லாங் என்றும் அறியப்படும் ஒரு பீடபூமி பகுதி வழியாக தன்னுடைய எல்லை சாலையை விரிவாக்க சீனா முயற்சித்த ஜூன் மாத நடுவில் இந்தப் பிரச்சனை தொடங்கியது.

சீனாவும், இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான சிக்கிமும், இமயமலையில் அமைந்துள்ள பூடானும் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ள இந்த பீடபூமி, சீனாவுக்கும், பூடானுக்கு இடையிலான சர்ச்சைக்குரிய பகுதியாக உள்ளது. பூடான் இந்த பகுதியை தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடுவதற்கு இந்தியா ஆதரவளிக்கிறது.

1962 ஆம் ஆண்டு எல்லைப் பிரச்சனை தொடர்பாக சீனாவும், இந்தியாவும் போரிட்டாலும், பல இடங்களில் சச்சரவுகளுக்கு தீர்வு எட்டப்படவில்லை. அதனால் அவ்வப்போது பதட்டம் உருவாகிறது.

இந்தப் பகுதியில் தங்களுடைய படைப்பிரிவுகளை அதிகரித்திருக்கும் சீனாவும், இந்தியாவும் பரஸ்பரம் படைப்பிரிவுகளை திரும்பப் பெற வேண்டும் என்று மாறி மாறி வலியுறுத்தி வருகின்றன.

மேலும், இமயமலையின் மேற்குப் பகுதியில் இன்னொரு எல்லைப் பிரச்சனை எழுந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா - சீனா இடையேயான சமநிலையற்ற வர்த்தகம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே உள்ள சமநிலையற்ற வர்த்தகம்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :