வேர்க்கடலை ஒவ்வாமைக்கு நான்கு ஆண்டுகள் வரை பலன் தரும் மருத்துவம்..!

  • 18 ஆகஸ்ட் 2017
வேர்கடலை படத்தின் காப்புரிமை Thinkstock

வேர்க்கடலையினால் ஏற்படும் ஒவ்வாமைக்கு அளிக்கப்படும் ஒரு வகை மருத்துவம், நான்கு ஆண்டுகள் வரை பலன் அளிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்த ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வேர்க்கடலையிலுள்ள புரோட்டீன் மற்றும் புரோபயாடிக் ஆகியவை தினசரி வீதம் 18 மாதங்களாக அளிக்கப்பட்டது.

ஒரு மாதம் கழித்து அந்தக் குழந்தைகளை சோதித்துப் பார்க்கும் போது, 80 சதவீதம் பேருக்கு வேர்க்கடலையை சாப்பிடுவதால் எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை. 70 சதவீதம் பேர், வேர்க் கடலை சாப்பிடும் போது எந்தவித பக்க விளைவுகளையும் சந்திக்கவில்லை.

கடந்த சில தசாப்தங்களாக உணவு ஒவ்வாமை பிரச்சனை அதிகரித்து வருகிறது. அவற்றில் வேர்க்கடலை ஒவ்வாமை மிக மோசமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

`குழந்தைகளில் பாதி பேர் வேர்க்கடலையை அடிக்கடியும், மீதமுள்ள 50 சதவீதத்தினர் எப்போதாவதும் வேர்க்கடலையை உண்கின்றனர்` என்கிறார் முர்டாக் குழந்தைகள் ஆராய்ச்சி நிலையத்தின் முன்னணி ஆராய்ச்சியாளரான பேராசிரியர் மிமி டாங்.

`இந்த ஆய்வில் கிடைத்த மிக முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த சிகிச்சையை பின்பற்றிய குழந்தைகள், வேர்க்கடலை ஒவ்வாமை இல்லாத குழந்தைகளைப் போல் வேர்க்கடலை சாப்பிட முடிந்தது என்பதுதான். மேலும் வேர்கடலையால் ஏற்படும் பாதிப்புகளை தாங்கக் கூடிய திறனையும் அவர்களால் தொடர முடிந்திருக்கிறது.` என அவர் தெரிவித்துள்ளார்.

வேர்க்கடலை ஒவ்வாமைக்காக அளிக்கப்பட்ட சிகிச்சை ஒன்று, நான்கு ஆண்டுகள் வரை பலனளித்துள்ளது இதுவே முதல் முறை என அவர் கூறுகிறார்.

சில வகை ஒவ்வாமைகளை தடுக்கக் கூடிய பண்புடைய `லாக்டோபேசில்லஸ் ரோம்னோசஸ்` என்ற புரோபயாடிக் இந்த சிகிச்சை முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, இந்த சிகிச்சை முறை குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை அதிகரித்துள்ளதா? என்பதை ஆராய விருப்பம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 250 மில்லியன் மக்கள், உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த இரண்டு தசாப்தங்களில் மும்மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வாமையினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் மிக அதிக பங்கு வகிக்கும் வேர்க்கடலை ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, தற்போது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

`மேற்குலக சமுதாயத்தில் அதிகளவில் இருக்கக் கூடிய இந்த உணவு ஒவ்வாமை பிரச்சனையை தடுக்கக் கூடிய சிறந்த மருத்துவத்தை கண்டெடுப்பதில் இது ஒரு முக்கிய முன்னேற்றம்.` என பேராசிரியர் மிமி டாங்க் கூறுகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்