பார்சிலோனா தீவிரவாதத் தாக்குதல்: சந்தேக நபர்கள் ஐந்துபேர் சுட்டுக்கொலை

  • 18 ஆகஸ்ட் 2017
பார்சிலோனா தீவிரவாதத் தாக்குதல்: சந்தேக நபர்கள் ஐந்துபேர் சுட்டுக்கொலை படத்தின் காப்புரிமை Getty Images

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் 13 பேரை பலிகொண்ட வேன் தாக்குதல் சம்பவம் ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்று அந்நாடு அறிவித்துள்ளது.

இதனிடையே அந்நாட்டின் கேம்ப்ரில்ஸ் நகரில் இதே போன்று நடக்கவிருந்த இரண்டாவது வேன் மோதல் தாக்குதலை தடுத்து நிறுத்தியதாகவும், இம் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து பேரை கொன்றுவிட்டதாகவும் காவல் துறை அறிவித்துள்ளது. ஒரு சோதனைச் சாவடியில் போலீசார் மீது ஏற்றிவிட்டுச் செல்ல முயன்றது அந்த வேன் என்றும் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் வெடிகுண்டு பெல்டுகளை அணிந்திருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption கேம்ப்ரில்ஸ் நகரில் இரண்டாவது வேன் தாக்குதல் முயற்சியை முறியடித்தபின் அந்த வாகனத்தைப் பரிசோதிக்கும் போலீசார்.

பார்சிலோனாவில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள அல்கனார் நகரில் புதன்கிழமை ஒரு வீடு வெடித்துச் சிதறியதை இந்தத் தீவிரவாதத் தாக்குதலோடு தொடர்புப்படுத்துகிறது காவல்துறை. இச்சம்பவத்தில் ஒரு நபர் இறந்தார்.

அந்த வீட்டில் இருந்தவர்கள் வெடிகுண்டு தயாரித்துக்கொண்டு இருந்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

வெடித்து நாசமான அந்த வீட்டில் ஏராளமான புரோபேன் வாயுக் குடுவைகள் இருந்ததாகவும், தாக்குதலுக்கான வெடிகுண்டு தயாரிக்க இவை இருப்பு வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் காவல் துறை தலைவர் ஜோசஃப் லியுஸ் ட்ரப்பெரோ கூறியுள்ளார்.

அந்நாட்டு பிரதமர் மரியானோ ரஜோய் இத் தாக்குதல் சம்பவங்களை ஜிகாதித் தாக்குதல் என்று கூறியுள்ளார்.

இதனிடையே, இத்தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பார்சிலோனாவின் புகழ்பெற்ற லாஸ் ரம்ப்லாஸ் என்ற சுற்றுலாப் பகுதியில் பாதசாரிகள் மீது நேற்று ஒரு வேன் பாய்ந்ததில் 13 பேர் கொல்லப்பட்டார்கள். 100 பேர் காயமடைந்தனர். அந்த வேனின் டிரைவர் தப்பிச் சென்றுவிட்டார்.

தாக்குதலுக்குப் பயன்படுத்திய அந்த வாகனம் பார்சிலோனா நகரில் வாடகைக்கு எடுக்கப்பட்டது என்கிறது ஸ்பெயின் நாட்டின் தேசிய ஊடகமான ஸ்பானிஷ் ரேடியோ டெலிவிஷன் கார்ப்பரேஷன் (RTVE). ட்ரிஸ் ஒவ்பக்கீர் என்பவரது ஆதாரங்களை வைத்து வேன் வாடகைக்கு எடுக்கப்பட்டது என்று கூறும் போலீஸ் அவரது புகைப்படத்தை வெளியிடப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Spanish National Police
Image caption பார்சிலோனா தாக்குதலுக்குக் காரணமான வேனை வாடகைக்கு எடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ஆவணத்தில் உள்ள ட்ரிஸ் ஒவ்பக்கீர் என்பவரது புகைப்படம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :