தெற்காசியப் பகுதிகளில் மழை வெள்ளம்: 1.6 கோடி பேர் பாதிப்பு

படத்தின் காப்புரிமை AFP

தெற்காசியப் பகுதிகளில் பருவமழையின் காரணமாக ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தின் காரணமாக 1.6 கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேபாளம், வங்கதேசம், இந்தியா ஆகிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் இந்த வெள்ளத்தின் காரணமாக 500 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் இந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் மிக மோசமான பேரிடர் இது என செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனம் (ஐஎஃப்ஆர்சி) தெரிவித்திருக்கிறது.

இந்த வெள்ளத்தால் உணவுப் பற்றாக்குறை ஏற்படலாமென்றும் நோய்கள் குறித்தும் கவலை ஏற்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA

நேபாளம் மற்றும் வங்கதேசத்தின் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் நான்கு இந்திய மாநிலங்களைச் சேர்ந்த 11 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐஎஃப்ஆர்சியின் பிராந்திய துணை இயக்குனர் மார்ட்டின் ஃபாலெர் தெரிவித்திருக்கிறார்.

இந்த வெள்ளத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தெற்காசிய வெள்ளத்தில் 200க்கும் அதிகமானோர் பலி

"நேபாளம், வங்கதேசம், இந்தியாவைச் சேர்ந்த லட்சக் கணக்கான மக்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் மாசடைந்த நீரால் ஏற்படக்கூடிய நோய்களையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது" என மார்ட்டின் ஃபாலெர் தெரிவத்திருக்கிறார்.

வங்கதேசத்தில் உள்ள ஆறுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளம் பாய்ந்துவரும் நிலையில், பெருக்கெடுத்து ஓடும் இந்திய ஆறுகளின் வெள்ளம் சில நாள்களில் அவற்றில் பாயும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வங்க தேச ஆறுகளின் வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கும்.

படத்தின் காப்புரிமை AFP

நேபாளத்தின் தென்பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும் பண்ணைகளிலும் வெள்ளம் பாய்ந்திருப்பதால் உணவுப் பயிர்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டிருப்பதாக நேபாளத்தின் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்திருக்கிறது. இதனால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம் என அதன் பொதுச் செயலாளர் தேவ் ரத்ன டாக்வா தெரிவித்திருக்கிறார்.

வரும் நாட்களிலும் அந்தப் பிராந்தியத்தில் கனமழை ஏற்படலாம் என கணிக்கப்பட்டிருப்பதால் வெள்ளநிலைமை மேலும் மோசமாகும் என்றும் பாதிக்கப்பட்டவர்களை சென்றடைவது மேலும் கடினமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்