டிரம்பின் வெற்றிக்கு காரணமாக இருந்தவரின் பதவி பறிப்பு

அமெரிக்க வெள்ளை மாளிகையின் முதன்மை கொள்கை வகுப்பாளராக இருந்த ஸ்டீவ் பென்னான் பதவியை பறித்துள்ளார் அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption டொனால்டு டரம்ப் -ஸ்டீவ் பென்னான்

பதவி பறிக்கப்பட்டவுடன், அதிபர் ட்ரம்பின் எதிரிகளுக்கு எதிராகப் போரிடப் போவதாக அறிவித்துள்ளார் அவர்.

ப்ரெய்ட்பார்ட் நியூஸ் என்னும் தமது அதீத பழைமைவாத வலைத் தளத்தின் தலைவர் பதவியை மீண்டும் ஏற்றுக்கொண்ட பென்னான், ட்ரம்பை அதிபராக்கிய கொள்கைகளுக்காகப் போராடவிருப்பதாகவும் கூறினார்.

தம் ஆயுதங்கள் மீது மீண்டும் கை வைத்திருப்பதாகவும், தாம் ஒரு காட்டுமிராண்டி என்றும் கூறியிருக்கிறார் அவர்.

'முதலில் அமெரிக்கா' என்னும் கோஷத்தை வடிவமைக்கக் காரணமாக இருந்த அவர் வெள்ளை மாளிகையின் மிதவாத சக்திகளோடு முரண்பட்டார்.

இனவாதக் கருத்துகள்

செமிட்டிக் இனங்களுக்கு எதிரான, வெள்ளை மேலாதிக்கத்தை வலியுறுத்தும் கருத்துகளை வெளியிட்டதாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.

வெள்ளை மாளிகையின் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பதவி பறிக்கப்படுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ஃபிளின், ஊடகச் செயலாளர் சீன் ஸ்பைசர், தலைமை அலுவலர் ரெயின்ஸ் பிரிபஸ், தகவல் தொடர்பு இயக்குநர் அந்தோனி ஸ்கராமுக்கி ஆகியோர் ஏற்கெனவே ட்ரம்ப் நிர்வாகத்தின்கீழ் பதவி இழந்தவர்கள்.

விர்ஜினியா வன்முறை

விர்ஜினியா மாநிலத்தின் சார்லோட்டஸ்வில்லி என்ற இடத்தில் கடந்த வாரம் தீவிர வலதுசாரிகள் நடத்திய ஊர்வலத்தில் வன்செயல்கள் நடந்ததை அடுத்து பென்னானை நீக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. அப்போராட்டத்தை எதிர்த்தவர்கள் மீது கார் ஏற்றப்பட்டது. அதில் ஒரு பெண் இறந்தார்.

ஆனால், ஆகஸ்ட் 14-ஆம் தேதி தாம் பதவி விலகப்போவதாக ஆகஸ்ட் 7-ஆம் தேதியே அதிபர் டிரம்பிடமும், வெள்ளை மாளிகைத் தலைமை அலுவலர் ஜான் கெல்லியிடமும் தெரிவித்துவிட்டதாகவும், விர்ஜினியா மாநில வன்முறையால் ஏற்பட்ட பரபரப்பால் தாம் பதவி விலகல் முடிவை தாமதப்படுத்தியதாகவும் தி வீக்லி ஸ்டேன்டேர்ட் பத்திரிக்கையிடம் தெரிவித்திருந்தார் பென்னான்.

"நாம் கொண்டுவரப் போராடிய, வெற்றியும் பெற்ற, டிரம்ப் அதிபர் ஆட்சி என்பது முடிந்துவிட்டது. இது வேறு" என்று கூறிய அவர், இந்த ஆட்சியில் இருந்து இன்னும் சிலதை சாதித்துக்கொள்ள முடியும். சில மோதல்கள் நடக்கும். நல்ல நாள்களும் கெட்ட நாள்களும் வரும். ஆனால், நாம் கொண்டுவர விரும்பிய ட்ரம்ப் ஆட்சி முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

பதவி பறிப்புக்குக் காரணம்?

வெள்ளை மாளிகையின் கொள்கை வகுப்பாளர் பதவியை பென்னான் இழந்திருக்கலாம். ஆனால், பென்னானியம் என்று அறியப்படக்கூடிய அவரது கருத்துகள் வெள்ளை மாளிகையில் ஆழப் பதிந்துவிட்டது.

அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றதற்கு உரிய பெருமை பென்னானைச் சேரும் என்று அதிபர் டிரம்ப் அடிக்கடி கூறிவந்தார். ஆனால், அந்த வெற்றிக்கான பெருமையை எடுத்துக்கொள்ள பென்னான் முயற்சித்ததே அவரது பதவி பறிப்புக்குக் காரணம் என்கிறார் பி.பி.சி.யின் வட அமெரிக்க செய்தியாளர் அந்தோனி சுர்ச்சர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :