பிரிவினை: 'குடும்பத்தினர் அனைவரும் பாகிஸ்தானில் நான் மட்டும் இந்தியாவில்'

  • 20 ஆகஸ்ட் 2017

இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடந்த காலகட்டத்தின் நிகழ்வுகள் பற்றிய பிபிசி ஆய்வுத் தொடரின் ஒரு பாகம்.

Image caption அஸ்லம் பர்வேஸ்

பல ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்தபோது, இந்திய மொழிகளின் மையத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் அஸ்லம் பர்வேஸ் எனக்கு மிகவும் பிடித்தமானவர்.

குடும்பங்களை விட்டு, நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால், விடுதியில் தங்கியிருந்த எங்களுக்கு பண்டிகைக் காலங்களில் வீட்டு நினைப்பு ஏக்கமாக கவியும். அப்போது எங்களை வீட்டுக்கு அழைத்து விருந்தளிப்பார் என் விருப்பத்திற்குரிய ஆசிரியர்.

பழைய டெல்லியில் துர்க்மான் கேட் மற்றும் ஜம்மா மசூதிக்கு இடையில் அவரின் வீடு இருந்தது. அவர் வீட்டுக்கு சென்றால் வயிற்றுக்கு மட்டுமல்ல, செவிக்கும் விருந்து கிடைக்கும்.

குடும்பத்தினர் அனைவரும் பாகிஸ்தானுக்கு சென்றனர்

ஒருநாள் பேச்சுவாக்கில் அவரைத்தவிர குடும்பத்தினர் அனைவரும் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டதாக சொன்னதைக்கேட்டு நான் எல்லையில்லா வியப்படைந்தேன்.

உடனே என் மனதின் கற்பனை சிறகடித்துப் பறந்தது. திரைப்படப் பாணியில் சிந்தித்தேன். குடும்பத்தினர் அனைவரும் பாகிஸ்தானுக்கு செல்ல முடிவெடுக்க, இவர் மட்டும் தனது காதலுக்காக குடும்பத்தை பிரிந்து இங்கேயே தங்கிவிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அதைத்தவிர வேறு என்ன காரணம் இருக்கமுடியும்? ஆனால் நிதர்சனம் என்பது நம் கற்பனையை தாண்டியது என்பதை அவரது கதையில் இருந்து புரிந்துக்கொண்டேன்.

அஸ்லம் பர்வேசின் தந்தை டெல்லியில் தங்கிவிட, படித்துக் கொண்டிருந்த பர்வேஸ் தயங்க, அவரது தாய், மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் பாகிஸ்தான் செல்ல முடிவெடுத்தார்.

இவர்களும் மனம் மாறி பாகிஸ்தான் வந்துவிடுவார்கள் என்ற தாயின் நம்பிக்கை பொய்த்துப்போனது என்று அஸ்லம் பர்வேஸ் சொல்கிறார்.

"டெல்லியின் இந்த தெருக்களை விட்டுப்போக எங்களுக்கு மனம் இல்லை" என்கிறார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு அஸ்லம் பர்வேஸ் எழுதிய "ஹமாரி டெல்லி" (எங்கள் டெல்லி) என்ற புத்தகத்தில் இதையும் குறிப்பிட்டுள்ளார்.

"1945-ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போரின் முடிவில், சுதந்திரப் போராட்டம் இன மோதல்களாக மாறியது. 1947-இல் சுதந்திரம் பெற்றபோது இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் கலவரங்கள் வெடித்தன. டெல்லியில் கரோல் பாக், பஹார்கஞ்ச், சப்ஜி மண்டி போன்ற பகுதிகளில் இருந்த முஸ்லிம்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர்."

"பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மட்டும் அல்ல, கலவரங்களால் பாதிக்கப்படாத பகுதிகளில் இருந்த மக்களில் பெரும்பகுதியினரும் முஸ்லிம்கள் வெளியேறி பாகிஸ்தானுக்கு சென்றனர். மறுபுறத்தில், பாக்கிஸ்தானிலிருந்து இந்து அகதிகளின் பெரும் கூட்டமும் டெல்லி வந்தது."

"எங்கள் அக்கம்பக்கத்தை சேர்ந்த 10-12 குடும்பத்தினர் பாகிஸ்தான் செல்ல முடிவெடுத்தார்கள். ஆனால் வாழ்வோ, சாவோ அது இந்தியாவில்தான் என்று என் தந்தை உறுதியாக நின்றார். தொழிற்சாலையை விற்றுவிட்டு, கையில் எடுத்துச் செல்லக்கூடிய பொருட்களை மூட்டை கட்டிக்கொண்டு புறப்படலாம் என்று அனைவரும் அறிவுறுத்தினார்கள்."

"தொழிற்சாலையின் ஒரு ஆணியைக் கூட விற்கமாட்டேன் என்று சொன்ன அப்பா, தாங்க முடியாத துன்பம் வந்தால், யமுனைக்கு சென்று உயிரை விடுவேன், ஆனால் இங்கிருந்து கிளம்ப மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்துவிட்டார்."

'எல்லை மீறிய கலவரங்கள்'

"சுதந்திரம் பெற்ற ஓராண்டிற்குப் பிறகு நிலைமை இயல்புக்கு வந்தபோது, ஆங்கில-அரபு பள்ளி மீண்டும் திறக்கப்பட்டன. கலவரங்கள் பள்ளியின் கட்டடங்களையும் விட்டுவைக்கவில்லை. பள்ளியின் மீதமிருந்த ஒரு கட்டடத்தில் சென்னை ரெஜிமென்ட்டின் ஒரு பிரிவு நிறுத்தப்பட்டது. ஏனெனில் கலகத்தை கட்டுப்படுத்த டெல்லி போலீசால் முடியவில்லை."

"1948-இல் ஆங்கில-அரபுப் பள்ளி திறக்கப்பட்டபோது, அதன் மூன்று கிளைகளில் அஜ்மேரி கேட்டில் உள்ள பிரிவு மட்டுமே திறக்கப்பட்ட்து. 1948-1949-ல் நடைபெற்ற தேர்வுகளில் மாணவர்கள் யாருமே தேர்ச்சி பெறவில்லை."

"டெல்லியில் மீதமிருந்த முஸ்லிம்களின் நிலை மிகவும் மோசமாக இருந்ததே அதற்கு காரணம். மக்களிடையே அவநம்பிக்கையே வியாபித்திருந்தது. ஆனால் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு மாணவர்கள் மீது வேண்டுமென்றே காட்டப்பட்டதாலேயே அனைவரும் தேர்வில் தோல்வியடைந்ததாக சிலர் கருதினார்கள்."

"இனிமேல், டெல்லியில் இருக்கும் முஸ்லிம்களுக்கு கல்வி எட்டாக்கனியாகிவிடும் என்று அவர்களுக்கு பேரச்சம் எழுந்தது. முஸ்லிம் பல்கலைக்கழகமான அலிகரை பலர் தேர்ந்தெடுத்தனர், நானும், கலீக் அஞ்சும் அதையே தேர்ந்தெடுத்தோம் என்றார் அஸ்லம் பர்வேஸ்.

படத்தின் காப்புரிமை Getty Images

பிற்காலத்தில் பிரபல உருது மொழி ஆராய்ச்சியாளராக அறியப்பட்டவர் கலீக் அஞ்சும். அவரது சகோதரியை அஸ்லம் பர்வேஸ் திருமணம் செய்துக்கொண்டார்.

அஸ்லம் பர்வேஸ் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார், "பிரிவினையின் கலவரமான காலகட்டத்திலும் டெல்லியை விட்டு வெளியேறமாட்டேன் என்று திடமாக நின்றார் என் அப்பா. என் மூன்று தம்பிகளையும் கராச்சியில் இருந்த சகோதரியின் வீட்டுக்கு அனுப்பி வைத்த அம்மா, அலிகரில் படித்துக் கொண்டிருந்த எனக்காக காத்துக் கொண்டிருந்தார்…"

"என்னுடைய சுபாவம் ஓரளவு தந்தையுடன் ஒத்துப்போகக்கூடியது. அலிகரில் இருந்து நேராக அம்மாவிடம் வந்தேன். பாஸ்போர்ட், பாகிஸ்தான் விசா என கராச்சிக்கு செல்லத் தேவையான ஏற்பாடுகளை செய்தார் அம்மா"

"அட்டாரி-வாகா எல்லை வழியாக நாங்கள் முதலில் லாகூர் சென்றோம். பிரிவினைக்கு முன்பிருந்தே ஒன்றுவிட்ட சகோதரி, அத்தை என பல உறவினர்கள் அங்கு இருந்தார்கள். நான் லாகூரில் ஒரு வாரம் இருந்தேன். அங்கு தெருக்களில் இருந்த இந்து முஸ்லிம் பெயர்களும், ராவி நதியும், டெல்லியில் இருந்து வந்த மக்களையும் பார்த்தால் டெல்லியில் இருந்ததைப் போன்றே உணர்ந்தேன்…"

'குழந்தைகள் அனைவரையும் முதலில் பாகிஸ்தான் அனுப்பினார்'

"என் அம்மாவின் திட்டப்படி என்னைத் தவிர அவரது குழந்தைகள் அனைவரும் கராச்சி சென்றுவிட்டார்கள். எப்போது வேண்டுமானாலும் கராச்சி செல்ல அனுமதி கிடைக்கலாம் என்ற நிலையில் அம்மா இருந்தார். இறுதியாக விசா கிடைத்த நான் கடைசியாகத்தான் அவர்களுடன் சென்று சேரமுடியும்."

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால் திடீர் திருப்பமாக, "என் மனைவியான கெளஹர் சுல்தான் (அஸ்லம் பர்வேஸ் தாயார்) எனது நான்கு மகன்களைக் கடத்தி, பாகிஸ்தானுக்கு அனுப்பிவிட்டார்" என்று அம்மாவுக்கு எதிராக அப்பா வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

நீதிமன்றத்தில் என் தாயால் வெற்றி பெறமுடியாது என்று தெரியும். ஆனால், நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வருவதற்கு முன்னரே இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டார் அம்மா. நான் மட்டுமே இங்கே தங்கிவிட்டேன்.

"என் தந்தை கான் குடும்பத்தை சேர்ந்தவர் என்றால், தாய் மட்டும் சளைத்தவரா என்ன? அவரும் வீரமான முகலாய மங்கை தானே?"

"இப்போது முகமது அக்பர் கானின் பரம்பரையில் கடைசி தலைமுறையாக அஸ்லம் கான் என்னும் முகம்மது அஸ்லம் என்னும் அஸ்லம் பர்வேஸாகிய நான் மட்டுமே டெல்லியில் இருக்கிறேன்."

இந்தியா-பாகிஸ்தான் என இரு நாடுகளாக பிரித்ததால் பிரிந்தது நாடுகள் மட்டுமா? வீடு-குடும்பம், உற்றார்-உறவினர்கள், கணவர்-மனைவி தாய்-பிள்ளைகள் என குடும்பங்களையும் கூறுபோட்டது.

பாதுகாப்பு எங்கே கிடைக்கும் என்ற தேடல்தானே இதற்கு காரணம் என்று நினைக்கும்போது நெஞ்சம் கனக்கிறது. கற்பனைக் கதைகளைவிட உண்மை நிகழ்வுகள் அதிக உணர்வுப்பூர்வமானவை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்