பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்தே பயப்படவைக்கும் டிரம்பின் அமெரிக்கா!

  • 20 ஆகஸ்ட் 2017

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனல்டு டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, ஓரினச் சேர்க்கையாளர்கள், சிறுபான்மை மதக் குழுக்கள், ஹிஸ்பேனிக்ஸ் எனப்படும் ஸ்பெயின் மற்றும் போர்த்துகீசிய பாரம்பரியத்தை உடைய, லத்தீன் அமெரிக்காவில் இருந்து புலம் பெயர்ந்த மக்கள் என பல தரப்பினர் மீதும் வெறுப்பின் காரணமாக நிகழும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இனவெறிக்கு எதிரான ஒரு போராட்டத்தில் எரிக்கப்படும் டிரம்பின் உருவபொம்மை.

மொட்டைக் கடிதம்

"தேர்தல் முடிந்து விட்டது.. நீங்கள் எல்லா வகையிலும் தோற்றுப் பொய் விட்டீர்கள்," என்று ஜான் கஸ்காட்டின் வீடு அஞ்சல் பெட்டிக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்தது. ஓரினச்சேர்க்கையாளரான அவர் தனது ஆண் நண்பருடன் மூன்று ஆண்டுகளாக செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வசித்து வருகிறார்.

ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவருக்கு வந்த கடிதத்தில், தினமும் அவர் வீட்டில் விளக்குகள் அணைக்கப்படும் நேரம் வரை குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதத்தை அனுப்பியவர், அதே பகுதியில் வசிக்கும் யாரோ ஒருவர்.

படத்தின் காப்புரிமை Valeria Perasso
Image caption ஜான் கஸ்காட்
Image caption ஜான் கஸ்காட் பெற்ற மொட்டைக் கடிதத்தின் ஒரு பகுதி.

"பக்கத்துக்கு வீட்டுக் காரரைப் பார்த்து பயந்து கொண்டே நாங்கள் வாழ வேண்டுமா," என்று கேள்வி எழுப்பும் கஸ்காட், பாதுகாப்புக்காக ஆயுதங்களை வைத்துக் கொள்வது குறித்து பரிசீலித்து வருகிறார்.

இரட்டை இலக்கம்

வெறுப்பின் காரணமாக, அமெரிக்காவின் பெருநகரப் பகுதிகளில் நிகழும் குற்றங்கள் அதிகரிக்கும் சதவிகிதம் இரட்டை இலக்கங்களில் உள்ளது. நியூ யார்க்கில் 24%, சிகாகோவில் 20%, ஃபிலடெல்பிஃயாவில் 50%, அதிகபட்சமாக வாஷிங்டனில் 62% என இவ்வகைக் குற்றங்கள் அதிகரித்துள்ளன, என்று கலிஃபோர்னியா மாகாண பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சமீபத்தில் இனவெறி மோதல் சம்பவம் நடந்த வர்ஜீனியா மாகாணத்தின் சார்லட்ஸ்வில் நகரில் உள்ள ஒரு சுவரில் எழுதப்பட்டிருக்கும் சகிப்புத்தன்மை மற்றும் அன்பைப் போதிக்கும் வாசகங்கள்.

இனவெறியுள்ள கருத்துக்களை பொது இடங்களில் எழுதுவது, யூத மதத்தினரின் கல்லறைகளைச் சேதப்படுத்துவது, ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை அச்சுறுத்துவது, வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்களை மோசமாகத் திட்டுவது என இந்தப் பட்டியல் நீள்கிறது. இந்தக் குற்றங்களில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பவர்கள் இஸ்லாமியர்கள் மற்றும் பாலின சிறுபான்மையினர் ஆகியோர்.

வெறுப்பதற்கு உந்துதல் தந்த டிரம்ப்

அமெரிக்காவில் வசிப்பவர்களின் இனம், மதம், நாடு ஆகியவை கடந்த தேர்தலில் அதிகம் விவாதிக்கப்பட்டதும், அதற்கு கிடைத்த ஊடக வெளிச்சமும் இவ்வைகையான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது தாக்கம் செலுத்தி இருக்கலாம் என்கிறார், வெறுப்பு மற்றும் தீவிரவாதத்தைப் பற்றி ஆய்வு செய்யும், சென்டர் ஃபார் ஹேட் அண்ட் எஸ்ட்ரீமிஸம்-இன் இயக்குனர் பிரையன் லெவின்.

தி சதர்ன் பாவர்ட்டி லா சென்டர் என்னும் அமைப்பு நடத்திய ஆய்வில், நவம்பர் 2016 முதல் பிப்ரவரி 2017 வரை, அமெரிக்கா முழுவதும் பாகுபாடு காரணமாக 1,094 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அக்குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் 37% பேர் டிரம்பின் தேர்தல் பிரசாரம், கொள்கைகள், பேச்சுகள் ஆகியவற்றால் உந்தப்பட்டதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

படத்தின் காப்புரிமை SPLC ©Mapbox/OpenStreetMap
Image caption SPLC அமைப்பால் கண்டறியப்பட்ட அமெரிக்காவில் வெறுப்புவாதக் குழுக்கள் இருக்கும் இடங்கள்.

திங்க்பிரகிரஸ் (ThinkProgress) அமைப்பு அந்த எண்ணிக்கையை 42% என்று கூறுகிறது. அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பில் உள்ள 48 மாகாணங்களில், 2014-இல் 784 ஆக இருந்த இனம், மதம், நாடு ஆகியவற்றின் அடிப்படையில் வெறுப்பை வெளிப்படுத்தும் குழுக்களின் எண்ணிக்கையும் 2016-இல் 917 ஆக அதிகரித்துள்ளது என்றும் அந்த அமைப்பு கூறுகிறது.

வெறுப்பின் காரணமாக, ஆண்டொன்றுக்கு அமெரிக்காவில் நிகழும் குற்றங்களின் எண்ணிக்கை 6,000 என்று எஃப்.பி.ஐ கூறுகிறது. ஆனால், பீரோ ஆஃப் ஜஸ்டிஸ் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் அந்த எண்ணிக்கை 2,50,000 என்கிறது.

காரணம், எல்லா அரசு அமைப்புகளும் எஃப்.பி.ஐ இடம் தங்கள் தரவுகளைப் பகிர்ந்து கொள்வதில்லை.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள கிங் ஆப் பீஸ் மெட்ரோபொலிட்டன் கம்யூனிட்டி சர்ச் எனப்படும் தேவாலயம் தற்போது காவலை அதிகரித்துள்ளது. காரணம், அமெரிக்காவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் இயங்கும் அந்தத் தேவாலயம் பிற நாட்டவர்களையும் அரவணைத்துச் செல்வதுதான்.

'Make America Great Again' என்று டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின்போது பயன்படுத்திய வாசகத்தின் சுருக்கமான 'MAGA' என்பது சில நாட்களுக்கு முன்பு அதன் சுவரில் எழுதப்பட்டிருந்தது.

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் தேவாலயங்கள், வெளிநாட்டவர்களுக்கு குடியேற்ற ஆலோசனை வழங்கும் சட்ட நிறுவனங்கள் என எல்லாமே தாக்குதலுக்கு ஆளாகின்றன.

'புரிந்துகொள்ள மறுப்பவர்கள்'

2002-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து குறைந்து வந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான குற்றங்கள், தேர்தல் முன்னேற்பாடுகள் தொடங்கிய 2015-ஆம் ஆண்டு, முந்தைய ஆண்டை விட 67% அதிகரித்துள்ளது.

அமெரிக்க மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் வெறும் 1% மட்டுமே. ஆனால், அவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் குற்றங்கள், அமெரிக்காவில் ஆண்டொன்றுக்கு நிகழும் குற்றங்களில் 4.4%, என்கிறார் பிரையன் லெவின்.

அமெரிக்காவில் சுமார் ஐந்து லட்சம் சீக்கியர்கள் வசிக்கிறார்கள். நீண்ட தாடியுடன், தலைப்பாகை அணிவதும் அவர்களின் மத வழக்கம். இஸ்லாமிய வெறுப்பாளர்களால், அவர்களும் இஸ்லாமியர்கள் என்றே புரிந்துகொள்ளப்படுகிறார்கள். விளைவு, அவர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

படத்தின் காப்புரிமை Valeria Perasso

மென்பொருள் துறையில் பணியாற்றும் சீக்கியரான சத்ப்ரீத் சிங், "உங்களை அச்சுறுத்துபவர்களை நீங்கள் புரிந்துகொள்ள வைக்க முடியாது. ஏனெனில், அவர்கள் புரிந்துகொள்ள மறுப்பவர்கள். உங்களுக்கு இருக்கும் ஒரே வழி நீங்கள் பாதுகாப்பாக இருப்பதுதான்,"என்கிறார்.

மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பப்படும் என்றும், சட்டவிரோதமாக குடியிலிருப்பவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் டிரம்ப் கூறிய பின்னர், குடியேற்ற அதிகாரிகளிடம் பதிவு செய்யாமல் ஃப்ளோரிடா மாகாணத்திலும் பிற இடங்களிலும் வசிக்கும் ஹிஸ்பேனிக் மக்களும் பாதுகாப்பற்று உள்ளனர்.

படத்தின் காப்புரிமை Candace Shultis
Image caption தேவாலய வாசலில் எழுதப்பட்டிருக்கும் நாஜிக்களின் சின்னம் மற்றும் டிரம்ப் பயன்படுத்திய வாசகத்தின் சுருக்கமான 'MAGA.'

"அவர்களிடம் வேலை வாங்கிவிட்டு, அவர்களுக்கு சேர வேண்டிய ஊதியத்தையும் கொடுக்க மறுப்பவர்கள் உள்ளனர். அவர்கள் பதிவு செய்யாமல் இங்கு வசிப்பதால், நாடு கடத்தப்படும் பயத்தில் குற்றங்களை வெளியில் சொல்வதில்லை," என்கிறார் ஸ்பானிய மொழி பேசும் மக்களுக்கான அதிகாரி ரேமண்ட் கிரோஸ்.

எதிர் வாதங்கள் என்னென்ன?

வெறுப்பின் காரணமாக நிகழும் குற்றங்கள் நீண்ட காலமாகவே அதிகமாக உள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர். 2040-ஆம் ஆண்டு வாக்கில் வெள்ளை இனத்தவர்கள் அமெரிக்காவில் சிறுபான்மையினர் ஆகி விடுவார்கள் என்னும் கணிப்பால், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே அத்தகைய குற்றங்கள் நடப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

பிளேக் லைவ்ஸ் மேட்டர் என்னும் கறுப்பினத்தவர்களின் உரிமைக்கான அமைப்பு கறுப்பின மக்களுக்கு எதிரான குற்றங்கள் காலம் காலமாகவே அதிகமாக உள்ளதாகக் கூறுகிறது.

சிலரோ ஊடங்கங்களும், இடதுசாரி அமைப்புகளும் இந்தச் சம்பவங்களை மிகைப்படுத்திக் கூறுவதாக நினைக்கின்றனர்.

சிறுபான்மை குழுக்களுக்கு உதவ சில குழுக்களும் தொடங்கப்பட்டுள்ளன. ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வழங்குகிறார் ஜான் கஸ்காட். "தாங்கள் நல்ல நிலையில் இருப்பதாக நினைத்த பலரின் எண்ணத்தையும் இந்தத் தேர்தல் மாற்றிவிட்டது. அதுவும் ஒரு வகையில் நல்லதுதான்," என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :