அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆப்கனில் இசை நிகழ்ச்சி நடத்திய பாப் பாடகி

  • 21 ஆகஸ்ட் 2017
ஆப்கானிஸ்தானில் இசை நிகழ்ச்சி நடத்திய பாப் பாடகி ஆரியான சயீத்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாப் பாடகி அர்யானா சயீத் நடத்திய இசை நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு பழமைவாதிகளிடமிருந்து எதிர்ப்பு மற்றும் தாக்குதல் அச்சுறுத்தல்கள் வந்தபோதிலும் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், இந்த அரிய இசை நிகழ்ச்சி காபூலில் நடைபெற்றது.

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி, முதலில் காஜி மைதானத்தில் நடப்பதாக இருந்தது. இதற்காக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.

ஆனால், நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் பாதுகாப்பு குறித்து தங்களால் உத்திரவாதம் அளிக்க முடியாது என அதிகாரிகள் கூறினர்.

நிகழ்ச்சியை நடத்தியே தீர வேண்டும் என பாடகி அர்யானா சயீத் உறுதியாக இருந்ததால், வேறு இடத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

``அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும், இந்நிகழ்ச்சியில் ஆண்களை விட அதிக எண்ணிக்கையிலான பெண்கள் கலந்துகொண்டனர்`` என்கிறார் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பகர் சோஹெய்லி.

பாரம்பரிய பாடல்கள் மற்றும் பாப் பாடல்களை கலந்து பாடும் சயீத்திற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.

அர்யானா சயீத்தின் உடை மற்றும் அவர் பொது நிகழ்வில் கலந்துகொள்வது ஆப்கன் கலாசாரத்தை அவமதிக்கும் விதத்தில் இருப்பதாகக் கூறி, அவருக்குப் பல கொலை மிரட்டல்கள் வந்தன.

``ஆப்கானிஸ்தானில் சிலர் இசைக்கு எதிராக இருப்பதுடன், புதிய வருடம் மற்றும் ஈத் கொண்டாட்டத்திற்கும் கூட எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அவர்களை நாம் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்`` என கூறுகிறார் அர்யானா சயீத்.

``நாமும் மனிதர்கள் தான். இசை,கொண்டாட்டம், சுதந்திர தினம், புது வருடம் இவை எல்லாம் மனிதர்களின் அடிப்படைத் தேவை`` எனவும் கூறியுள்ளார் சயீத்.

இந்நிகழ்ச்சியில் வசூலான பணத்தினை, வடக்கு சார்-இ-புல் மாகாணத்தில் வசிக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப் போவதாக சயீத் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்