இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை : ஜின்னாவின் பங்களா இந்தியாவில் ‘எதிரி சொத்து’

  • 22 ஆகஸ்ட் 2017
படத்தின் காப்புரிமை AFP/Getty Images

அண்மையில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் 70-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ள நிலையில், பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் 11-ஆவது பாகம் இது.

பாகிஸ்தானின் தேசத் தந்தை என்று அழைக்கப்படும் முகம்மது அலி ஜின்னாவை நாட்டு மக்கள் அனைவரும் அன்போடு நினைவுகூர்கின்றனர்.

ஆனால், இந்தியாவை இரண்டாக பிரிப்பதற்கு காரணமானவர் என்பதால் இந்திய மக்கள் அவரை வெறுக்கின்றனர்.

ஆங்கிலேயர்கள், இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க முடிவெடுத்தபோது, முஸ்லிம்களுக்காக தனி நாடு வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர் ஜின்னா.

பிரிவினை என்பது இரு நாடுகளுக்கும் அழிவுக்கு ஒப்பானதாக இருந்தது. லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், கோடிக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்தனர்.

பிரிவினையின் வடுக்கள் இன்னும் மறையவில்லை. 1947-க்கு பிறகு தனது கோரிக்கையான பாகிஸ்தான் நனவானதும் அவர் புதிய நாட்டின் கவர்னர் ஜெனரலாக பாகிஸ்தானுக்கு சென்றுவிட, ஜின்னாவின் பங்களா மும்பையில் இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Sanjoy Majumder/BBC

70 ஆண்டுகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே நிலவும் பல்வேறு பங்காளிச் சண்டைகளில் ஜின்னாவின் பங்களா பற்றியதும் ஒன்று.

ஜின்னா வாழ்ந்த வீட்டை தங்களது சொத்தாக பாகிஸ்தான் கருதுகிறது. பாகிஸ்தான் குடிமக்களின் பார்வையில் ஜின்னாவின் வீடு அவர்களுக்கு புனிதத்தலம்.

ஜின்னா மும்பையில் இந்த வீட்டில் வசிக்கும் போதுதான் பாகிஸ்தான் என்ற எண்ணமும், கோரிக்கையும் ஜின்னாவின் மனதில் எழுந்தது. கோரிக்கையை நிறைவேற்ற போராடினார், வெற்றியும் பெற்றார். எனவே பாகிஸ்தானியர்களுக்கு ஜின்னாவின் இல்லம் மிகவும் முக்கிமானது.

ஆனால், இந்திய மக்களின் பார்வையிலோ, பிரிவினை என்ற சதித்திட்டம் உருவான இடம். இந்தியாவில் `எதிரிச் சொத்து` (Enemy Property) என்று கூறப்படும் ஜின்னாவின் மும்பை பங்களா அரசின் வசம் இருந்தாலும் வெறிச்சோடிக் கிடக்கிறது.

படத்தின் காப்புரிமை Topical Press Agency/Hulton Archive/Getty Images

மும்பை மீது ஜின்னாவின் காதல்

'ஜின்னாவின் பங்களாவை இடித்து தரைமட்டமாக்க வேண்டும்' என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறார் ஒரு அரசியல்வாதி, அவர் மும்பையில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

'இது எதிரியின் சொத்து. நாட்டின் பிரிவினைக்கு காரணமான முகம்மது அலி ஜின்னா இதைக் கட்டினார். பிரிவினையின் போது நிகழ்ந்த கொடூரமான வன்முறைச் சம்பவங்களை இந்த கட்டடம் நினைவூட்டுவதால் இதை இடித்துவிட்டு, இங்கு ஒரு கலாசார மையத்தை உருவாக்கவேண்டும்' என்பது அவரது வாதம்.

மும்பை மீது தீராக்காதல் கொண்டிருந்தார் ஜின்னா. இங்கிலாந்தில் இருந்து வந்ததும், `சவுத் கோர்ட்` என்று பெயரிடப்பட்டிருக்கும் இங்குதான் அவர் தங்கினார். தனது குடும்பத்தினர் வசிப்பதற்கான ஐரோப்பிய பாணியில் அற்புதமான பங்களாவைக் கட்டினார்.

மும்பையின் தெற்குப் பகுதியில் உள்ள மாலாபார் ஹில்ஸ் பகுதியில் கடற்கரைப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த பங்களா, 1930களில் இரண்டு லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது.

படத்தின் காப்புரிமை Keystone/Hulton Archive/Getty Images

கனவு இல்லம்

புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பாளர் கிளாட் பைட்லே வடிவமைத்த இந்த இல்லத்தில் இத்தாலிய பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பான மரவேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன

ஜின்னாவின் இந்த கனவு இல்லத்தை கட்டுவதற்காக இத்தாலியில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற ஆட்களை ஜின்னா வரவழைத்தார்.

பாரிஸ்டராக பணிபுரிந்து வந்த ஜின்னா, மும்பையிலேயே வசிக்கவேண்டும் என்ற எண்ணத்துடனேதான் இந்த வீட்டை ஆர்வத்துடன், மிகுந்த பொருட்செலவில் கட்டியிருப்பார் என்பதை புரிந்துக் கொள்ளமுடிகிறது.

ஆனால், தீவிர அரசியலில் ஈடுபட்டபோது, ஜின்னாவின் கனவுகளும் லட்சியங்களும் மாறிப்போயின. காலப்போக்கில் இஸ்லாமியர்களுக்கு என தனிநாடு வேண்டும் என்று அவரது எண்ணப்போக்கும் மாறிப்போனது.

நாடு இரண்டாக பிரிந்தாலும், அண்டை நாடுகளாக சகோதரர்களாக வசிப்போம் என்று ஜின்னா நம்பினார். மும்பைக்கு வந்து தனது வீட்டில் தங்குவோம் என்றும் அவர் கனவு கண்டார்.

படத்தின் காப்புரிமை Topical Press Agency/Getty Images

நேருவின் ஒப்புதல்

இரு நாடுகளுக்கும் இடையில் வகுக்கப்பட்ட எல்லைக்கோடானது, இரு நாட்டினரிடையே கடலின் ஆழத்தை விட ஆழமான பிரிவை ஏற்படுத்திவிட்டது.

பிரிவினைக்கு பிறகு தன்னுடைய கனவு இல்லத்திற்கு வந்து தங்கலாம் என்ற ஜின்னாவின் ஆசை நிராசையானது.

பிரிவினைக்கு பிறகு ஜின்னா பாகிஸ்தான் சென்றார். தனது பங்களாவை ஐரோப்பியருக்கு வாடகைக்கு விடலாம் என்று ஜின்னா நினைத்தார், அதற்கு நேருவும் ஒப்புக்கொண்டார்.

ஆனால், இதுகுறித்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பே ஜின்னா காலாமாகிவிட்டார். அன்றுமுதல் இன்றுவரை இந்த அழகான பங்களா வெறிச்சோடிக் கிடப்பதோடு, பிரிவினையின் அடையாளமாக மக்களின் மனதில் 'எதிரிச்சொத்தாக' அடையாளம் காணப்படுகிறது.

ஜின்னாவின் மகள் தீனா வாடியா, தந்தையின் சொத்துக்கு உரிமை கொண்டாடினாலும், தற்போது இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது முகம்மது அலி ஜின்னாவின் சவுத் கோர்ட் பங்களா.

மும்பையில், முதலமைச்சரின் இல்லத்திற்கு நேரெதிரே அமைந்திருக்கும் இந்த பங்களா, இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் நினைவுகளை நினைவுப்படுத்தும் நினைவுச்சின்னங்களில் ஒன்று.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்