பார்சிலோனா தாக்குதல்: சந்தேக நபர் சுட்டுக்கொலை

  • 21 ஆகஸ்ட் 2017

பார்சிலோனாவில் கடந்த வாரம் வியாழக்கிழமையன்று மக்கள் கூட்டத்தின்மீது வேனை மோதி தாக்குதல் நடத்திய யூனஸ் அபய்ஹோகோப் என்பவரை சுட்டுக்கொன்றிருப்பதாக ஸ்பெயின் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த போலீசார், பார்சிலோனோ நகரின் மேற்குப் புறத்தில் வெடிகுண்டு பட்டை அணிந்திருந்த நிலையில் அவரை சுட்டுக் கொன்றதாக ஸ்பெயின் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சுபிரேட்ஸ் பகுதியில் சாலை ஒன்றில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்தது.

முன்னதாக, லாஸ் ராம்ப்ளாஸில் மக்கள் கூட்டத்தில் வேனை மோதச்செய்து 13 பேரை கொன்ற 22 வயதான யூனஸ் அபய்ஹோகோப் தேடப்பட்டு வருவதாக போலீசார் உறுதி செய்திருந்தனர்.

போலீசாரின் தாக்குதலுக்கு இலக்கான நேரத்தில், யூனஸ் அபய்ஹோகோப் 'அல்லாஹூ அக்பர்' என்று முழங்கியதாக போலீசாரை மேற்கோள்காட்டி ஊடகங்கள் கூறுகின்றன.

கடந்த வாரம் பார்சிலோனாவில் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து 25 மைல்கள் தொலைவில் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பெட்ரோல் நிலையம் ஒன்றின் அருகே அபய்ஹோகோப் போன்று தோற்றமளிக்கும் நபர் காணப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் படையினரும் இந்த நடவடிக்கையில் கலந்துக்கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர் கூட்டத்தின்போது, மக்கள் கூட்டத்தின்மீது வேனை மோதி, தாக்குதல் நடத்திய யூனஸ் அபய்ஹோகோப், பிறகு இறங்கி ஓடிச் சென்று, வாகன ஓட்டி ஒருவரை கொன்று அவருடைய வாகனத்தை கடத்தி தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் யூனஸ் அபய்ஹோகோப் நடந்து சென்றது பதிவாகியிருந்த அந்தப் பகுதியின் சி.சி.டி.வி காட்சிகளை ஊடகங்கள் ஒளிபரப்பின.

படத்தின் காப்புரிமை CATALAN POLICE/EL PAIS

லாஸ் ராம்ப்ளாஸில் தாக்குதல் நடத்திய அபய்ஹோகோப் நகரத்தின் யூனிவர்சிட்டி மாவட்டத்திற்கு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.

அபய்ஹோகோப் காரை கடத்திய பிறகு, காவல்துறை சோதனைச் சாவடிகளின் வழியாகச் சென்றதாகவும், பிறகு அந்த வாகனத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டது.

மேலும் அவர் பிரான்சுக்கு சென்றிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்திருந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்