மனித கறி உண்பதாகக் கூறி போலீஸிடம் பிடிபட்ட தென்னாப்பிரிக்கர்கள்

எஸ்ட்கோர்ட் நகர வரைபடம்

மனிதக்கறி உண்டு அலுத்துப் போய்விட்டதாக போலீசாரிடமே சொல்லி, நான்கு பேர் வசமாக மாட்டிக் கொண்டார்கள்.

முதலில் ஒருவர், போலீசாரிடம் சென்று தனது கவலையைச் சொன்னார். இதனால், அவரது நண்பர்களும் சிக்கிக் கொண்டார்கள்.

தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த நால்வரும் கைது செய்யப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நபர் வசம் இருந்த மனித உடல் பாகங்களான கை மற்றும் காலை காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

அந்த நபரை அழைத்துக் கொண்டு க்வாசுலு-நடால் பகுதியில் உள்ள அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற காவல் துறையினர், அங்கு மேலும் பல மனித உடல் பாகங்களை கண்டறிந்தனர்.

இது தொடர்பாக பாரம்பரிய மருத்துவர்கள் இருவர் உள்ளிட்ட நால்வரை கைது செய்துள்ள காவல் துறையினர், அவர்கள் மீது கொலை மற்றும் கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அவர்கள் நால்வரும் டர்பனிலிருந்து 175 கிலோ தொலைவிலுள்ள எஸ்ட்கோர்ட் நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

22 வயதிலிருந்து 32 வயதிற்குட்பட்ட இந்த நால்வரும், இந்த கொலைக் குற்றத்தில் கூட்டணியாக செயல்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர், பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த வழக்கு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எஸ்ட்கோர்ட் நகருக்கு அருகிலுள்ள பகுதிகளில் தங்களின் உறவினர்கள் யாராவது காணாமல் போயிருந்தால் தகவல் தெரிவிக்குமாறும் மக்களிடம் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்டுள்ள மனித உடல் பாகங்களை ஆய்வு செய்ய தடயவியல் குழு ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாகங்கள் ஒரு மனித உடலைச் சேர்ந்ததா அல்லது பல மனித உடல்களைச் சேர்ந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஒரு மாதத்திற்கு முன்னர், இந்த பிராந்தியத்தில் மிகப்பெரிய நகரான டர்பனில், மனிதத் தலையை தனது கைப்பையில் மறைத்து வைத்திருந்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார் .அவர் அந்த மனிதத் தலையை பாரம்பரிய மருத்துவர் ஒருவரிடம் விற்க முயற்சி செய்ததாக கூறப்பட்டது.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்