பென்குயின்களை பாதுகாக்க இரும்பு சுரங்க அகழ்வை நிராகரிக்கும் சிலி

அழிவின் விளிம்பிலுள்ள பென்குயின்கள் உள்பட கடல்வாழ் உயிரினங்களுக்கு அபாயகரமானது என ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள சுரங்க அகழ்வுப் பணித்திட்டத்தை சிலி நாட்டு அரசு நிராகரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

'அன்டர்ஸ் அயன்' என்கிற சிலி நிறுவனம் ஒன்று, நாட்டின் வடக்கு பகுதியிலுள்ள கோகிம்போ பகுதியில் மில்லியன் கணக்காக டன் இரும்பை அகழ்ந்து எடுக்கவும், புதிய துறைமுகத்தை கட்டியமைக்கவும் விருப்பம் தெரிவித்திருந்தது.

இந்தப் பணித்திட்டம் போதுமான சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான உறுதியை வழங்கவில்லை என்று அந்நாட்டு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

சிலி நாட்டின் ரம்போல்ட் பாதுகாக்கப்பட்ட காடுகளை உருவாக்கும் தீவுகளுக்கு மிகவும் அருகில் கோகீம்போ உள்ளது.

உலகிலேயே ஹம்போல்ட் பென்குயின்கள் மற்றும் நீல திமிங்கலம், செதில் திமிங்கலம், கடல் நாய்கள் என அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள 80 சதவீத உயிரினங்களின் தாயகமாக இந்தப் பகுதி விளங்குகிறது.

இது பற்றி சுற்றுச்சூழல் அமைச்சர் மார்செலோ மினா கருத்துத் தெரிவிக்கையில், "நான் வளர்ச்சியை உறுதியாக நம்புகிறேன். ஆனால், இந்த வளர்ச்சி எமது சுற்றுச்சூழலை அழித்துவிட்டு அல்லது சுகாதரத்திற்கோ, உலகிலேயே தனிசிறப்புமிக்க சுற்றுச்சூழல் பகுதிகளுக்கோ ஊறுவிளைவித்து பெற்றுக்கொள்வதாக இருக்கக்கூடாது" என்று தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர்கள் குழுவின் இந்த முடிவு, தொழில்நுட்ப அடிப்படையிலும், அரசியல் சார்பில்லாமல் 14 நிறுவனங்கள் அளித்த சான்றுகளின் அடிப்படையிலும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.

சுரங்க அகழ்விற்கும், சிலி நாட்டுக்கும் இந்த முடிவு மோசமானது என்று சிலியின் தேசிய சுரங்க அகழ்வு நிறுவனத்தை மேற்கோள்காட்டி ஸ்பெனிஷ் செய்தி நிறுவனமான, இஃபே செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக 'அன்டர்ஸ் அயன்' நிறுவனம் மேல்முறையீட்டு வழக்கு தொடுக்கலாம்.

அரசியல்வாதிகளிடமும். பொது மக்களிடமும் அதிகரித்து வருகின்ற சுற்றுச்சூழல் தொடர்பான ஆர்வங்களால், சமீபத்திய ஆண்டுகளில் சிலியில் அனுமதி பெறுவதற்கு சரங்க அகழ்வு நிறுவனங்கள் மோசமாக நிலைமைகளை சந்தித்து வருவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்