உலகின் வேகமான ரயிலை மீண்டும் களம் இறக்கியது சீனா

உலகின் வேகமான ரயிலை மீண்டும் களம் இறங்கிய சீனா படத்தின் காப்புரிமை Getty Images

உலகிலேயே அதிவேக ரயில்களை கொண்ட நாடாக மீண்டும் மாறவிருக்கிறது சீனா.

2011-ம் ஆண்டு இரண்டு ரயில் விபத்துகளில் 40 பேர் கொல்லப்பட்டதை அடுத்து அந்நாட்டு புல்லட் ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 300 கிலோ மீட்டர் ஆகக் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், அடுத்த வாரத்தில் இருந்து சில ரயில்கள், மீண்டும் அதிகபட்சமாக மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்ல அனுமதிக்கப்படும்.

இந்த அதிகபட்ச வேகம் பெய்ஜிங்- ஷாங்காய் இடையிலான பயண நேரத்தில் ஒரு மணி நேரத்தைக் குறைக்கும்.

செப்டம்பர் 21 முதல், உயர்த்தப்பட்டுள்ள அதிகபட்ச வேகத்தில் பயணிக்க ஏழு புல்லட் ரயில்களுக்கு அனுமதியளிக்கப்படும்.

அதிக வேக ரயில் சேவை மீண்டும் வருவதைக் குறிக்கும் விதமாக, அரசின் முழக்கத்துக்கும், வளர்ச்சித் திட்டத்துக்கும் ஏற்ப, இந்த ரயில்களுக்கு ``ஃபக்ஸிங்`` (புத்துயிர் எனப் பொருள்படும் சீனச் சொல்) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2011-ம் ஆண்டு நடந்த அதி வேக புல்லட் ரயில் விபத்து.

அனைத்து ரயில்களிலும் மேம்பட்ட கண்காணிப்பு அமைப்பு பொருத்தப்பட்டு வருகிறது. ஏதேனும் ஓர் அவசர நிகழ்வின் போது இந்த கண்காணிப்பு அமைப்பு ரயிலின் வேகத்தைக் குறைத்து, தானாக ரயிலை நிறுத்தும்.

ரயிலை மணிக்கு 400 கி.மீ., வேகத்தில் இயக்குவதற்குத் தோதாக ரயில் பாதையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை சீன ரயில்வே திட்டமிட்டு வருவதாக நம்பப்படுகிறது.

சீனா 19,960 கி.மீ., தூரத்துக்கு அதி வேக ரயில் பாதைகளைக் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது.

2011-ல் அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து, ரயில்வே அமைச்சகம் மீது நடத்தப்பட்ட விசாரணையில் அங்கு ஊழல் புரையோடியது அம்பலமானது.

இந்த விசாரணையின் விளைவாக பல அதிகாரிகள் மீது ஊழல், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இரண்டு மூத்த அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்