கருணாநிதியை சந்தித்தார் வைகோ; முரசொலி விழாவில் பங்கேற்பதாக அறிவிப்பு

தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்த வைகோ

உடல்நலமின்றி வீட்டில் ஓய்வெடுத்துவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முரசொலி பவளவிழா மாநாட்டில் பேசப்போவதாகவும் வைகோ தெரிவித்திருக்கிறார்.

செவ்வாய்க்கிழமையன்று மாலை சுமார் எட்டு மணியளவில் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு வைகோ தன் கட்சி நிர்வாகிகளுடன் வருகைதந்தார். அவரை, தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், துரை முருகன், கனிமொழி உள்ளிட்டவர்கள் அழைத்துச் சென்றனர்.

கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தன்னை முதன் முதலில் வைகோ என்று அழைக்க ஆரம்பித்தவர் கருணாநிதிதான் என்று குறிப்பிட்டார். அரசியலில் தன்னை எப்படி கருணாநிதி வளர்த்தெடுத்தார் என்பதையெல்லாம் நினைவுகூர்ந்த வைகோ, தற்போது கருணாநிதியைச் சந்தித்தபோது தன் கையை அவர் பிடித்துக்கொண்டு விடவேயில்லை என்று தெரிவித்தார்.

தான் நெகிழ்ந்துபோய் அழுததாகவும் அதைப் பார்த்து கருணாநிதியின் கண்களிலும் கண்ணீர் வந்ததாகவும் தெரிவித்த வைகோ, தான் போய்விட்டு மீண்டும் வருவதாகச் சொன்னதும் புன்னகைத்ததாகத் தெரிவித்தார்.

தன்னிடம் கருணாநிதி பேச முயன்றதாகவும் ஆனால், கழுத்தில் ட்ராக்யோஸ்டமி குழாய் பொருத்தப்பட்டிருப்பதால் அவரால் பேச முடியவில்லை என்றும் கூறினார்.

கடந்த இரண்டு மாதங்களாக தன்னுடைய கனவில் தினமும் கருணாநிதி வருவதாகவும் அது ஏனென்று தனக்கு புரியவில்லையென்றும் வைகோ கூறினார்.

இந்தச் சந்திப்பின்போது, செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் முரசொலி பவளவிழா மாநாட்டில் கலந்துகொண்டு பேச வேண்டுமென மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாகவும் தான் அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் வைகோ தெரிவித்தார். இந்தத் தகவலைக் கேட்ட கருணாநிதி மீண்டும் புன்கைத்ததாகவும் வைகோ கூறினார்,

விரைவில் கருணாநிதி குணமடைந்து உரையாற்றுவார் என்று நம்புவதாகவும் வைகோ தெரிவித்தார்.

கடந்த ஆண்டின் பிற்பகுதியிலிருந்தே தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இதற்கு முன்பாக, கடந்த டிசம்பர் 17ஆம் தேதியன்று உடல் நலமின்றி காவிரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த கருணாநிதியைப் பார்ப்பதற்காக வைகோ வந்தபோது, தி.மு.க. தொண்டர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவரது கார் மீதும் தாக்குதல் நடத்தினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்