இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை: பொன் ஆரம் முதல் யானை வரை தப்பவில்லை!

  • 23 ஆகஸ்ட் 2017

சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவும் பாகிஸ்தானும் வெவ்வேறு நாடுகள் இல்லை. பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றபோது ஒரு நாடு இரண்டு துண்டுகளானது.

படத்தின் காப்புரிமை Archaeological Survey of India and Getty Images
Image caption மொகெஞ்சதாரோ அகழ்வாராய்ச்சியில் கிடைத்த புராதன ஆபரணத்தின் ஒரு பகுதி இந்தியாவில், மறுபகுதி பாகிஸ்தானில்.

இரு நாடுகளின் கலை, கலாசாரம், பாரம்பரியம் அனைத்தும் ஒன்றாக இருந்தன. சொத்துக்களும் ஒன்றாகவே இருந்தன.

பிரிவினையின்போது ஒரு நாடு, இரு நாடுகளாக மாற, நிலங்களும், பிராந்தியங்களும் பிரிக்கப்பட வேண்டியது அவசியமானது. எல்லைகள் வகுக்கப்பட்டன, சொத்துக்கள் பங்குபோடப்பட்டன.

பிரிவினையின்போது ஊசி, பென்சில், நாற்காலிகள், அரசின் வசமிருந்த கால்நடைகள் என அனைத்தும் விகிதாசாரப்படி பிரிக்கப்பட்டன.

மொகெஞ்சதாரோ - நாகரிகத்தின் சாட்சி

பிரிக்கப்பட்ட சொத்துக்களில் வரலாற்று பாரம்பரியம் மிக்க பொருட்களின் பாகப்பிரிவினையைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்.

சிந்து சமவெளி நாகரிகத்தின் மையப்புள்ளியான மொகெஞ்சதாரோ அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட புராதன ஆபரணத்தைப் பிரிப்பது பற்றிய சர்ச்சையும் எழுந்தது.

1920 இல் பிரிக்கப்படாத இந்துஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான மொகெஞ்சதாரோ நகரம் கண்டுபிடிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

மனித நாகரிகத்தை அறிந்துகொள்ளப் பேருதவியாக இருந்த இந்தக் கண்டுபிடிப்பு சிந்து சமவெளி நாகரிக காலத்தைச் சார்ந்தது என்று கண்டறியப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சியில் அடிமையாக இருந்த இந்துஸ்தான், எகிப்து, கிரேக்கம் மற்றும் சீனாவின் நாகரிகங்களைப் போன்றே ஆயிரக்கணக்கான ஆண்டுகள் புராதனமானது என்பதை இந்த அகழ்வாய்வு நிரூபித்தது.

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு எழுதிய 'டிஸ்கவரி ஆஃப் இண்டியா' புத்தகத்தில் மொகெஞ்சதாரோ பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.

மொகெஞ்சதாரோ, ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய நாகரிகத்திற்கு சாட்சியாக இருந்திருப்பதை குறிப்பிடும் நேரு, அது காலப்போக்கில் மாறியிருப்பதாகக் கூறுகிறார்.

அகழ்வாய்வில் கிடைத்த அற்புதங்கள்

நடனமாடும் பெண்ணின் சிலை, தியானம் செய்யும் பூசாரியின் உருவச்சிலை உட்பட ஆயிரக்கணக்கான பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன என்றாலும் அவை எதுவும் முழுமையானதாக இல்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

அகழ்வில் கிடைத்த பொருட்களில் ஒன்று பொன்னாலான ஆரம். இந்த ஆபரணம் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டு பொன்னால் உருவாக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த இந்த ஆபரணம் மட்டுமே முழுமையானதாக இருந்த்து.

மொகெஞ்சதாரோ அகழ்வில் குறைந்த அளவு ஆபரணங்களே கிடைத்தது என்றும், அதில் இந்த பொன்மாலை மட்டுமே மிகவும் மதிப்பு வாய்ந்தது என்கிறார் இந்திய வரலாற்று ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான சுதேஷ்னா குஹா.

இந்தப் பொன்னாபரணம் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஒரு தாமிரப் பாத்திரத்தினுள் இருந்தது. அது ஒரு பொற்கொல்லரின் வீட்டிலிருந்து கிடைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சிந்து சமவெளி நாகரிகம் கண்டறியப்பட்டது இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது என்று கூறும் அவர், இந்தியாவின் நீண்ட நெடும் பாரம்பரியத்தை இது உலகத்திற்கு உணர்த்துவதாகச் சொல்கிறார்.

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் புராதன பொருட்களின் ஆய்வுகளில் நிபுணரான வஜீரா ஃபஜீலா ஜமீந்தர், சிந்து சமவெளி நாகரிகம் இந்தியாவின் தொன்மையை அதன் நாகரிகத்தை உணர்த்துகிறது என்கிறார்.

படத்தின் காப்புரிமை Alamy

ஆனால்1947-இல் இந்துஸ்தான் என்ற நாடு, இந்தியா-பாகிஸ்தான் என இரண்டாக பிரிக்கப்பட்டபோது, பல நூற்றாண்டுகளாக சகோதரர்களாக இருந்து, பங்காளியானவர்களிடையே பாகப்பிரிவினைக்கான சண்டையும் மூண்டது.

சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 60 வாத்துகள் கூட பாகப்பிரிவினை செய்யப்பட்டன.

யானையும் பிரிவினைக்கு விலக்கல்ல

வனவிலங்குகளில் ஜாய்முனி என்ற ஒரு யானை கிழக்கு வங்காளத்துக்கு கொடுக்கப்பட்டதற்கு இந்திய மக்களில் சிலர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த யானையின் பாகனோ இந்தியாவில் தங்கப்போவதாக முடிவெடுத்தார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பிரிவினை ஒரு இளஞ்ஜோடிகளின் காதலையும் பிரித்தது.

பிரிவினையின்போது இப்படி பலவிதமான உடமைகளும் சொத்துக்களும் பிரிக்கப்பட்டன, சர்ச்சைகளும் வெடித்தன.

உதாரணமாக, வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து 21 வகையான தட்டச்சு இயந்திரங்கள், 31 பேனா ஸ்டாண்டு, 16 தலையணைகள், 125 காகித பெட்டிகள், 31 நாற்காலிகள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டன.

படத்தின் காப்புரிமை Getty Images

இது ஒரு சிறிய உதாரணம்தான். உண்மையில், நாட்டின் பிரிவினைக்குப் பிறகு பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரமாக இருந்த டெல்லி சுதந்திர இந்தியாவின் தலைநகரமாக மாறியது.

ஆனால், ஒரு மாகாணத்தின் தலைநகராக இருந்த கராச்சி பாகிஸ்தானின் தலைநகராகியது. அங்கு ஒரு நாட்டுக்கு தேவையான அலுவலகங்களோ, அரசு நிர்வாகத்திற்கு தேவையான பொருட்களோ இல்லை.

புதிய நாடாக உருவான பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு தேவையான காகிதம், கோப்புகள், பேனா, எழுதுபொருள்கள் போன்ற அடிப்படை பொருட்களை பெறுவதற்கே சிக்கல்களை எதிர்கொண்டது.

பேனா-பென்சில்கள், போன்ற பொருட்களைப் பகிர்ந்து கொண்டபோது, விலைமதிப்பற்ற பொருட்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிற பொருட்கள் பிரிக்கப்படாமல் இருந்திருக்குமா?

எந்தவொரு நாடாக இருந்தாலும், அதற்கு வரலாறு முக்கியமானது. ஆனால் இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு நாடுகளின் வரலாறும், பாரம்பரியமும் ஒன்று, அதை எப்படி பிரிப்பது?

நாடு பிரிக்கப்பட்டபோது, சிந்து சமவெளி நாகரீகத்தின் மையமான மொகெஞ்சதாரோ பாகிஸ்தானின் பாகத்தில் போய்விட்டது. இதர பிற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இந்தியாவின் பாகத்தில் வந்துவிட்டன.

படத்தின் காப்புரிமை Getty Images

பாகிஸ்தானுக்கு வேறு எந்த முக்கியமான சரித்திர பிரசித்தி பெற்ற இடமும் இல்லாததால், சிந்து சமவெளி நாகரிகத்தின் அடையாளம் தனக்கு மட்டுமே சொந்தமானது, இந்தியாவுக்கு சொந்தம் அல்ல என்று பாகிஸ்தான் நிரூபிக்க விரும்புகிறது.

பிரிவினைக்கு பிறகு, சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தை மறுபரிசீலனை செய்வதற்கான முயற்சிக்கு பாகிஸ்தான் முக்கியத்துவம் கொடுத்தது என்று வரலாற்று ஆசிரியரான வஜிரா ஜமீந்தர் கூறுகிறார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த கதை(காணொளி)

அதனால்தான் பிரிவினைக்கு பிறகு, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தான் என்று இல்லாத ஒரு வரலாற்றை எழுத அந்நாடு முயற்சியை மேற்கொண்டது.

யாருக்கு என்ன கிடைத்தது?

நாட்டைப் பிரிக்கும்போது, மொகஞ்சதாரோவில் கிடைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களும் பிரிக்கப்பட்டன என்கிறார் சுதேஷ்னா குஹா.

பொருட்களை பிரிக்கும்போது, இந்தியாவிற்கு 60 சதவிகிதம், பாகிஸ்தானுக்கு 40 சதவிகிதம் என்ற விகிதாச்சாரம் கையாளப்பட்டது. நடனமாடும் பெண்ணின் சிலை, தியானம் செய்யும் பூசாரியின் சிலை, தங்க ஆரம் ஆகியவை இதில் அடங்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images

நடனப் பெண்மணியின் சிலை இந்தியாவிற்கும், தியானம் செய்யும் பூசாரியின் சிலை பாகிஸ்தானுக்கும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், தங்க ஆபரணத்தை பிரிக்கும்போது சிக்கல் எழுந்தது.

தங்க ஆபரணத்தை பிரிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படவேயில்லை, எனவே நாட்டை பிரித்ததுபோலவே, தங்க ஆபரணத்தையும் பிரிக்கலாம் என அதிகாரிகள் முடிவெடுத்தனர்.

ஒன்றாக இருந்த பொன்னாராம் இரு துண்டாக்கப்பட்டு, இரு துண்டாக பிரிக்கப்பட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டன. இந்தியாவின் பங்குக்கு கிடைத்த ஆபரணத்தின் ஒரு பகுதி டெல்லியின் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பிரிவினையின் சோகங்களில் ஒன்றாக இதை குறிப்பிடும் சரித்திர ஆசிரியர் குஹா, இதுகுறித்து யாருக்கும் சங்கடம் ஏற்படாதது துரதிருஷ்டமே என்கிறார்.

ஒருமுறை அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் இந்த ஆபரணத்தின் இரு துண்டுகளையும் ஒன்றாக சேர்த்துவைத்து காட்சிப்படுத்தலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு இந்தியா ஒப்புக்கொள்ளவில்லை.

சிந்து சமவெளி நாகரிகத்தின் எச்சமான ஒரு பொன் ஆபரணம் இரு துண்டுகளாக இரு நாடுகளுக்கு பாகப்பிரிவினை செய்யப்பட்டது காலத்தின் கோலம் என்றால், ஒரு நாடு மதத்தின் அடிப்படையில் இரண்டாக பிரிக்கப்பட்டது காலத்தின் கோணலா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்