வட கொரியாவுக்கு உதவிய ரஷ்ய, சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை

வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டத்துக்கு உதவியதாக தான் குற்றம்சாட்டும் ரஷ்ய மற்றும் சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அணு ஆயுதத் திட்டத்தை தற்காப்பு என்று வட கொரியா கூறுகிறது.

ஏற்கனவே பல தடைகளுக்கு ஆளாகியுள்ள வட கொரியாவுக்கு எதிராக மேலும் புதிய தடைகளை விதிக்க ஐ.நா பாதுகாப்பு அவை ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் பாதுகாப்பு அவையில் அங்கம் வகிக்கின்றன.

இந்த நடவடிக்கைகள் வட கொரியா மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் என்று அமெரிக்கா கூறினாலும், இதனால் சீனா கோபமடைந்துள்ளது.

இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன், வட கொரியா சமீப நாட்களில் 'ஓரளவு கட்டுப்பாட்டுடன்' நடந்து கொள்வதாகப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

"ஐ.நா பாதுகாப்பு அவையில் வட கொரியாவிற்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட பின்னர், வட கொரியத் தரப்பில் இருந்து ஏவுகணை சோதனைகளோ தூண்டிவிடும் செயல்களோ இல்லை," என்று அவர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமெரிக்க - தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சியை வட கொரியா எதிர்க்கிறது.

விரைவில் இரு தரப்பும் பேச்சு வார்த்தையில் ஈடுபட இது வழிவகுக்கக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தனிமைப்படுத்துதல்

அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினரின் சொத்துக்களை நிர்வகிப்பதற்கான அலுவலகம், பத்து நிறுவனங்களுக்கும், ஆறு தனி நபர்களுக்கும் இந்தத் தடையை விதித்துள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வட கொரிய ராணுவத்தின் முழுத்திறனை நீங்கள் பார்த்ததுண்டா?

"அமெரிக்காவின் நிதி அமைப்பில் இருந்து வட கொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை ஆதரிப்பவர்களைத் தனிமைப்படுத்துவதன் மூலம், வட கொரியா மீது அமெரிக்கக் கருவூலம் அழுத்தத்தை அதிகரிக்கும்," என்று அமெரிக்க நிதிச் செயலர் ஸ்டீவன் மனூஷின் கூறியுள்ளார்.

இதன்மூலம், தடை செய்யப்பட்ட ரஷ்ய மற்றும் சீன நாடுகளைச் சேர்ந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் அமெரிக்கர்கள் தொழில் தொடர்பு எதுவும் வைத்துக்கொள்ள முடியாது. இத்தடைக்கு உடனடியாக எதிர்வினையாற்றிய சீனா "அமெரிக்கா தமது தவறை உடனடியாக சரி செய்துகொள்ளவேண்டும்" என்று கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை North Korea
Image caption வட கொரியாவின் பிரசாரக் காணொளி

வட கொரியா சமீபத்திய மாதங்களில் செய்த ஏவுகணை சோதனைகள் மற்றும் ஆறாவது முறையாக அணு ஆயுத சோதனை செய்யப்படும் என்ற அச்சுறுத்தல்கள் ஆகியவை அந்நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் மோதலை அதிகரித்தது. அமெரிக்கா தென் கொரியாவுடன் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் கூட்டு ராணுவப் பயிற்சிகளால் வட கொரியாவும் கோபத்தில் உள்ளது. அமெரிக்கப் பிராந்தியமான குவாம் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக வட கொரியா கூறியிருந்தது.

வட கொரியா செவ்வாயன்று வெளியிட்டிருந்த ஒரு பிரசாரக் காணொளியில், குவாமில் உள்ள ஒரு கல்லறையில் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்பின் படம் இருப்பதுபோல காட்டப்பட்டது. துணை அதிபர் மைக் பென்ஸின் படமும், அக்காணொளியில் புகை மூட்டத்தின் நடுவே காட்டப்பட்டது.

டில்லர்சன் வட கொரியாவைப் பாராட்டி, இணக்கமான முறையில் கருத்து தெரிவித்திருந்தாலும், ஜெனீவாவில் ஐ.நா சார்பில் நடைபெற்ற ஒரு ஆயுதக் குறைப்பு மற்றும் தவிர்ப்பு பற்றிய மாநாட்டில் கலந்துகொண்ட வட கொரியாவின் பிரதிநிதி, "தங்கள் நாட்டைத் தற்காத்துக்கொள்வதற்கான நியாயமான வழி" என்று அந்நாட்டின் ஆயுத திட்டங்களைப்பற்றிக் கூறினார்.

"அமெரிக்காவின் எதிர்ப்புணர்வு மிக்க கொள்கைகளும், அணு ஆயுத அச்சுறுத்தல்களும் இருக்கும் வரை, கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (வட கொரியா) அணு ஆயுதத் தவிர்ப்புப் பேச்சுவார்த்தைக்கு வராது. தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கான அணு ஆயுத வல்லமைகளை வலுப்படுத்துவதில் இருந்து பின்வாங்காது," என்றும் அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: