ஏமனில் உணவு, மருந்து தட்டுப்பாடு: பெரும் துயரத்தில் குடிமக்கள்

அழுகின்ற குழந்தை

ஏமனில் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிற பேரழிவு ஏற்படுத்தியிருக்கும் போரால் உணவு மற்றும் மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை அந்த நாட்டு அன்றாட வாழ்வில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது,

பிபிசியின் நவால் அல்-மக்ஹாஃபி ஏமனில் பயணம் மேற்கொண்டு அங்கு நிலவும் கடும் துன்பங்களை நேரில் கண்டு பதிவு செய்துள்ளார்.

தன்னுடைய குழந்தையை காப்பாற்றுவதற்கு குறைவான நேரமே உள்ளது என்பதை அறிந்திருக்கும் ஒரு தாய் நம்பிக்கை இழந்து ஓடுவதைபோல சமிரா அந்த பள்ளிக்குள் ஓடினாள்.

அந்த பள்ளி தற்போது காலராவுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக செயல்பட்டு வருகிறது.

இந்த இடத்தை வந்தடைவதற்கு பல கிலோமீட்டர் தூரம் நடந்தே வர வேண்டியிருந்தது. நடந்து வருவதை தவிர செலவு செய்து இந்த இடம் வருவதற்கு சமிராவுக்கு வசதியில்லை.

Image caption உணவு பற்றாக்குறை அதிக குழந்தைகள் கலரா தொற்றுக்குள்ளாக செய்துள்ளது

தன்னுடைய 18 மாத குழந்தையான ஒர்ஜோவான் கிடத்தப்பட்டிருந்த சிகிச்சை அளிக்கும் மேசையில் மோதிய அவர், தன்னுடைய குழந்தையை காப்பாற்றுமாறு மன்றாடுவதை பிபிசி செய்தியாளரால் பார்க்க முடிந்தது.

அவரது விழிகள் அவர் நம்பிக்கை இழந்து இருப்பதை மட்டுமல்ல, அவர் எல்லா முயற்சிகளையும் எடுத்து களைத்துவிட்டார் என்பதை தெளிவாக காட்டின.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சமிராவின் வாழ்க்கை தளராத, நிறைவு பெறாத போராட்டமாகவே இருந்தது.

விலா எலும்புகள் வெளியே தெரியும் அளவுக்கு மெலிந்து இருந்த சமிராவின் மகள், அவளுடைய வயது குழந்தைகளை விட பாதி அளவுடையவராக இருந்தார்.

இந்த சிகிச்சை மையத்தை வந்தடைவதற்காக. சமிராவும் அவரது குடும்பமும் இடம்பெயர்வு, பஞ்சம், காலரா ஆகிய போரின் மிக பெரிய பேரழிவுகளை சந்தித்து, உயிர் வாழ்ந்து வர வேண்டியதாயிற்று.

ஏறக்குறைய 3 மில்லியன் ஏமானிய மக்களை போல, சமிராவும் அவரது குடும்பமும் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழ்ந்து வருபவர்கள்.

ஹூதி இயக்கத்திற்கு எதிராக ஏமன் அரசு தொடுத்திருக்கும் போரில், அரசுக்கு உதவுகிற சௌதி அரேபியா தலைமையிலான சர்வதேச கூட்டுப்படை நடத்திய விமானத் தாக்குதலில் சமிராவின் வீடும் தாக்குதலுக்குள்ளாகியது.

5 வயதுக்கு குறைவான சுமார் அரை மில்லியன் குழந்தைகளோடு, சமிராவின் குழந்தைகளும் கடும் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் துன்புறுகின்றனர். தன்னுடைய மகள் ஒர்ஜோவானுக்கு தாய்பாலூட்ட முடியாத அளவுக்கு சமிராவும் ஊட்டச்சத்து குறைபாட்டால் துன்புற்றுள்ளார்.

அவரால் தன்னுடைய குழந்தைக்கு குறைந்தபட்சமாக கொடுக்க முடிந்தது எல்லாம், கலராவை உருவாக்கக்கூடிய பாக்டீரியா கலந்த தண்ணீரில் பால் பவுடர் கலந்த பாலைதான்.

தன்னுடைய குழந்தையை பார்த்தபோது, சமிரா கண்ணீர் விட்டு அழ தொடங்கினார்.

"என்னுடைய மகளுக்கு இன்னும் என்னால் ஏதாவது செய்ய முடியும் என்றால், அதையும் நான் செய்வேன். என்னுடைய சகோதரனிடம் நான் உதவி கேட்க முடியாத அளவுக்கு அவர் மிகவும் நம்பிக்கை இழந்து போயிருக்கிறார்" என்கிறார் சமிரா.

அவர் பேசிக்கொண்டிருக்கும்போது, மேசையில் கிடத்தப்பட்டிருந்த ஒர்ஜோவான் மிகவும் ஒல்லியாக அழக்கூட முடியாமல் வலுவற்றவராக இருப்பதை பார்க்க முடிகிறது.

குழந்தையின் பலவீனமான, வேதனையடைந்த உடலை தொடர்ந்து பார்த்து கொண்டே இருந்த சமிரா, முற்றிலும் நம்பிக்கை இழந்தவராக தோன்றினார்.

சமிராவின் இந்த வாழ்க்கை கதை, தனிப்பட்ட குடும்பம் ஒன்றின் உண்மை கதை மட்டுமல்ல என்பதுதான் கவலைக்குரியது. உண்மையிலேயே, பிபிசி செய்தியாளர் ஏமனில் பயணித்தபோது சந்தித்த பலரில் முதலாவது நபர்தான் சமிரா.

மக்கள் நம்பிக்கை இழந்தும், கவலையோடும், தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியாதவராகவும் துன்பப்படுவது பிபிசி செய்தியாளர் சென்ற இடமெல்லாம் கண்கூடாக தெரிந்தது.

கிளர்ச்சியாளர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஏமனின் வட பகுதியில், பிபிசி செய்தியாளர் சந்தித்த சிகிச்சை மையங்கள் அனைத்தும் காலரா தொற்றிய நோயாளிகளால் நிறைந்திருந்தன.

ஓரிடத்தில் 18 உறுப்பினருடைய குடும்பத்தை சந்தித்த பிபிசி செய்தியாளர், அந்த குடும்பத்திலுள்ள அனைவருமே காலராவால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிய வந்தார்.

பயணம் மேற்கொண்டு வந்து, சிகிச்சை பெறுவதற்கு யாருக்கு முடிகிறதோ அவாகள் அனைவரும் அதிஷ்டசாலிகள் என்று கூறலாம்.

தற்சமயம், 5,37,322 பேர் அந்நாட்டில் காலரா பாதிப்புக்கு ஆளாகி அவர்களில் இதுவரை 2 ஆயிரம் போர் பலியாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைக்கு உலகிலேயே நடக்கும் மிகப்பெரிய காலரா தாக்குதல் இதுதான் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

ஏமனில் நடைபெற்று வரும் போரால், சுகாதார சேவை வழங்கும் மையங்கள் பாதிக்கும் மேலானவை மூடப்பட்டுள்ளன அல்லது பாதியளவு செயல்படுகின்றன. இதனால், ஏமனில் 15 மில்லியன் மக்கள் சுகாதார பராமரிப்பின்றி விடப்பட்டுள்ளனர்.

ஏமன் போர் அழிவுகளுக்கு மேற்குலகின் பங்களிப்பு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
யேமன் போர் அழிவுகளுக்கு மேற்குலகின் பங்களிப்பு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :