பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்தால்.... பாகிஸ்தானை எச்சரிக்கும் அமெரிக்கா

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சன் படத்தின் காப்புரிமை Reuters
Image caption அமெரிக்கா வழங்கிவரும் சலுகைகளை பாகிஸ்தான் இழக்க நேரிடும் என டில்லெர்சன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் தாலிபான்களுக்கு பாகிஸ்தான் ஆரவளிப்பதாக பார்க்கப்படும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் பாகிஸ்தான் மீதான தனது அழுத்தங்களை அதிகரித்துள்ளார்.

பாகிஸ்தான் அரசு, தாலிபன்கள் குறித்த தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்றால் அமெரிக்கா வழங்கிவரும் சலுகைகளை இழக்க நேரிடும் என டில்லெர்சன் தெரிவித்துள்ளார்.

தாலிபன்களுக்கு அடைக்கலம் தருவதாக கூறப்படுவதை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

ஆப்கனில் போரிடுவதற்கான புதிய அணுகுமுறைகளை டிரம்ப் அறிவித்த மறுநாள், இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கும் டில்லர்சன், தாலிபன்களுக்கு எதிரான சண்டையில் ஆப்கன் படைக்கு அமெரிக்க படைகள் பின்புலமாக இருக்கும் என உறுதியளித்துள்ளார்.

அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது.

நேட்டோ அல்லாத கூட்டணி என்ற வகையில் பாகிஸ்தான் சிறப்பு அந்தஸ்துகளை அனுபவித்து வருவதுடன், அமெரிக்காவிடம் இருந்து பில்லியன் கணக்கான டாலர்களை உதவியாகப் பெற்று வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

`` தங்களது நிலையில் இருந்து பாகிஸ்தான் மாற விரும்பவில்லை என்றால், அவர்களுக்கு உதவிகள் அளிப்பது குறித்து விவாதிக்க வேண்டியிருக்கும் அல்லது பாகிஸ்தானில் பாதுகாப்பான புகலிடம் தேடும் எண்ணற்ற பயங்கரவாத அமைப்புகளை எப்படி எதிர்கொள்வது என்ற அணுகுமுறையில் பாகிஸ்தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்`` என டில்லர்சன் கூறியுள்ளார்.

``இந்த நடவடிக்கைகளை எடுப்பது பாகிஸ்தான் கையில் தான் உள்ளது. பாகிஸ்தான் ஒரு ஸ்திரமான நாடாக இருப்பதையே அமெரிக்காவும் மற்ற நாடுகளும் விரும்புகின்றன`` எனவும் டில்லெர்சன் தெரிவித்தார்.

``ஆப்கானிஸ்தானின் போர்க்களத்தில் தங்களால் வெற்றி பெற முடியாது என்பதை தாலிபன்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தச் சண்டையில் எங்களால் வெற்றி பெற முடியாமல் போகலாம், ஆனால் உங்களாலும் வெற்றி பெற முடியாது. பேச்சுவார்த்தை மூலவே இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர முடியும்`` என தாலிபான்களை டில்லர்சன் எச்சரித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை அவசரமாகத் திரும்பப் பெற்றால் அங்கு ஏற்படும் வெற்றிடத்தைப் பயங்கரவாதிகள் நிரப்ப நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தெரிவித்திருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இராக்கில் செய்தது போன்ற தவறை தவிர்க்க ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து படைகளை நீடிக்கச் செய்து `வெற்றிக்குப் போராட` முடிவு செய்துள்ளதாக டிரம்ப் கூறியிருந்தார்.

தனது நாட்டின் மண்ணில் இருந்து பயங்கரவாதிகள் செயல்பட பாகிஸ்தான் அனுமதிக்கிறது என கூறப்படுவதை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகம் மறுத்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு புகலிடம் அளிப்பதாகக் கூறப்படும் கதைகளை நம்பியிருப்பதற்குப் பதிலாக, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பாகிஸ்தானுடன் இணைந்து அமெரிக்க செயல்பட வேண்டும் எனவும் பாகிஸ்தான் வெளியுறத்துறை கூறியுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு புகலிடம் அளிப்பது குறித்த டிரம்பிற்கு இருக்கும் கவலைகள் தங்களுக்கும் இருப்பதாக இந்திய வெளியுறத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்