"அனைத்தையும் இழந்துவிட்டேன்": சியாரா லியோன் மண்சரிவில் உயிர் பிழைத்தோரின் சோகக் கதைகள்

சியாரா லியோன் மண்சரிவு

சியாரா லியோனில் கடந்த வாரம் ஏற்பட்ட மண்சரிவில் குறைந்தது 499 பேர் கொல்லப்பட்டனர். 600க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ள நிலையில், 3000க்கும் மேற்பட்டவர்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.

சியாரா லியோனின் தலைநகர் ஃபிரீ டவுனில் அதிகாலை 5.45 மணியளவில், மக்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் `சுகர் லோஃப்` மலையின் ஒரு பகுதி மக்களின் குடியிருப்பின் மீது சரிந்தது விழுந்தது.

`` பாதிக்கப்பட்டவர்களின் துல்லியமான எண்ணிக்கையை அறிவது கடினம். ஏனேனில் பல சடலங்கள் சிதிலமடைந்துள்ளன``என ஒரு தன்னார்வலர் கூறுகிறார். பாதிக்கப்பட்ட ஐந்து பேருடன் செய்தியாளர் ஒலிவியா அஃக்லாண்ட் பேசினார்.

முழு மலையும் சரிந்து விழுவதைப் பார்த்தேன்

ஆல்ஃபிரட் ஜானி தனது மூன்று நண்பர்களையும் இழந்துள்ளார். மண்சரிவு ஏற்படும் போது மூன்று பேரும் வீட்டிற்குள் சிக்கியிருந்துள்ளனர்.

`` மண்சரிவு ஏற்படும் போது நான் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தேன். திடீரென கடுமையான சத்தம் கேட்டது. மலையில் இருந்து பாறைகள் சரிந்து விழுந்தன.`` என்கிறார் ஆல்ஃபிரட் ஜானி.

படக்குறிப்பு,

சிதலமடைந்த தனது வீட்டை பார்க்கும் ஆல்ஃபிரட் ஜானி

``வீட்டின் முன் பக்க கதவைத் திறந்து, வீட்டில் உள்ளவர்களைக் காப்பாற்ற முயன்றேன். ஆனால், பாறைகள் சரிந்துகொண்டே இருந்ததால் என்னால் எங்கும் நகரமுடியவில்லை. முழு மலையும் சரிந்து குடியிருப்பு மீது விழுவதைப் பார்த்தேன். பெரிய பெரிய பாறைகள் வீடுகளின் மேலே விழுந்தது. மக்களின் அழுகை ஓலம் அங்கு முழுவதிலும் ஒலித்தது. குடியிருப்பில் உள்ள கடைசி வீடு சிதையும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன்,`` என்கிறார் அவர்.

எனது குடும்பத்தையே இழந்துவிட்டேன்

``எனது குடும்பத்தை சேர்ந்த 14 பேரை இழந்துவிட்டேன்`` என்கிறார் யட்டா கமாரா.

படக்குறிப்பு,

உயிர் தப்பிய தனது சகோதரருடன் கமாரா

``சம்பவம் நடந்த தினத்தின் முந்தைய நாள், வீட்டில் குழந்தைகள் சாப்பிட உணவு எதும் இல்லாததால் அரிசி வாங்க எனது அத்தை வீட்டுக்குச் சென்றேன்.

அத்தை வீட்டுக்குச் சென்றிருந்த போது கடுமையான மழை பெய்ததால், அவர் வீட்டிலே தங்கிவிட்டேன். மறு நாள் காலை 6.30 மணிக்கு வீட்டுக்குக் கிளம்ப தயாரான போது மண் சரிவு குறித்த தகவல் வந்தது.

நான் வீட்டுக்கு ஓடிச் சென்று பார்த்த போது, அப்பகுதி முழுவதும் மண்ணாக இருந்தது. சேதங்களைப் பார்த்த பிறகு, எனது குடும்பம் பிழைத்திருக்காது என்பதை தெரிந்துகொண்டேன்,`` என அழுகையுடன் கூறினார் கமாரா.

`வீட்டு கூரை மீது இருந்த ஒரு துளை வழியாகத் தப்பித்தேன்`

அப்துல் மன்சாரே தனது சகோதரர் மற்றும் இரண்டு நண்பர்களுடன் வீட்டில் சூழ்ந்திருந்த சேறுகளை அகற்றிக்கொண்டிருந்தார்.

வீட்டின் கூரை மீதிருந்த துளையை காண்பித்த அவர்,`` இந்த துளை வழியாகத் தான் நாங்கள் தப்பித்தோம்`` என்கிறார்.

படக்குறிப்பு,

வீட்டின் கூரையில் துளையிட்டு உயிர் தப்பிய அப்துல் மன்சாரே

`` எனக்கு விழிப்பு வந்தபோது, அறையில் தண்ணீர் நிரம்பியிருந்தது. உடனே என் மனைவி, குழந்தை மற்றும் சகோதரனை எழுப்பினேன்.

வீட்டின் முன்பக்க கதவு வழியாகவும் பின்பக்கக் கதவு வழியாகவும் வெளியேற முயற்சித்தோம். அந்த நேரம் வெள்ளம் அதிகரித்திருந்தது. வீட்டின் இரண்டு பக்கத்திலும் வெள்ளம் ஓடியதால், கதவை திறக்க முடியவில்லை.

எனது சசோதரர் உதவியுடன் வீட்டின் மேல் கூரையை உலக்கையால் உடைத்து வீட்டின் மேலே ஏறினேன். மக்கள் பயன்படுத்திய பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதை பார்க்க முடிந்தது.

அப்போது ஒரு ஏணி தண்ணீரில் மிதந்து செல்வதைப் பார்த்த நான், அந்த ஏணியை எட்டிப்பிடித்தேன். பிறகு அந்த ஏணியை கூரையின் துளை வழியாக வீட்டிற்குள் இறக்கி மற்றவர்களைக் காப்பாற்றினேன். பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரின் பால்கனியில் தங்கியிருந்து வெள்ளம் உயர்வதைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

நல்லபடியாக நாங்கள் தப்பித்துவிட்டோம். அனால், பணத்தையும், எல்லா உடமைகளையும் இழந்துவிட்டேன்.`` என்கிறார் அப்துல்.

படக்குறிப்பு,

தனது குடும்பத்தை காப்பாற்றிய ஏணியில் அமர்ந்திருக்கும் அப்துல் மன்சாரே

தனது வீட்டுடன், சேமித்து வைத்திருந்த பணத்தையும் பறிகொடுத்த ஆயிரக்கணக்கானோரில் அப்துலும் ஒருவர்.

`` சியாரா லியோன் மக்களில் வெகு குறைவானவர்களே வங்கிக்கணக்கு வைத்துள்ளனர். பெரும்பாலோனோர் சேமித்த பணத்தை வீட்டிலே வைத்திருப்பார்கள்`` என்கிறார் அப்துலின் அண்டை வீட்டுக்காரர்.

எனது பள்ளிக் கட்டணத்தை எனது பெற்றோர் எப்படி செலுத்துவார்கள்?

15 வயதான மபுளு பாங்குரா, மீண்டும் தன்னால் பள்ளிக்குச் செல்ல முடியாததை நினைத்து வருந்துகிறார்.

படக்குறிப்பு,

மபுளு தனது நான்கு இளம் சகோதர சகோதரிகளை காப்பாற்றியுள்ளார்

`` வீட்டில் இருந்த அனைத்தையும் நாங்கள் இழந்துவிட்டோம். எனது புத்தகங்கள், பள்ளி சீருடை, பெற்றோர் சேமித்து வைத்திருந்த பணம் என அனைத்தும் பறிபோய் விட்டது. இனி எனது பெற்றோரால் எப்படி பள்ளிக்கட்டணத்தை கட்ட முடியும்?

மழை கடுமையான பெய்த அன்று, வீட்டில் கதவை திறக்க முடியாததால் நாங்கள் ஜன்னலை உடைத்துத் தப்பித்தோம். எனக்கு நான்கு இளம் சகோதர சகோதரிகள் உள்ளனர். அவர்களை அனைவரையும் தூக்கி வெளியே இருந்த பெற்றோரிடம் ஜன்னல் வழியாகக் கொடுத்தேன்.

வீட்டிற்கு வெளியே தண்ணீர் எனது மார்பளவுக்கு சென்றது. தண்ணீரில் நடந்துவரும் போது, ஒரு உடைந்து போன பாட்டிலின் கண்ணாடி எனது காலை கிழித்தது.

ஒரு அவசரக் கால தன்னார்வலர் என்னை மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்`` என்கிறார் மபுளு பாங்குரா.

ஒரு பெரிய பாறை அவர்களை நசுக்கியது

தனது கணவரும், மகளும் கண் முன்னே நசுங்கி இறந்துபோனதை பார்த்த அதிர்ச்சியில் இருந்து கடியாட்டு பெண்டூ மீளவில்லை.

படக்குறிப்பு,

பெண்டூ கண் முன்னே அவரது கணவரும் மகளும் இறந்துபோனார்கள்

`` வெள்ளம் எங்களது வீட்டை நிரப்பிக்கொண்டிருந்த போது, எனது கணவர் என்னை எழுப்பினார். கடும் மழையால் ஏற்கனவே எங்கள் வீட்டின் கூரை உடைந்திருந்தது.

முதுகில் ஒரு குழந்தையை சுமந்திருந்த நான் கூரை வழியாக வெளியேற அவர் உதவினார். பிறகு இன்னொரு மகளை எழுப்பி அவளை கூரைவழியாக வெளியேற அவர் உதவிக்கொண்டிருந்தபோது பக்கவாட்டில் இருந்து உருண்டுவந்த பாறை அவர்கள் இருவரையும் நசுக்கியது,`` என்கிறார் பெண்டூ.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :