ஏவுகணை திட்டங்களை தற்செயலாக கசிய விட்டது வட கொரியா

வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் ஒரு ஆயுத தொழிற்சாலையை மேற்பார்வையிட்டது பற்றிய செய்தி வெளியீட்டில், அந் நாட்டின் இன்னும் சோதிக்கப்படாத ஏவுகணை அமைப்புகளின் விவரங்கள் தற்செயலாக வெளியாகியுள்ளன.

பாதுகாப்பு அறிவியல் ஆய்வு நிலையத்தில் அதிபர் கிம் மேற்கொண்டது பற்றிய அறிக்கையோடு கேசிஎன்ஏ அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட புகைப்படங்கள், அந்த நிலையத்தின் சுவர்களில் ஹவாசொங்-13 மற்றும் புக்குக்சொங்-3 என்று அழைக்கப்படும் ஏவுகணைகளைப் பற்றிய சுவர் வரைப்படங்களை காட்டுகின்றன.

ஹவாசொங்-13 ஏவுகணை மூன்றடுக்கு எரிபொருள் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஒன்று எனத் தோன்றுகிறது. புக்குக்சொங்-3 பற்றிய வரைபடத்தை அதிகாரிகள் பெருமளவு மறைத்து நிற்கிறார்கள். அது நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணை.

இவ்வாறு புகைப்படங்களின் பின்னணியில், தற்செயலாக முக்கியத் தகவல்களை வட கொரியா கசியவிடுவது இது முதல்முறையல்ல.

நாட்டின் ராணுவ பலத்தை வெளிக்காட்டுவதாக அல்லது தம் எதிரிகளுக்கு ஒரு செய்தியைச் சொல்வதாக இச் செயல்களை ஆய்வாளர்கள் பார்க்கிறார்கள்.

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

இந்த ஆய்வு நிலையத்தில் வட கொரிய அதிபர் மேற்கொண்ட பயணம் திட்டமிட்டே நடத்தப்பட்டதாக தோன்றுகிறது. தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் நடைபெற்றுவரும் உல்ச்சி சுதந்திர படையினரின் ராணுவ பயிற்சியின் மூன்றாம் நாளில் இது நடைபெற்றுள்ளது.

இந்த நடவடிக்கையை வட கொரியா கடுமையாக எதிர்க்கிறது.

இது நடைபெற்றுள்ள நேரமும், அது வெளிப்படுத்தியுள்ள தகவல்களும் மிகவும் முக்கியமானவை.

கொரிய தற்காப்பு மற்றும் பாதுகாப்பு மன்றத்தை சேர்ந்த ஷின் ஜாங்-ஊ தென் கொரியாவின் ஜோங்ஆங் இல்போ செய்தித்தாளிடம் பேசியபோது, "உலகிற்கு தன்னுடைய ராணுவத்தின் வலிமையை காட்டுவதற்காக, வட கொரியா அதனுடைய உண்மையான ஆயுதங்களை அல்லது அவற்றின் வரைபடத்தை அரசு ஊடகம் வழியாக வெளியிட்ட வரலாறு இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

திட ராக்கெட்டு எரிபொருள்களையும், ஏவுகணைகளையும் அதிகமாக தயாரிக்க இந்த மையத்தில் உள்ள விஞ்ஞானிகளுக்கு கிம் ஜாங்-உன் ஆணையிட்டுள்ளதாக கேசிஎன்எ தெரிவித்திருக்கிறது. வெளியாகியுள்ள சுவர் வரைபடத்தில் காட்டப்படும் ஆயுதங்களின் தன்மையோடு இத் தகவல் பொருந்திப் போகிறது.

ஜூலை மாதம் வட கொரியா சோதனை செய்த நீர்ம எரிபொருளை கொண்டுள்ள ஹவாசொங்-14ஐ போல் அல்லாமல், ஹவாசொங்-13 மூன்றடுக்கு திட எரிபொருள் கொண்ட ராக்கெட்டாக தோன்றுகிறது. திட எரிபொருள் கொண்ட புக்குக்சொங்-3, 2016 ஆம் ஆண்டு சோதிக்கப்பட்ட புக்குக்சொங்-1 மற்றும் 2ஐ விட அதிக தொலைவு சென்று தாக்கக்கூடியதாகும்.

பின்னணி தகவல்கள்

தவறுதலாகவோ அல்லது சதியாகவோ இது போன்று முன்பும் நடைபெற்றுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், குவாமிலுள்ள அமெரிக்காவின் விமானப்படை தளத்தை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணையை சோதிக்க திட்டமிடுவதை போன்ற புகைப்படங்களிலும் சுவர் வரைபடங்கள் இடம் பெற்றிருந்தன.

இது வெளிப்படுத்தும் செய்தி தெளிவாக உள்ளது. இந்தப் பிராந்தியத்திலுள்ள அமெரிக்க ராணுவ சக்தி தங்களுடைய பார்வையில் உள்ளது என்பதை வட கொரியா அமெரிக்காவுக்கு தெரிவிக்கிறது.

ஆனால், இவையனைத்தும் மிக பெரிய பொய்யாக இருக்கலாம் என்று தென்கொரியாவின் 'ச்சோசுன் இல்போ' செய்தித்தாள் கூறுகிறது.

இந்த குவாம் விமானப் படைத்தளத்தின் புகைப்படம் 6 ஆண்டுகள் பழமையானது என்றும் கூகுள் வரைபட சேவையில் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்தப் புகைப்படம் உள்ளது என்றும் இந்த செய்தித்தாள் தெரிவிக்கிறது. செயற்கைக்கோள் படங்களை பெறுவதற்கு வட கொரியா எந்த வசதிகளையும் கொண்டிருக்கவில்லை.

அமெரிக்க பெருநிலப்பகுதியை தாக்குதல்

இத்தகைய தந்திரோபாயத்தை வட கொரியா முன்னர் பதற்றமான நேரங்களில் பயன்படுத்தியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்னர், வட கொரியா அணு ஆயுத சோதனை நடத்தியதை தொடர்ந்து போரின் விளிம்பில் அந்த பிராந்தியமே இருந்த நிலையில். 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நோட்பேட் ஏந்திய தளபதிகளோடு கிம் ஜாங்-உன் இருக்கும் ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டது.

அதில், கேமராவுக்கு வசதியான கோணத்தில் இருக்கும் பல வரைபடங்களில் ஒன்றில், ஒரு ஏவுகணை டெக்ஸாஸின் அஸ்டினை இலக்கு வைப்பதோடு, "அமெரிக்க பெருநிலப்பகுதியை தாக்கும் திட்டம்" என்ற வாசகமும் காணப்பட்டது.

தந்திரோபாய தாக்குதல் முயற்சியாக இது சுட்டிக்காட்டப்பட்டாலும், இந்த திட்டம் செயல்படாமல் போனபோது, டெக்ஸாஸின் பெரும்பாலான டிவிட்டர் பயன்பாட்டாளர்களால் கேலிக்குள்ளானது என்று அப்போது 'வாஷிங்டன் போஸ்ட்' தகவல் வெளியிட்டது.

இத்தகைய தாக்குதலை நிறைவேற்ற வட கொரியாவுக்கு போதிய தொழில்நுட்ப திறன்கள் இல்லை.

வட கொரியா வெளிக்காட்டாதது

தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ வரைபடங்களையும், சாட்டுக்களையும் மட்டுமே வட கொரிய வழங்கி, உலகிற்கு செய்தியை அனுப்ப முயலுகிறது என்று பார்வையாளர்களுக்கு குறிப்பைதான் கொடுகிறது. அதனை முழுமையாக வெளிப்படுத்தும் விதமாக செய்தி அறிவிப்பை வட கொரிய காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் மாதம் நடைபெற்ற இந்த ஆண்டு விமானப்படையின் போட்டியில், மிக்29 ரக போர் விமானங்கள் இடம்பெறாமல் போயிருப்பது, ஐக்கிய நாடுகள் அவை விதித்திருக்கும் தடைகள் அந்நாட்டின் ராணுவத்தின் சில பகுதிகளையாவது பாதிக்கிறது என்பதை காட்டுகிறது.

வட கொரியாவிலுள்ள அதிநவீன விமானங்களின் பாகங்கள் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

வட கொரியாவில் தகவல் தொடர்பு மிக கடுமையாக அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த முகமூடி தவறும் சில நேரங்கள், எதிர்பார்ப்பதற்கு அதிகமாக தகவல்களை உலகிற்கு சொல்லிவிடுகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :