தாய்லாந்தை விட்டு தப்பினார் முன்னாள் பிரதமர் இங்லக் சின்னவாட்

அரிசி மானியத்திட்டம் தொடர்பாக நடைபெற்றுவரும் வழக்கின் தீர்ப்புக்கு முன்னால், தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் இங்லக் சின்னவாட் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை CHRISTOPHE ARCHAMBAULT/AFP/Getty Images

பாங்காக்கில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னால் திடீரென நாட்டைவிட்டு செல்ல அவர் முடிவு செய்ததாக, அவருடைய கட்சியில் அவருக்கு மிகவும் நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளன.

அலட்சிய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பின்போது, பாங்காக்கிலுள்ள உச்ச நீதிமன்றத்தில் இங்லக் ஆஜராகவில்லை.

எனவே, இங்லக் சின்னவாட்டுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம், அவருடைய பிணையையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் ஆஜராகவில்லை என்று அவருடைய வழக்கறிஞர்கள் கூறினர்.

படத்தின் காப்புரிமை NICOLAS ASFOURI/AFP/Getty Images

இதனை ஏற்பதற்கு மறுத்துவிட்ட நீதிமன்றம், தீர்ப்பு வழங்குவதை செப்டம்பர் 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

இங்லக் சின்னவாட் நிச்சயமாக தாய்லாந்தை விட்டு சென்றுவிட்டதாகவும், அங்கு எங்கிருக்கிறார் என்ற விவரங்கள் எதுவும் வழங்கவில்லை என்றும் அவரது புயே தாய் கட்சியை சேர்ந்தோர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

மற்றொரு வழக்கின் வளர்ச்சியாக, அரிசி மானியத்திட்ட ஊழலில் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் தாய் அமைச்சர் ஒருவருக்கு 42 ஆண்டுகள் சிறை தண்டனை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

தாய்லாந்துக்கும், சீனாவுக்கும் இடையிலான அரிசி வர்த்தக ஒப்பந்தங்களை தவறாக கையாண்டதாக பூன்சொங் டெரியாபிரோம் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

பிற செய்திகள்:'

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்