சிறை செல்லும் சாம்சங் நிறுவனத்தின் அடுத்த தலைவர்

தென் கொரியாவை சேர்ந்த உலகின் முன்னணி ஸ்மார்ட் ஃபோன் நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீயின் மகனும், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவருமான லீ ஜே-யோங், ஊழல் வழக்கு ஒன்றில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption லீ ஜே-யோங்

இந்த வழக்கு தென் கொரியாவில் 'சேபோல்ஸ்' என்று அழைக்கப்படும், பணக்காரக் குடும்பங்களின் கட்டுப்பாட்டில் உள்ள, பலம் வாய்ந்த பெரு நிறுவனங்களுக்கு எதிராக மக்களுக்கு அதிகரித்து வரும் கோபத்தை வெளிப்படுத்தியது.

ஊழல் குற்றச்சாட்டின்பேரில் தென் கொரிய முன்னாள் அதிபர் பார்க் குன் ஹெ நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு ஒன்றில் அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுத்துள்ள அவர் 12 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையை எதிர்நோக்கியிருந்தார்.

ஜே ஒய் லீ என்றும் அழைக்கப்படும் லீ, 2014-ஆம் ஆண்டு அவரது தந்தையின் உடல் நலக்குறைவுக்குப் பிறகு, சாம்சங் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கடந்த பிப்ரவரி மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.

என்ன குற்றம் செய்தார் லீ?

அரசியல் ஆதாயங்களைப் பெரும் நோக்குடன், தென் கொரிய முன்னாள் அதிபர் பார்க் குன் ஹெ-வின் நீண்டகால தோழியான சோய் சூன் சில் நடத்தி வந்த தொண்டு நிறுவனங்களுக்கு 36 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நன்கொடை அளித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption 2014-இல் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் குதிரைப் பந்தயத்தில் தங்கம் வென்ற சுங் யூ-ரா

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தனது அதிகாரங்களை அதிகரிக்கும் நோக்குடன், சாம்சங் குழுமத்தை மறு கட்டமைப்பு செய்வதற்காக, அரசின் ஒத்துழைப்பைப் பெற அவர் அந்தத் தொகையை வழங்கியதாக அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால், அந்தப் பணப் பரிமாற்றம் லீக்குத் தெரியாமல் நடந்தது என்று அவரது வழக்கறிஞர்கள் கூறினார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஊழல் குற்றச்சாட்டு: பதவியிழந்த தென்கொரிய அதிபர் சிறையில்

குதிரைப் பந்தயங்களில் பங்கேற்று வரும், சோய் சூன் சில்லின் மகள் சுங் யூ-ராவுக்கு ஒரு குதிரை மற்றும் பணம் தந்ததாக முன்னர் ஒப்புக்கொண்ட லீ, அவரிடம் எவ்விதமான ஆதாயங்களையும் எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருந்தார்.

இந்தத் தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் சோங் வு-சியோல் கூறியுள்ளார்.

வேறு யாருக்கெல்லாம் தொடர்பு?

இந்த வழக்கின் காரணமாக ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி பதவி நீக்கம் செய்யப்பட்ட, கடந்த மார்ச் மாதம் கைதான தென் கொரிய முன்னாள் அதிபர் பார்க் குன் ஹெ விசாரணையை எதிர்கொள்ளவுள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption சிறையில் இருக்கும் தென் கொரிய முன்னாள் அதிபர் பார்க் குன் ஹெ

அவரது தோழி சோய் சூன் சில் தன் மகளுக்கு ஆதாயம் பெறுவதற்காக, அரசாங்க நடவடிக்கைகளில் தலையிட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, தற்போது மூன்று ஆண்டு கால சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்.

வெள்ளியன்று, சாம்சங் நிறுவனத்தின் இரண்டு மூத்த நிர்வாகிகளான சோய் கீ-சுங் மற்றும் சாங் சூங்-கி ஆகியோருக்கு இதே வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பார்க் சாங்-ஜின் மற்றும், நிர்வாகத் துணைத் தலைவர் ஹ்வாங் சுங்-சூ ஆகியோருக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்ட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
'நம்பகத்தன்மை நெருக்கடியில்' சாம்சங் நிறுவனம்

சிறையில் காலத்தைக் கழிப்பாரா லீ?

தென் கொரியாவில் ஊழல் குற்றச்சாட்டு ஒன்றில் ஒரு பெருநிறுவனத்தின் மூத்த அதிகாரிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

கடந்த காலங்களில் விதிக்கப்பட்ட தண்டனைகள் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன அல்லது அதிபரால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளன. புதிய அதிபர் மூன் ஜே-இன் பொது மன்னிப்பு எதுவும் இனிமேல் வழங்கப்படாது என்று கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption சோலில் உள்ள நீதிமன்றம் முன்பு லீக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

மேல் நீதி மன்றம் இந்த சிறை தண்டனையை உறுதி செய்தால், தன் தண்டனைக் காலத்தின் முழுதாகவோ அல்லது அதன் பெரும் பகுதியையோ அவர் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும்.

சாம்சங் நிறுவனத்துக்கு என்ன பாதிப்பு?

இத்தீர்ப்பு தென் கொரியாவின் மிகப் பெரிய தொழில் குழுமத்துக்கு பலத்த அடியாக விழுந்துள்ளது. தீர்ப்புக்குப் பின்னர் அதன் பங்குகளின் விலை 1% குறைந்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் எதிர்காலத் தலைமை பற்றியும் இது கேள்வி எழுப்பியுள்ளது. லீயின் சகோதரிகள் சாம்சங் குழுமத்தின் வெவ்வேறு பிரிவுகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்தாலும், அவர்கள் உயர் பொறுப்புகளுக்கு வருவார்களா என்பது இன்னும் தெளிவாகவில்லை. அவர் சிறையில் இருந்த ஆறு மாதங்களில் தொழில் நிர்வாகம் பெரிதாக பாதிக்கப்படவில்லை.

கடந்த காலாண்டில் அந்நிறுவனம் 11 ட்ரில்லியன் தென்கொரிய வான்களை லாபம் ஈட்டியுள்ளதுடன், கேலக்ஸி எஸ்-8 ஸ்மார்ட் ஃபோனையும் அறிமுகம் செய்துள்ளது. ஒன்றுடன் ஒன்று இணைந்த 60 நிறுவனங்களை உள்ளடக்கிய சாம்சங் தென் கொரியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கு அளவுக்கு வர்த்தகம் செய்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்