பாகிஸ்தானுக்கு டிரம்ப் எச்சரிக்கை: எப்படிப் பார்க்கிறது இந்தியா?

  • சஷாங் ஜோசி
  • ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்
படக்குறிப்பு,

பாதுகாப்பு செயலர் ரெக்ஸ் டில்லர்சன் மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் பாகிஸ்தானுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

கடந்த திங்கள் இரவு, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் போர் குறித்த தனது புதிய கொள்கைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டார்.

ராணுவ வீரர்களை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெறுவதற்கு எந்த காலக்கெடுவும் இன்றி, அமெரிக்கப்படைகள் அந்நாட்டில் தொடர்ந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் என டிரம்ப் அன்று அறிவித்தார்.

ஆப்கானிஸ்தானிற்கு மேலும் 4000 அமெரிக்க வீரர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதவிர டிரம்பின் அன்றைய அறிவிப்பில் மேலும் இரண்டு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அவர் அன்றைய பேச்சில் பாகிஸ்தானை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.

இதற்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிரான அவரது பேச்சுகள் தனிப்பட்ட கருத்துகள் என கூறப்பட்ட நிலையில், இந்த முறை வெளிப்படையாக அவர் பாகிஸ்தானை தாக்கிப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

`பாகிஸ்தானுக்கு பல மில்லியன் அமெரிக்க டாலர்களை நாங்கள் அளித்து வரும் நிலையில், நாங்கள் எதிர்த்து போராடி வரும் ஆயுதப் போராளி குழுக்களுக்கு அந்த நாடு புகலிடம் அளித்து வருகிறது` என டிரம்ப் பேசியிருந்தார்.

`நாகரிகம், ஒழுங்கு மற்றும் அமைதி ஆகியவற்றை பாகிஸ்தான் நிரூபிக்க வேண்டிய நேரம் இது` என அவர் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஆகியோர் விடுத்து வந்த தொடர் மிரட்டல்களையடுத்து, டிரம்பின் இந்த பாகிஸ்தான் எதிர்ப்புக் கருத்து வெளியாகியுள்ளது.

படக்குறிப்பு,

2001-ஆம் ஆண்டிலிருந்து ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கை.

ஆனால் இந்த எதிர் கருத்துகள் பாகிஸ்தானிற்கு போதுமானதாக இல்லை என்றால், ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளை டிரம்ப் பாராட்டிப் பேச வேண்டிய சூழல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

போர் தொடங்கிய காலத்திலிருந்து, நிலப்பகுதிகளால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தானிற்குள் சர்வதேச படைகள் செல்ல, தனது பிராந்திய பகுதிகளை பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி வழங்கியது.

மேலும், தனது விமானத்தளங்களில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் பறக்க அனுமதி , அல் கய்தா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு எதிரான செயல்பாடுகளில் மேற்குலக புலனாய்வு அமைப்புகளுக்கு ஒத்துழைப்பு ஆகியவற்றை பாகிஸ்தான் அளித்தது.

சக்தி வாய்ந்த ஹக்கானி குழுவினர் உட்பட பல ஆப்கானிஸ்தான் ஆயுதக்குழுக்களுக்கு 1970-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பாகிஸ்தானில் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அடைக்கலம் அளித்து வருகிறது.

இதன் மூலம் இந்தியாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது ஐ.எஸ்.ஐ.யின் நோக்கமாக இருந்தாலும், ஆப்கானிஸ்தானுடன் இருந்த கருத்து வேறுபாடுகளும் ஒரு காரணமாக இருக்கிறது.

பிரிவினை நடைபெற்ற காலத்திலிருந்து, ஆப்கானிஸ்தானிற்கும்,பாகிஸ்தானிற்கும் இடையே `துரந்த் கோடு` ( தற்போது ஆப்கானிஸ்தான் வசம் உள்ளது) என அழைக்கப்படும் நிலப்பகுதி குறித்த சர்ச்சை இருந்து வருகிறது.

பாகிஸ்தானிற்கு எதிரான டிரம்பின் பேச்சிலிருந்து மூன்று முக்கிய கேள்விகள் எழுகின்றன.

படக்குறிப்பு,

தாலிபானின் கட்டுப்பாட்டிலும், ஆதிக்கத்தின் கீழும் இருக்கக் கூடிய ஆப்கன் பகுதிகள்.

முதல் கேள்வி, டிரம்பின் இந்த எச்சரிக்கைகள் செயல் வடிவம் பெறுமா? என்பதாகும்.

`பாகிஸ்தானில் தீவிரவாதம் என்ற புற்றுநோய் உள்ளது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டி உள்ளது` என 2009-ஆம் ஆண்டு தனது பாதுகாப்பு ஆலோசகர்களிடம் கூறிய அப்போதைய அமெரிக்க பிரதமர் ஒபாமா, சி.ஐ.ஏ-வின் தலைவர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரை இந்த கருத்தை தெரிவிப்பதற்காக பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார்.

`அண்டை வீட்டாரை மட்டுமே கொத்தும் என்பதற்காக ,உங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் பாம்புகளை வளர்க்க முடியாது` என 2011-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஹிலாரி கிளிண்டன் எச்சரித்தார்.

அதே ஆண்டு, `பாகிஸ்தான் உளவு அமைப்பின் உண்மையான ஆயுதம் ஹக்கானி குழுக்கள்தான்` என அமெரிக்காவின் முன்னணி ராணுவ அதிகாரி வெளிப்படையாக அறிவித்தார். ஆனால் இந்த எச்சரிக்கைகள், செயல்படுத்தப்படவே இல்லை.

கூட்டணி ஆதரவு நிதி என சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களும், உதவி நிதி என பல மில்லியன் டாலர்களையும் அமெரிக்காவிடமிருந்து பாகிஸ்தான் தொடர்ந்து பெற்று வந்தது.

பாகிஸ்தான் அதிகாரிகள் மீது தடை உட்பட பல தண்டனைகளை செயல்படுத்துவோம் என டிரம்ப் அரசு மிரட்டியது.

ஆனால் அதனை அவர்கள் செயல்படுத்தினார்களா? இதே சூழல்தான் அடுத்து வரும் வாரங்களிலும் இருக்கும் என பாகிஸ்தான் அதிகாரிகள் நம்பிக்கையில் உள்ளனர்.

இரண்டாவது கேள்வி, இந்த மிரட்டல்களுக்கு பாகிஸ்தான் எப்படி பதிலளிக்கிறது என்பது.

இதற்கு முந்தைய நெருக்கடி நிலைகளின் போது, கைபர் கணவாய் போன்ற ஆப்கானிஸ்தானிற்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வழிகளை பாகிஸ்தான் மூடியது.

இந்த வழிகளைத் தவிர ஆப்கானிஸ்தானை அடைய இரான் மற்றும் ரஷ்யாவிலிருந்து வழிகள் உண்டு. ஆனால் இந்த இரண்டு நாடுகளுடனும் அமெரிக்கா மோசமான உறவை கொண்டிருக்கிறது.

இதையும் தாண்டி, தாலிபனுக்கு வளைந்து கொடுப்பதற்காக அமெரிக்க ஆளில்லா விமானங்களை பாகிஸ்தானே தாக்கியிருக்க முடியும் அல்லது புலனாய்வுக்குழுக்கள் உடனான ஒத்துழைப்பை முற்றிலும் நிறுத்தியிருக்க முடியும்.

ஆனால் இதற்கு பதிலடியாக நிதி உதவி நிறுத்தம், அமெரிக்காவின் நேரடி வான் தாக்குதலை தூண்டுவது போன்ற எதிர் விளைவுகளை பாகிஸ்தான் கருத்தில் கொண்டிருக்கும்.

படக்குறிப்பு,

2011-ஆம் ஆண்டு, பாகிஸ்தானை `கொல்லைப்புறத்தில் உள்ள பாம்புகள்` என ஹிலாரி கிளிண்டன் விமர்சனம் செய்தார்.

`அதிக நம்பிக்கை`

மூன்றாவதாக, இறுதி வடிவம் அடைய 40 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட ஒப்பந்தத்திற்கு பாகிஸ்தான் இடையூறு ஏற்படுத்துமா என்பது.

தாலிபன் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என விரும்புவதாக டிரம்பும், ரெக்ஸ் டில்லர்சனும் வெளிப்படையாக அறிவித்துவிட்டனர்.

ஒரு வேளை இந்த பேச்சுவார்த்தை வெற்றியடைந்து, தாலிபன்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தில் இடம்பெற்றால், இனி வரும் காலங்களில் தாலிபன்கள் பாகிஸ்தானை சார்ந்திருப்பது குறையும்.

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்த தாலிபன் தலைவர்கள் அனைவரும், கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது கொலை செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வளவு விலை கொடுத்தாவது, தாலிபன் மீதான தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த பாகிஸ்தான் முயற்சி செய்யவும் சாத்தியம் உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களில் சுமார் 20,000 பாகிஸ்தான் மக்கள் கொல்லப்பட்டும், அந்நாடு தொடர்ந்து ஆயுதக்குழுக்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

சீனாவை நம்பியிருக்கும் பாகிஸ்தான்

கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தானின் ராணுவ மற்றும் அரசியல் தலைவர்களிடையே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், நட்பு நாடுகளுக்கு அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த பயணம் சீனாவில் இருந்து துவங்க வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் ஆதரவு மீது பாகிஸ்தான் பெரிய நம்பிக்கை வைத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக `சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டம்` உட்பட பல திட்டங்களில் பத்து பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேலாக சீனா பாகிஸ்தானில் முதலீடு செய்துள்ளது.

ஆனால் எவ்வளவு தூரம் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவளிக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை.

இறுதியாக, இந்தியாவின் ஆதரவை பெற டிரம்ப் முயற்சி செய்தால் என்ன நிகழும்?

அப்படி நடந்தால், தாலிபனுக்கான தனது ஆதரவை மேலும் அதிகரிக்க பாகிஸ்தானை தூண்டிவிடுவதாக இது அமையும் என சில விமர்சகர்கள் கருதுகின்றனர்.

படக்குறிப்பு,

2008-ஆம் ஆண்டு, காபூலில் உள்ள இந்திய தூதரகம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆனால் 2000-ஆவது ஆண்டுகளில் பாகிஸ்தானின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையிலும், ஆப்கானிஸ்தானிற்கான இந்தியாவின் பங்களிப்பை கட்டுப்படுத்த அமெரிக்கா முயன்றதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதற்கு பரிசாக, 2008-ஆம் ஆண்டு காபூலில் உள்ள இந்திய தூதரகம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உதவி செய்தது.

இந்தியாவின் ஈடுபாடு

ஆப்கானிஸ்தானுடன் யுக்தி கூட்டுறவுக்கான ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர், 2011-ஆம் ஆண்டுதான் ஆப்கானிஸ்தானிற்கு பாதுகாப்பு உதவிகளை இந்தியா விரிவாக்கம் செய்தது.

இதன்படி இதுவரை 4,000 ஆப்கானிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா ராணுவ பயிற்சி அளித்தல் மற்றும் ஆப்கன் தேசிய பாதுகாப்பு படைகளுக்கு பழைய போர் ஹெலிகாப்டர்களை அளித்தல் உள்ளிட்ட உதவிகளை இந்தியா செய்தது. ஆனால் இவையும் பாகிஸ்தானின் நிலைப்பாட்டில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்தியாவின் சாத்தியமான பங்கு குறித்த உண்மை நிலையை நாம் உணர வேண்டும். மிக அதிகளவில் உதவிகள் செய்யுமளவிற்கு இந்தியாவிடம் திறன் இல்லை.

ஆப்கானிஸ்தானிற்கு ராணுவ உதவிகளை செய்வதற்கு, இந்தியா தனது நட்பு நாடுகளான ரஷ்யா மற்றும் இரானை சார்ந்துள்ளது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில், அந்த இரு நாடுகளும் தாலிபன்கள் உடனான தங்கள் தனிப்பட்ட உறவை அதிகரித்துள்ளன.

`பொருளாதார உதவி மற்றும் முன்னேற்றம்` ஆகிய குறிப்பிட்ட பகுதிகளில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து டிரம்ப் மேற்கோள் காட்டியுள்ளதை நாம் குறிப்பிட்டு பார்க்க வேண்டும்.

இந்த உதவி, 2 பில்லியன் டாலர் பங்களிப்பில் ஆப்கானிஸ்தானிற்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் இருக்கக் கூடிய ராஜாங்க ரீதியான அதிகாரத்தை, ராணுவ உதவி செய்து கெடுத்துக் கொள்ள இந்தியா விரும்பவில்லை.

இதே நேரத்தில், மேற்குலக நாடுகள் மத்தியக் கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிக்காவிலிருந்து வரும் தீவிரவாத மிரட்டல்களின் மீது கவனத்தை செலுத்தத் தொடங்கியுள்ளன.

மேலும் நவீன காலத்தில் நடைபெற்ற நீண்ட போரில் அவை களைப்படைந்துள்ளன.

பலவீனமான ஆப்கன் அரசிற்கும் அதன் ராணுவத்திற்கும் இந்தியா அளிக்கக்கூடிய உதவிகள் இனி வரவேற்கப்படலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :