பிரிவினைக்கு முந்தைய வரலாறு இந்தியா, பாகிஸ்தானில் எவ்வாறு கற்பிக்கப்படுகிறது?

ஸ்கைப் மூலமாக பிபிசி உருது செய்தியாளர் சுமலதா ஜாஃப்ரி பாகிஸ்தான் மாணவர்களிடையே உரையாடுகிறார்
Image caption ஸ்கைப் மூலமாக பிபிசி உருது செய்தியாளர் சுமலதா ஜாஃப்ரி பாகிஸ்தான் மாணவர்களிடையே உரையாடுகிறார்

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகளை அலசும் பிபிசியின் ஆய்வுத் தொடர்.

ஒரு காலத்தில் பிரிட்டிஷாரின் ஒரே ஆட்சிக்குக் கீழ் இருந்து தனித்தனியே பிரிந்து விடுதலை பெற்ற இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் வரலாறு எவ்வாறு கற்பிக்கப்படுகிறது?

தில்லியில் பிபிசி ஹிந்தி மொழி நிருபர் திவ்யா ஆர்யாவும் ராவல்பிண்டியில் பிபிசி உருது பிரிவு நிருபர் சுபீலா ஜாப்ரியும் பள்ளி மாணவர்களிடம் நாட்டின் வரலாறு பற்றி கேட்ட கேள்விகளுக்கு கிடைத்த பதில்களோ மிகவும் வித்தியாசமானவை.

கேள்வி: முகம்மது அலி ஜின்னாவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

பாகிஸ்தான்: அவர் பாகிஸ்தானின் தந்தை. இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் தூதராக கருதப்படுபவர். முகம்மது அலி ஜின்னா, முஸ்லிம்களுக்காக தனி நாடு பெற்றுத்தராமல் இருந்திருந்தால், இந்தியாவில் நமது நிலைமை மிகவும் மோசமாக இருந்திருக்கும்.

இந்தியா: அந்தக்காலத்தில் மிகவும் பிரபலமான வழக்கறிஞராக இருந்தார் ஜின்னா. முஸ்லிம்களுக்கு தனி வாக்குரிமை வேண்டும் என்று அவர் கோரினார். ஆனால் அவ்வாறு செய்தால் இந்து, முஸ்லிம் மக்கள் பிரிந்துவிடுவார்கள் என்பதால் அவருடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

Image caption தில்லி மாணவர்களிடையே திவ்யா ஆர்யா

கேள்வி: மகாத்மா காந்தியைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

பாகிஸ்தான்: அவர் தீவிர மதவெறியர். இந்துக்களுக்கு உரிமையையை கொடுக்கவும், முஸ்லிம்களை ஒடுக்குவதற்கும் பணியாற்றிய இந்துத் தலைவர். இந்துக்களும், முஸ்லிம்களும் இணக்கமாக வாழவேண்டும் என்று அவர் விரும்பினார், ஆனால் இருதரப்பினரின் மாறுபட்ட வாழ்க்கை முறை ஒன்றாக வாழ்வதை அசாத்தியமாக்கியது.

இந்தியா: மகாத்மா காந்தி இந்தியாவின் தேசத் தந்தை. அகிம்சை வழியில் போராடி நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர். அவர் நிறைய உண்ணாவிரதங்கள் இருந்தார். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டவர் காந்தி.

தொடர்புடைய பிற செய்திகள்:

கேள்வி: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

பாகிஸ்தான்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றி எதுவும் சொல்லித் தரவில்லை.

இந்தியா: பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்க்க வன்முறை வழியே சிறந்தது என்று கருதிய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இளைஞர்களை ஈர்த்த அவர் 'இரத்தத்தை தாருங்கள் உங்களுக்கு விடுதலையைப் பெற்று தருகிறேன்' என்று முழங்கினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கேள்வி: பிரிவினைக்கு காரணம் என்ன?

பாகிஸ்தான்: பிரிவினைக்கு முக்கிய காரணம் இருவருடைய பழக்க வழக்கங்களும் முற்றிலும் வேறானது. சடங்கு-சம்பிரதாயங்கள், பேச்சுவழக்கு, பாரம்பரியம், வாழ்க்கை முறை என அனைத்தும் மாறுபட்டது. எனவே இரு தரப்பினரும் ஒன்றாக வாழ்வது அசாத்தியமானது. எனவே தனி நாடு கோரிக்கை எழுந்தது. 1940இல் லாகூரில் தனி நாடு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தியா: இந்தியாவில் முழு உரிமை இருக்காது என்று முஸ்லிம்கள் நினைத்தார்கள். தனி வாக்குரிமை வேண்டும் என்ற முஸ்லிம்களின் கோரிக்கையை காந்தி ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் இந்து முஸ்லிம் பிரிந்துவிடுவார்கள் என்று அவர் கருதினார். இந்த கருத்து வேறுபாடுகளை பயன்படுத்தி பிரிட்டன் இந்தியாவை இரண்டாக பிரித்தது.

தொடர்புடைய பிற செய்திகள்:

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை: முக்கிய துளிகள்

பிரிவினை: 70 வருடங்களுக்கு பிறகு மூதாதையரின் வீட்டை பார்த்த பாகிஸ்தான் பெண்

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை: 70 ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்காத வலி

பகத் சிங் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் பிறந்த அவர் பாகிஸ்தானிலேயே இறந்தார்.

இந்தியா: மாபெரும் சுதந்திர போராட்ட வீர்ர் பகத்சிங். ஆங்கிலேயர்களின் பொதுச்சபையில் வெடிகுண்டு வீசிய அவர், 'இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்டார்'.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரிவினைக்கு பிறகு புதுடெல்லி ரயில் நிலையத்தில் முஸ்லீம் லீக்கின் தேசிய காவலர்கள்

கேள்வி: 1857 சிப்பாய் கலகம் பற்றி என்ன தெரியும்?

பாகிஸ்தான்: 1857 அக்டோபர் மாதம் பத்தாம் தேதி இந்த போரின் முதல் அடியை மங்கள் பாண்டே எடுத்துவைத்தார். இந்தப் போரில் இந்து, முஸ்லிம் இருதரப்பினரும் பங்கேற்றனர்.

இந்தியா: துப்பாக்கிகளுக்கு வழங்கப்பட்ட தோட்டாக்களின் உறைகள் மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பினால் ஆனவை என்ற தகவல் பரவியதால், இந்திய வீர்ர்கள் இணைந்து பிரிட்டன் ஆட்சிக்கு எதிராக போர் நட்த்தினார்கள். ஆனால், பிறகு இந்த இரு மதத்தினருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

பிரிவினை நாட்டை மட்டும் பிரிக்கவில்லை, ஒன்றாக இருந்து பிரிந்த இரு நாடுகளின் வரலாற்றை, மாணவர்களின் கல்வியை, பாடத்திட்டத்தை, பண்டைய வரலாறை, புதிய தலைமுறையின் புரிதலை மாற்றியிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்