3 ஏவுகணைகளை செலுத்தி வட கொரியா மீண்டும் சோதனை

வட கொரியா குறைந்த தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகளை, கடலுக்குள் ஏவி சோதனை செய்துள்ளதாக அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.

படக்குறிப்பு,

சமீப மாதங்களில் வட கொரியா பல ஏவுகணை சோதனைகளை செய்துள்ளது.

அவை வட கொரியாவின் காங்வான் மாகாணத்தில் இருந்து ஏவப்பட்டதாகவும், அவை சுமார் 250 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்றதாகவும் தென் கொரியா கூறியுள்ளது.

கடந்த மாதம், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை செய்த பின்பு, அமெரிக்க பிராந்தியமான குவாம் மீதும் தாக்குதல் நடத்தப்போவதாக வட கொரியா மிரட்டல் விடுத்திருந்தது.

ஆனால், இப்போதைய சோதனையால் அமேரிக்கா அல்லது குவாம் பகுதிக்கு எவ்விதமான அச்சுறுத்தலும் இல்லை என்று அமரிக்க ராணுவம் கூறியுள்ளது.

அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா ராணுவப் பயிற்சி மேற்கொள்வதற்கு பதிலடியாகவே அடிக்கடி வட கொரியாவின் ஏவுகணை சோதனைகள் அமைகின்றன.

பெரும்பாலும் கணினி மூலம் தூண்டப்படும், ராணுவப் பயிற்சியில் தற்போது ஆயிரக்கணக்கான அமெரிக்கா மற்றும் தென் கொரியப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அந்த ஏவுணைகள், அந்நாட்டு நேரப்படி சனிக்கிழமை காலை 06.49-க்கு ஏவப்பட்டதாகத் தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த ஏவுகணைகளில் இரண்டு தோல்வியடைந்ததாக ஆரம்பத்தில் அமெரிக்கா கூறியிருந்தாலும்,சமீபத்திய மதிப்பீடுகளின்படி, ஒரு ஏவுகணை ஏவப்பட்டவுடனேயே வெடித்து சிதறியதாகவும், மற்ற இரண்டும் ஏவப்பட்ட இடத்தில் இருந்து வட-கிழக்கு திசை நோக்கி சுமார் 250 கிலோ மீட்டர் தூரம் பயணித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஏவுதல் நடவடிக்கைகள், சுமார் 30 நிமிட நேரம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கொண்டு பதற்றமான சூழல் எதுவும் தூண்டப்படாமல் இருக்க, வட கொரியாவின் நடவடிக்கைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக, தென் கொரிய பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

1950 முதல் 1953 வரை நடந்த கொரியப் போர் தற்காலிகப் போர் நிறுத்த உடன்படிக்கையுடன் முடிக்கப்பட்டதால், அந்த இரு நாடுகளும் இன்னும் முடிவடையாத ஒரு போரில் இருப்பதாகவே கருதப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :