இங்கிலாந்தில் 4 இந்தியர்கள் பலியான சம்பவம்: லாரி ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு

LNP / BBC படத்தின் காப்புரிமை LNP / BBC

இங்கிலாந்தின் நியூபோர்ட் பேக்னெல் நகர நெடுஞ்சாலையில் மினி பஸ்ஸுடன் இரண்டு லாரிகள் மோதிய சம்பவத்தில், அவற்றின் ஓட்டுநர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பக்கிங்காம்ஷயரில் உள்ள நியூபோர்ட் பேக்னெல் நகரில் உள்ள 15 மற்றும் 14-ஆவது சந்திப்புகளுக்கு இடையிலான நெடுஞ்சாலையில், கடந்த சனிக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் மினி பஸ்ஸுடன் இரண்டு கன்டெய்னர் லாரிகள் மோதின.

அந்த சம்பவத்தில் பெண்கள் உள்பட மொத்தம் எட்டு பேர் பலியாகியுள்ளனர். ஐந்து வயது சிறுமி ஒரு ஆண் ஒரு பெண் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றொரு நபர் குறைவான பலத்த காயங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளார்.

பலியானவர்களில் மினி பஸ் ஓட்டுநர் உள்பட நான்கு பேர் பேர் இந்தியர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

நோட்டிங்காமைச் சேர்ந்த ஏபிசி டிராவல்ஸுக்கு சொந்தமான மினி பஸ் ஓட்டுநரும் அன் உரிமையாளருமான சிரியாக் ஜோசஃப், தனது பகுதிவாசிகளால் அசாதாரண தந்தை என்றும் சிறந்த தலைவர் என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்தியாவில் இருந்து லண்டனுக்கு வந்தவர்களை ஐரோப்பா சுற்றுலாவுக்காக சிரியாக் ஜோசஃப் அழைத்துச் செல்வதாக இந்தது.

இந்நிலையில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஜோசஃப் சிரியாக் உள்பட நான்கு இந்தியர்கள் பலியாகியுள்ளனர்.

அதில் மூன்று பேர் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ ஊழியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை LNP

"இந்த விபத்தில் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கார்த்திகேயன் ராமசுப்ரமணியம் புகளூர், ரிஷி ராஜீவ் குமார், விவேக் பாஸ்கரன் ஆகிய மூவரும் பலியாகினர். மேலும் ஒரு ஊழியர் படுகாயம் அடைந்துள்ளார்" என்று பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் கைதான இரு லாரி ஓட்டுநர்களான வூர்ஸ்டெர்ஷெரை சேர்ந்த ஓட்டுநர் ரிஸ்ஸார்ட் மாஸியரக் (31), டெர்வென்ட் ஸ்ட்ரீட்டைச் சேர்ந்த மற்றொரு லாரி ஓட்டுநர் டேவிட் வேக்ஸ்டாஃப் (53) ஆகியோர் மீது அபாயகரமான முறையில் உயிரைப் பறிக்கும் வகையில் வாகனத்தை ஓட்டியதாக தலா எட்டு புள்ளிகளும், கடுமையான காயங்களை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டியதாக தலா நான்கு புள்ளிகளும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இருவரும் மில்டன் கீன்ஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்