பிரிவினையின்போது பாகிஸ்தானில் இருந்த இந்துக்கள் வீட்டின் தற்போதைய நிலை என்ன?

பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று இரு நாடுகளாக பிரிந்ததால் ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி, தொடரும் விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் 14--ஆவது பாகம் இது.

பிரிவினையின்போது பாகிஸ்தானின் டேரா இஸ்மாயில் கானில் இருந்து பல இந்து குடும்பங்கள் நாட்டையும் வீட்டையும் துறந்து இந்தியாவிற்கு வந்தனர். இது இரு நாடுகளின் எல்லையில் அமைந்திருக்கும் பகுதி.

டேரா இஸ்மாயிலில் இருந்து வந்த இந்து மக்கள் அங்கிருந்த கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், மொழி என அனைத்தையும் தற்போதும் பின்பற்றுகின்றனர்.

அங்கு அவர்கள் விட்டு வந்த வீடுகள் இன்றும் அப்படியே இருக்கின்றன, வீடுகளின் வெளிப்புறத்திலோ, முகப்பிலோ பொறிக்கப்பட்ட அவர்களின் பெயர்களும் அப்படியே உள்ளன.

லாகூரில் இருந்து 320 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது டேரா இஸ்மாயில் கான்.

'பாபா பகவாந்தாஸ்' என்று ஒரு வீட்டின் முகப்பில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டு தனிநாடாக உருவானது பாகிஸ்தான் என்பதை நினைவுப்படுத்தும் விதமாக இதுபோன்ற பல இந்துக்களின் வீடுகள் அங்கு இருக்கின்றன.

டெல்லியின் அருகில் குருக்ராமில் வசிக்கும் ப்ரேம் பிப்லானி, பிரிவினையின்போது, டேரா இஸ்மாயிலில் இருந்து இங்கு வந்தவர். இன்றும் அவர் டேராவின் மொழியான 'சராய்கி' மொழியில் பேசுகிறார்.

தனது பிரிவினை அனுபவங்களை பிபிசியிடம் அவர் பகிர்ந்துக் கொள்கிறார். 'பிரிவினை காலத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருந்த்து. நான் கத்தி குத்துப்பட்டேன். பிரிவினைக்குக் பிறகு பலர் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தபோது, கிடைத்த இடத்தில் தங்கிவிட்டோம். 50 ஆண்டுகள் ஜலந்தரில் வசித்தபிறகு நாங்கள் குருகிராமிற்கு வந்தோம்.'

பாகிஸ்தானில் இருந்த வீட்டை பார்த்தபோது…

விவசாயியான ப்ரேம் பிப்லானி உலகம் முழுவதும் சுற்றியிருக்கிறார். டேரா இஸ்மாயில் கானில் இருந்து வந்தபிறகு 57 ஆண்டுகளுக்கு பிறகு 1999 இல் மீண்டும் பாகிஸ்தான் சென்றார். அங்கு டேரா இஸ்மாயில் கான் தன்னுடைய வீட்டை சென்று பார்த்தார்.

'என் வீட்டில் கால் வைத்ததும், அந்த மண்ணின் மணத்தை என்னுடையதாக உணர்ந்தேன். என் வயது 85 இல் இருந்து 40 அல்லது 50 ஆக குறைந்துவிட்டதாகத் தோன்றியது. அந்தப் பகுதியில் இப்போதும் பழைய வீடுகள் உள்ளன. அது மட்டுமல்ல, மாடுகளை பராமரிக்கும் கோசாலை, ஒரு ஆலயம் என அனைத்தும் அப்போது இருந்தது போலவே தற்போதும் இருக்கின்றன.'

'இந்து மற்றும் சீக்கியர்களின் வீடுகளின் முகப்பில் பெயர்ப் பலகை இப்போதும் இருக்கிறது. என் வீட்டை பார்த்ததும் நான் அசந்துபோய்விட்டேன். 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த என் தாத்தா கட்டிய வீட்டை பார்த்த்தும் ஏற்பட்ட மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை. வீட்டின் கூரையும் அப்போது இருந்ததைப் போலவே இருக்கிறது, ஆனால் அது அரசுப் பள்ளியாக இருக்கிறது.

பிரிவினைக்கு பின் உருவான புதிய உறவுகள்

70 ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்த பல உறவுகளைப் பிரிந்து அவர் வந்திருந்தாலும், தற்போது அங்கு சென்ற ப்ரேம் பிப்லானி தனது பரம்பரை வீட்டை பார்த்து வாயடைத்து நின்றார். அவர் 'சராய்கி' மொழியில் பேசியதைக் கண்டு அங்கிருந்தவர்கள் வாயடைத்து போனார்களாம்.

'இந்தியாவில் இருந்து வந்திருப்பவர்கள் சராய்கி மொழியில் பேசியதை அறிந்த மக்கள் ஆச்சரியப்பட்டனர். தங்கள் பழக்கவழக்கங்களைப் பின்பற்றும் பலர் இந்தியாவில் இருப்பதை நினைத்து மகிழ்ந்தனர்' என்று பிபிசியிடன் பேசிய புலந்த் இக்பால் கூறுகிறார்.

சராய்கி மொழியில் இருந்து விலகும் புதிய தலைமுறை

ப்ரேம் பிப்லானி சராய்கி மொழியை பேசுவதோடு, இன்று வரை அங்கு தொடரும் பழக்கங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்.

ஆனால் அவரது குடும்ப இளைஞர்களுக்கு இந்த மொழி அவ்வளவாக தெரியாது.

எனக்கு சராய்கி மொழியில் சில வார்த்தைகள் மட்டும்தான் தெரியும், ஆனால் முழுமையாக புரிந்துக் கொள்ளமுடியாது. முக்கியமான விழாக்களிலும், சடங்குகளில் என் அப்பா, டேராவாலில் உடுத்துவது போன்ற உடையையே உடுத்துவார் என்கிறார் அவரது மகள் நீலிமா விக்.

பிரிவினை

ப்ரேமைப் போன்றே பாகிஸ்தானில் இருந்து வந்த இந்துக்களில் பலர் குருகிராமில் வசிக்கின்றனர். அவர்கள் சந்திக்கும்போது பிரிவினை காலத்திய நினைவுகளை பகிர்ந்துக் கொள்வார்கள்.

'டேராவில் இந்து-முஸ்லிம் மக்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து வசித்தோம், எல்லா பண்டிகைகளையும் ஒன்றுகூடி கொண்டாடுவோம். பிரிவினையால் வகுக்கப்பட்ட எல்லைக்கோடுகள் எங்களையும் பிரித்துவிட்டன.'

சஹ்தேவ் ரத்ரா சொல்கிறார், 'எங்கள் குடும்ப உறுப்பினர்கள் இந்தியாவிற்கு தனித்தனியாக வந்ததால் பிரிந்துவிட்டோம். நாங்கள் ஒன்று சேர்வதற்கு ஏழு மாதங்கள் ஆனது'.

இந்தியாவில் சராய்கி மொழி பேசும் மக்கள் மிகவும் குறைவாகவே இருந்தாலும், அவர்கள் ஒன்றுகூடும்போது தங்கள் மொழியிலேயே பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொள்ள விரும்புகின்றனர். சராய்கி மொழிப் பாடல்களையும் அவர்கள் பாடி மகிழ்கின்றனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த கதை(காணொளி)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்