மூன்று பேர் மட்டுமே பேசும் பூர்வீக ஆப்ரிக்க மொழியை காப்பாற்ற முயற்சி

கேத்ரினா எசௌ தன்னுடைய குழந்தை பருவ மொழி அழிந்துவிடாமல் இருக்க தீவிரமாக உழைத்து வருகிறார்.

நு (N||uu) என்கிற மொழியை மிகவும் சரளமாக பேசுகின்ற மூன்று பேரில் ஒருவர்தான் 84 வயதான எசௌ. புஷ்மென் என்றும் அறியப்படும் தென் ஆப்ரிக்காவின் 'சான்' சமூகத்தினர் பேசுவதே 'நு' மொழி.

தென் ஆப்ரிக்காவின் பூர்வீக மொழியாக இது கருதப்படுகிறது.

இந்தக் குடும்பத்தை தவிர இந்த மொழியை சரளமாக பேசுகின்ற யாரும் இவ்வுலகில் இல்லை.

அழியும் விளிம்பில்

"அழியும் பெரும் ஆபத்திலுள்ள" மொழியாக 'நு' மொழி ஐக்கிய நாடுகள் அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

"குழந்தையாக இருந்தபோது, நான் 'நு' மொழியைத்தான் பேசினேன். பலரும் இதே மொழியை பேசுவதை கேட்டிருக்கிறேன். அந்த நாட்கள் அனைத்தும் சிறந்தவை. நாங்கள் எங்களுடைய மொழியை மிகவும் நேசித்தோம். ஆனால், அது இப்போது மாறிவிட்டது" என்று கேப் மாகாணத்தின் வடக்கு பகுதி நகரான அப்பிங்டனிலுள்ள எசௌ தெரிவிக்கிறார்.

பல நூற்றாண்டுகளாக, 'சான்' சமூக மக்கள் இந்தப் பிராந்தியத்தில் சுதந்திரமாக நடமாடி வந்தனர். தாவரப் பொருள்களை சேகரித்தும், விலங்குகளை வேட்டையாடியும் தங்கள் குடும்பத்துக்கு உணவளித்தனர்.

ஆனால், 'சான்' சமூக மக்களின் பாரம்பரிய நடைமுறைகள் எல்லாம் அழிந்துவிட்டன. மொழி மட்டுமே அவர்களின் வரலாற்றை இணைக்கின்ற கருவியாக இருப்பதாக 'சான்' சமூகத்தின் வழிதோன்றல்கள் தெரிவிக்கின்றனர்.

மொழி அழியாமல் இருக்க முயற்சி

112 ஒலிகள், 45 தனிச்சிறப்பு வாய்ந்த 'நு' மொழி கிளிக்குகளை சிறியதொரு குடிசைக்குள் வைத்து உள்ளூர் குழந்தைகளுக்கு எசௌ கற்றுக்கொடுத்து வருகிறார்.

"நான் இந்த மொழியை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து வருகிறேன். நான் இறக்கின்றபோது, இந்த மொழி அழிந்துவிடுவதைப் பார்க்க விரும்பவில்லை" என்று எசௌ கூறுகிறார்.

இந்த மொழியை எவ்வளவு அதிகமாக அடுத்த தலைமுறையினருக்கு வழங்க முடியுமோ, அவ்வளவுக்கு அதிகமாக வழங்க விரும்புகிறேன். அதற்கு அதிக காலம் இல்லை என்பதை நான் ரெம்பவும் உணர்ந்திருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

10 ஆண்டுகளாக எசௌ தன்னுடைய வீட்டில் இந்த வகுப்பை நடத்தி வருகிறார்.

வந்து சேர்ந்த 'ஆப்ரிக்கான்ஸ்' மொழி

எசௌ உள்பட இந்த சமூகத்தை சேர்ந்த மக்கள் பெரும்பாலும் தற்போது 'ஆப்ரிக்கான்ஸ்' பேசி வருகின்றனர். 'ஆப்ரிக்கான்ஸ்' மொழி 17 ஆம் நூற்றாண்டில் தென்னாப்பிரிக்கா வந்தடைந்த டச்சுக் குடியேறிகள் பேசிய மொழியோடு தொடர்புடையது.

"நாங்கள் எங்களுடைய மொழியில் பேசினால், வெள்ளையர்களால் அடித்து துன்புறுத்தப்பட்டோம்" என்கிறார் எசௌ.

"எங்களுடைய வரலாற்றின் காரணமாக, இந்த மொழியை இனிமேலும் பேச மக்கள் இப்போது விரும்பவில்லை. அதை சுற்றி அவ்வளவு வேதனை உள்ளது" என்கிறார் அவர்.

"'நாங்கள் வெள்ளையராக இல்லாதபோதும் 'நு' மொழியை கைவிட்டு 'ஆப்ரிக்கான்ஸ்' மொழியை கற்று, பேசத் தொடங்கினோம். அது எங்களுடைய அடையாளத்தை பாதித்துள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களுடைய குழந்தைப்பருவத்தில் அனுபவித்த கசப்புணர்வை பற்றி அவர் பேசுகின்றபோது, எசௌவின் 95 வயதுக்கு மேற்பட்ட 2 சகோதரிகளான ஹான்னா கோபரும், கிரிட் சிகோயும் உற்றுக்கேட்டு கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் அதிகமாக பேசவில்லை. ஆனால், எசௌ பேசுகிறபோது, ஒப்பு கொள்வதுபோல தங்களுடைய தலையை அவர்கள் அசைக்கின்றனர்.

எழுத்துக்களை உருவாக்கிய எசௌ

ஔமா கில்மெய்டு என்று பாசமாக அறியப்படுபவர், இன்றைய நாளில் 'நு' மொழி பேசுவதற்கு இருக்கும் வெட்கத்தை அகற்ற விரும்புவதாகத் தெரிவித்தார்.

மொழி வாரி மாநிலங்கள் உருவாகி 60 ஆண்டுகள் நிறைவு

உகாண்டா- காது கேளாதவர்களுக்கான 'சைகை மொழி தேவாலயம்

கையில் ஒரு பிரம்போடு, பாடங்கள் நடத்தும் எசௌ, உடல் பாகங்களை குறிப்பிடும் பெயற்செற்களை வெள்ளை எழுது பலகையில் சுட்டிக்காட்டுகிறார். மாணவர்கள் ஒருசேர அந்த சொல்லை வாசிக்கின்றனர்.

மற்ற பல ஆப்ரிக்க மொழிகளை போல, தலைமுறை தலைமுறையாக இந்த மொழியும் வாய்மொழியாக அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு வந்தது. ஆனால், இப்போது இந்த மொழி தொடர்ந்து அடுத்த தலைமுறையினருக்கு கடத்தப்படுவதில் அச்சுறுத்தலை சந்தித்துள்ளது.

சமீபகாலம் வரை, இந்த மொழியில் எழுதிய பதிவேடுகளாக எதுவும் இல்லை.

லண்டனிலுள்ள ஓரியன்டல் மற்றும் ஆப்ரிக்கன் ஆய்வுக் கல்லூரியை சேர்ந்த மொழியியல் வல்லுநரான ஷீனா ஷாவோடும், கேப் டவுணிலுள்ள ஆப்ரிக்க மொழிப் பன்மைத்துவ மையத்தை சேர்ந்த மத்தியாஸ் பிரிஸின்கரோடும் சேர்ந்து, கற்பிக்கும் தேவைக்காக, 'நு' மொழியின் எழுத்துக்கள் மற்றும் அடிப்படை இலக்கண விதிமுறைகளை எசௌ உருவாக்கியுள்ளார்.

மொழி - சமூக அடையாளம்

"ஔமா கில்மெய்டின் சமூகத்தோடு நாங்கள் செய்தப் பணிகளில் இருந்து, இந்த சமூகங்கள் மொழியை தங்களுடைய அடையாளமாகப் பார்ப்பதை நாங்கள் அறிய வந்தோம்" என்று ஷீனா ஷா தெரிவித்திருக்கிறார்.

" உலகமயத்தைத் தழுவி வரும் இன்றைய உலகில் தனிப்பட்ட அடையாளமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவருகிறது. " என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

மொழி என்பது தகவல்களை பரிமாறிக்கொள்ளுவது என்பதற்கும் மேலானது. இது கலாசாரத்தோடும் சமூகத்தின் வாழ்க்கை முறையோடும் பிணைந்துள்ளது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அழியும் வாய்மொழி அறிவுச்செல்வம்

"ஆப்ரிக்க மொழிகளை பார்க்கின்றபோது, அவை வாழ்க்கை, உறவுகள். ஆன்மிகம், பூமி, சுகாதாரம் மற்றும் மனித குலம் பற்றிய வேறுபட்ட கண்ணோட்டங்களை பரிமாறிக்கொள்ள உதவகின்றன" என்று பிரிஸின்கர் கூறியுள்ளார்.

"உயிர் பிழைத்திருப்பது தொடர்பாக உள்ளூர் சமூகங்களிடம் உள்ள ஏராளமான அறிவு தலைமுறைகளின் ஊடாக கடத்தப்பட்டு வருகிறது. இந்த அறிவைப்பற்றி மேற்குலகம் மிகவும் சொற்பமே அறிந்து வைத்துள்ளது. இத்தகைய மொழிகள் அழிகின்றபோது, இந்த தனிச்சிறப்புமிக்க அறிவும் அழிந்துப்போகிறது" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

எசௌ நடத்துகின்ற வகுப்பறையில். எறக்குறைய 20 குழந்தைகள் உள்ளனர். பெரும்பாலோர் 10 வயதுக்கு குறைவானோர். சிலர் பதின்ம வயதினர்.

எசௌவின் சிறந்த மாணவராக இருக்கும், 16 வயதாகும் மேரி-அண் பிரின்ஸ், ஒரு நாள் இதே வகுப்பை தானே நடத்துவார் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளார்.

"இந்த மொழியை கற்றுக்கொள்வதை மிகவும் விரும்புகிறேன். இந்த மொழி நான் என்னுடைய மூதாதையரோடு சேர்ந்தவர், இணைந்தவர் என்ற உணர்வை வழங்குகிறது. அவர்கள் இந்த மொழியைதான் பேசி வந்துள்ளனர். இந்த மொழியை பேசுவதன் மூலம் இன்று நானும் அவர்களில் ஒரு பகுதியாக இருக்க முடிகிறது" என்று புன்னகையோடு அவர் கூறுகிறார்.

பூர்வீக உணர்வு எதுவுமில்லை

தென் ஆப்ரிக்காவில் அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரே மொழியல்ல இந்த 'நு'.

மூன்று மணிநேரப் பயண தொலைவிலுள்ள ஸ்பிரிங்போக் நகரத்தில் நாமா மொழி பேசுவோர் தங்களுடைய மொழியை அலுவல்பூர்வ மொழியாக அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் தருகின்றனர்.

தென் ஆப்ரிக்காவில் மொழி வரலாற்றில் நாமா மொழி பரந்த அளவில் பேசப்பட்டிருந்தாலும், நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள 11 அலுவல் மொழிகளில் ஒன்றாக நாமா மொழி சேர்க்கப்படவில்லை.

"எங்களுடைய குழந்தைகள் நாமா மொழியை பேச முடியாது என்பது மிகவும் கவலை அளிக்கிறது. எங்களுடைய குழந்தைகள் எமது மூத்தோருடன் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள முடியாது என்கிற நிலை எங்களது இதயத்தை நொறுக்குவதாக உள்ளது" என்று இங்கு நாமா மொழி பேசுகின்ற ஒரேயொரு நபரான 95 வயதான மரியா டாமா தெரிவிக்கிறார்.

"அவர்களுக்கு என்ன எதிர்காலம் இருக்கும். எங்களுடைய கலாசாரத்திற்கு என்னவாகும்?" என்று ஆதங்கப்படுகிறார் மரியா டாமா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :