அமேசான் காடுகளில் புதிதாக 381 உயிரினங்கள் கண்டுபிடிப்பு

அமேசான் காடு படத்தின் காப்புரிமை EPA
Image caption தனித்துவமான சிவப்பு வால்களை கொண்டுள்ள இந்த குரங்குகளுக்கு "பயர் டெய்ல்" என பெயரிடப்பட்டுள்ளது

அமேசான் காடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட ஆய்வில், 381 புதிய உயிரினங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சராசரியாக ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டதாக டபுள்யூ.டபுள்யூ.ஃப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் `பிரேசில்ஸ் மமிராவா இன்ஸ்டிடியூட் ஆஃப் சஸ்டெய்னபில் டெவலப்மெண்ட்` ஆகியவை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மனித செயல்பாடுகளால் ஆபத்தில் உள்ள பகுதிகளிலேயே புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து விலங்குகள் மற்றும் தாவரங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

1999 முதல் 2015 வரையிலான காலத்தில் இங்கு 2000க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட இனங்களைக் கொண்டுள்ள இந்த அறிக்கை பிரேசிலில் உள்ள நகரான 'ஸா பாலோ'வில் வெளியானது.

அமேசானில் கண்டுபிக்கப்படும் புதிய இனங்கள் தொடர்பாக வெளியாகும் அறிக்கைகளில், இது மூன்றாவதாகும்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஆற்றில் வாழும் டால்பின்
படத்தின் காப்புரிமை AFP
Image caption இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரே பறவை இதுவே
படத்தின் காப்புரிமை AFP

முன்பு அறியப்படாத 216 தாவரங்கள், 93 மீன்கள், 32 நிலநீர் வாழிகள், 20 பாலூட்டிகள், 19 ஊர்வன மற்றும் ஒரு பறவை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அமேசான் மழைக்காடு உலகிலே மிகப்பெரிய காடாகும். பல இனங்கள் மற்றும் வாழ்விடங்களைக் கொண்ட அமேசான் உயிர்கள் மற்றும் வாழ்விடப் பன்முகத்தன்மைக்கு பிரபலமானது.

``ஆராய்ச்சியாளர்கள் இன்னும் நூற்றுக்கணக்கான உயிரினங்களைக் கண்டுபிடித்துவருகின்றனர். அப்பகுதிகளில் இன்னும் பல பணிகள் செய்ய வேண்டும் என்பதற்கு இது ஆதாரமாக உள்ளது ``என டபுள்யூ.டபுள்யூ.ஃப் பிரேசில் அமேசான் திட்டத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் ரிக்கார்டோ மெல்லோ கூறுகிறார்.

ஆனால், விவசாயம் செய்தல் மற்றும் மரம் வெட்டுதல் போன்ற மனித செயல்பாடுகள் அமேசான் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கான ஆபத்தாக இருப்பதாக மெல்லோ எச்சரித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

`` மனிதர்களால் அமேசான் காடு அழிக்கப்படும் பகுதிகளில் தான் இந்த 381 உயிரினங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வு நமக்கு மிக முக்கியமானது. ஏனென்றால், நமது பொருளாதார நடவடிக்கைகளால் உயிரினங்களைப் பற்றி நாம் அறிவதற்கு முன்பே அவை அழிந்து போவது பற்றிய உண்மையை இந்த ஆராய்ச்சி உணர்த்துகிறது.`` என்கிறார் மெல்லோ.

சுரங்க பணிகளுக்காக இயற்கை வளங்களைப் பயன்படுத்துவது குறித்து பிரேசிலில் கடுமையான விவாதங்கள் நடந்து வரும் நேரத்தில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :