மெக்சிகோவை உலுக்கிய 8.2 நிலநடுக்கம்: 60 பேர் பலி

மெக்சிகோ நாட்டின் தெற்கு கடலோரப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஒரு நூற்றாண்டில் தங்கள் நாட்டில் நடந்ததிலேயே மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்று அதை அந்நாட்டு அதிபர் விவரித்துள்ளார்.

இறந்தவர்களுக்கும், தங்கள் உறவுகளை இழந்தவர்களுக்கும் அனுதாபம் தெரிவிக்கும் வகையில் ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும் அதிபர் என்ரிக் பினா நியேடோ அறிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இந்த நிலநடுக்கத்தால் மெக்சிகோ சிட்டி நகரமே ஸ்தம்பித்துள்ளது.

அதன் அண்டை நாடான குவாட்டிமாலாவிலும் இந்த நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்க அரசின் அங்கமான யு.எஸ். ஜியாலஜிக்கல் சர்வே இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.1 ஆக பதிவாதியுள்ளதாகக் கூறினாலும், அது இன்னும் கூடுதலாக மெக்சிகோவில் அளவிடப்பட்டுள்ளது. அதன் ரிக்டர் அளவு 8.2 என்று மெக்சிகோ அதிபர் என்ரிக் பினா நியேடோ கூறியுள்ளார்.

பசிஃபிக் பெருங்கடலுக்கு அடியில் 70 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் யு.எஸ். ஜியாலஜிக்கல் சர்வே கூறியுள்ளது.

மெக்சிகோவின் பிஜிஜியாப்பன் நகரில் இருந்து தென்மேற்குத் திசையில் 87 கிலோ மீட்டர் தொலைவில் பசிஃபிக் பெருங்கடலில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. 1985-ஆம் ஆண்டு மெக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10,000 பேருக்கும் மேல் உயிரிழந்ததுடன் பெரும் பொருள் சேதங்களும் விளைந்தன.

மெக்சிகோ, குவாட்டமாலா, எல் சால்வடோர், கோஸ்டா ரிக்கா, நிகரகுவா, பனாமா, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு 11.30 மணிக்கு (கிரீன்விச் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 04.50) ஏற்பட்டு, சுமார் ஒரு நிமிட நேரம் நீடித்த அந்த நிலநடுக்கத்தின் மையத்தில் இருந்து சுமார் 1,000 கிலோ மீட்டர் தொலைவில் அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA

மெக்சிகோவில் சுமார் 5 கோடி பேர் அந்நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளதாகவும், பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் அதிபர் என்ரிக் பினா நியேடோ கூறியுள்ளார். மெக்சிகோவின் தெற்குப் பகுதியிலும், குவாட்டிமாலாவின் மேற்குப் பகுதியிலும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து மெக்சிகோவின் சியாபாஸ் மாகாணத்தின் கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

குவாட்டமாலா அதிபர் ஜிம்மி மொரேல்ஸ் நாட்டு மக்களை அமைதி காக்குமாறு ட்விட்டர் மற்றும் தொலைக்காட்சி வாயிலாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வுஹாக நகரம்.

மெக்சிகோவின் இன்னொரு அண்டை நாடான அமெரிக்காவின் மேற்கு கடலோர பகுதிகளில் எந்த சுனாமி எச்சரிக்கையும் விடுகடப்படவில்லை.

மணிக்கு சுமார் 300 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் 'கேட்டியா' என்னும் சூறாவளிக் காற்றால் மெக்சிகோவின் கிழக்கு கடலோரப் பகுதிகளும் ஏற்கனவே அச்சுறுதலைச் சந்தித்து வருகின்றன.

படத்தின் காப்புரிமை AFP

நகரும் புவித்தட்டு, அதிரும் நிலம்

2017-ஆம் ஆண்டில் நடந்த மிகப்பெரிய நிலநடுக்கம் இதுதான் என்று பிபிசி அறிவியல் செய்தியாளர் ஜோனதன் ஆமோஸ் கூறுகிறார். இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவையில் பதிவான நிலநடுக்கத்தைவிட இது மூன்று மடங்கு அதிக சக்தி வாய்ந்தது.

அந்த நிலநடுக்கத்தை விடவும் இது ஆழமானதாகவும் உள்ளது. சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் பூமியில் விரிசல் ஏற்படுத்தியுள்ளது இந்த நிலநடுக்கம். அந்த விரிசல்களின் ஆழம் 70 கிலோ மீட்டர் வரை உள்ளது.

மெக்சிகோ மற்றும் குவாட்டமாலா நாடுகளுக்கு அடியில், இருக்கும் கோகோஸ் புவித்தட்டு ஆண்டுக்கு 75 மில்லி மீட்டர் வீதம் கிழக்கு நோக்கி பசிஃபிக் பெருங்கடலின் கரையை நோக்கி நகர்வதால், கடல் எல்லையில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் உண்டாகும் அசைவுகள் நிலநடுக்கத்தை உண்டாக்கியுள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்