இயங்க முடியாத பெண்ணுக்கு எலிக்கடியால் உடல் முழுதும் காயங்கள்

பிரான்சின் வடக்குப் பகுதியில், இடுப்புக்கு கீழ் பகுதி முழுவதும் இயங்காத நிலையான 'கீழங்கவாதம்' எனும் நோயால் பாதிக்கப்பட்ட பதின்பருவப் பெண் ஒருவர், அவரது படுக்கையில் எலிகளால் தாக்கப்பட்டு, இருநூற்றுக்கும் அதிகமான எலிக்கடி காயங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததையடுத்து அரச வழக்குரைஞர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அருகில் இருந்த வாகன நிறுத்தத்தில் இருந்த குப்பைகளால் எலிகள் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பதினான்கு வயதாகும் அந்தப் பதின்பருவப் பெண்ணுக்கு, எலிகள் கடித்ததால் முகத்தில் 45 காயங்களும், கைகளில் 150 காயங்களும், பாதங்களில் 30 காயங்களும் ஏற்பட்டுள்ளன என்று ஒரு மருத்துவ நிபுணர் கூறியதாக பிரான்ஸ் இன்ஃபோ செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தக் கட்டடத்தின் உரிமையாளர் கவனக்குறைவாக இருந்ததற்காக அப்பெண்ணின் தந்தை, அவர் மீது வழக்குத் தொடுத்துள்ளார்.

அந்தப் பெண் தரைத்தளத்தில் படுத்திருந்தாகவும், அவரைக் கீழே விட்டுவிட்டு அந்தக் குடும்பத்தினர் மேல் தளத்திற்கு உறங்கச் சென்றபோது தன் மகள் நல்ல நிலையில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மறுநாள் காலை வரையில் அவளது அப்பா அவளைப் பார்க்கவில்லை. அவளது குடும்பத்தின் வாடகை குடியிருப்பின் நிலையை புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். வீட்டின் உரிமையாளர் குப்பைகள் வீட்டின் அருகே குவிந்துகிடக்க அனுமதித்ததே எலிகளை ஈர்த்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

"அவள் காதுகளில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவளுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாக நினைத்து நான் பயந்துபோனேன்," என்று அவர் ஒரு உள்ளூர் நாளிதழிடம் கூறியுள்ளார்.

ரூபைக்ஸ் என்ற பகுதியில் உள்ள சமூக வீடுகள் சங்கத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக அவளது தந்தை கூறியிருக்கிறார். தற்போது அந்தக் குடும்பம் வேறு பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :