பாகிஸ்தான் படையினரின் ரத்தத்தால் நிறம் மாறிய ஏரி நீர்

1965 - இல் இந்தியா-பாகிஸ்தான் இடையே 22 நாட்கள் நடைபெற்ற போர் தொடர்பான 22 கட்டுரைகள் கொண்ட தொடரின் ஐந்தாம் பகுதி.

வீரர்களின் குருதியால் செந்நிறமான ஏறி

பட மூலாதாரம், BRIG KANWALJIT SINGH

"பர்க்கி, 1965, செப்டம்பர் 10", இது ஃபிரோஜ்புர் ராணுவ முகாமில் சிவப்பு கல்லால் உருவாக்கப்பட்ட நினைவிடத்தில் எழுதப்பட்டுள்ள வாசகம். அதன் அருகில் பாகிஸ்தானின் ஒரு டாங்கி நிறுத்தப்பட்டுள்ளது. அருகில் உள்ள மைல் கல்லில், "லாகூர் 15 மைல்" என்று எழுதப்பட்டுள்ளது.

1965 செப்டம்பர் ஆறாம் தேதியன்று, பாகிஸ்தான் எல்லையை நோக்கி முன்னேறுமாறு சீக்கிய ரெஜிமெண்டின் நான்காவது பிரிவுக்கு உத்தரவிடப்பட்டது. இருள் சூழும் நேரத்தில் அவை 'கால்டா' சென்றடைந்தன.

கால்டா மற்றும் 'பர்க்கி'க்கு இடையில், 'ஹுடியாரா' என்ற கிராமம் இருந்தது, ஹுடியாரா என்ற பெயரில் ஒரு கால்வாயும் அங்கு இருந்தது.

காலாட்படையின் 48வது பிரிவும் அன்றே ஹுடியாரா சென்றடைந்தாலும், பாகிஸ்தானின் கடுமையான துப்பாக்கிச் சூட்டினால் கால்வாயை கடப்பது அசாத்தியமானது.

இரவில் இருளின் துணைகொண்டு தாக்கலாம் என்று போட்ட திட்டம், கால்வாயை கடக்கும் பாலத்தை பாகிஸ்தான் வீரர்கள் கைப்பற்றியதால் தடைபட்டுப்போனது.

குண்டு மழைக்கிடையே தயாரான பாலம்

"பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை, இந்திய ராணுவத்தின் டாங்கிகளை முன்னேற முடியாமல் தடுத்துவிட்டது. பார்க்கப்போனால் அந்த கால்வாய் ஒன்றரை அடி ஆழம் கொண்டதுதான். ஆனால் அகலம் ஐம்பது அடியாக இருந்ததால், டாங்கிகளை இறக்கமுடியாத சூழ்நிலை உருவானது" என்கிறார் கர்னல் மன்மோஹன் சிங்.

பட மூலாதாரம், DEFENCE.PK

பாகிஸ்தானின் குண்டு மழைக்கு இடையே, சீக்கிய ரெஜிமென்டின் இரண்டு பிரிவுகள் பாலத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்கள். மாலைக்குள் பாலம் தயாராகிவிட்டாலும், அது டாங்கிகள் செல்வதற்குப் போதுமான அளவில் இல்லை.

மத்திய இண்டியா ஹார்ஸின் கர்னல் ஜோஷி, ஆபத்தை எதிர்கொள்ளத் தயாரானார். புதிதாக உருவாக்கப்பட்ட பாலத்தில் தனது டாங்கியை முதலில் செலுத்த முடிவெடுத்தார்.

அவரை பின்தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக பிற டாங்கிகள் அணிவகுத்துச் சென்றன. அடுத்த நாள் காலை, செப்டம்பர் மாதம் எட்டாம் தேதியன்று, அவர்கள் ஹுடியாரா கால்வாயை கடந்திருந்தார்கள்.

விமான எதிர்ப்பு துப்பாக்கிகள்

பாகிஸ்தான் ராணுவம் கடுமையான குண்டுவீச்சை நடத்தியது. "ராணுவத்தினரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் அதை 'கார்பெட் பாமிங்' என்று சொல்வோம். அந்தப் பகுதியின் ஒவ்வொரு அங்குலத்திலும் குண்டுகள் விழுந்தன" என்கிறார் கர்னல் மன்மோஹன் சிங்.

"சமயோஜிதமாக நாங்கள் இரவு நேரத்திலேயே பதுங்கு குழிகளை தோண்டியிருந்தோம் என்பதே எங்களுக்கு சாதகமாக இருந்தது. பதுங்கு குழிகளில் இருந்த எங்கள் தலைகளுக்கு மேல் குண்டுகள் பறந்தன" என்று நினைவுகூர்கிறார் கர்னல் மன்மோகன் சிங்.

பட மூலாதாரம், USI

படக்குறிப்பு,

நான்காம் சீக்கிய ரெஜிமெண்ட் அதிகாரிகளிடம் கைகுலுக்கும் இந்திய குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன்

குண்டுமழை பொழிந்துகொண்டிருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், நடுவில், விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை கீழே திருப்பி,பர்க்கியை நோக்கிச் சென்ற இந்திய ராணுவத்தினரின் பக்கம் திருப்பிவிட்டனர்.

பிரிகேடியர் கன்வல்ஜீத் சிங் தனது நினைவுகளை கூறுகிறார், "வானத்தில் சூரியனின் வெப்பம் தகித்த அந்த பகல்பொழுதில், பதுங்கு குழிகள் மேலும் அதிக வெப்பமாக இருந்தது, எங்களுக்கு மூச்சு முட்டியது. தாகம் தொண்டையை அடைத்தது. ஒரு துளி தண்ணீருக்காக தவித்தோம். ஆனால், யாரும் இருந்த இடத்தை விட்டு அசையாமல் நின்றோம்"

பட மூலாதாரம், BRIG KANWALJIT SINGH

படக்குறிப்பு,

பர்க்கியில் இந்தியா வெற்றி பெற முக்கியமான கர்னல் கன்வல்ஜித் சிங்

இந்திய வீரர்கள் இரவு நேரத்தில் பர்க்கியில் தாக்குதல் நடத்தலாம் என்பது திட்டம். செண்ட்ரல் இண்டியா ஹார்ஸின் ஷர்மன் டாங்கி, விளக்குகளை எரியவிட்டுக் கொண்டு, குண்டு தாக்குதல் நடத்திக் கொண்டே முன்னேறும். அவரை பின் தொடர்ந்து நான்காவது சீக்கிய ரெஜிமெண்ட் வீரர்கள் செல்வார்கள் என்ற திட்டம் தெளிவாக இருந்தது.

தாக்குதல் தொடங்குவதற்கு முன்னர், லெஃப்டிணெண்ட் கர்னல் அனந்த் சிங் இந்திய வீரர்களிடையே ஆற்றிய உரை எழுச்சிமிக்கதாக இருந்தது. சீக்கிய மொழியில் அவர் வழங்கிய உரையின் தமிழாக்கம்:

"நமது விதி நமக்கு முன் நிற்கிறது, வீட்டிற்கு திரும்பி செல்வதா வேண்டாமா என்ற கேள்வி நமக்கு முன்னே நிற்கிறது".

"நமது திருமண ஊர்வலத்தை முன்னெடுத்து செல்கிறோம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நமது குண்டுகளின் ஓசை, மாப்பிள்ளை ஊர்வலத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகள். இது, தீபாவளியன்று எழுப்பப்படும் பட்டாசுகளின் ஒலியை விட அதிகமாக இருக்கவேண்டும்".

"பர்கியே மணப்பெண். மணப்பெண்ணை அடையப்போகும் மணமகனைப் போன்று உத்வேகத்துடன் முன்னேறுங்கள்"

தெறிக்கும் நெருப்பு

ஆனால் பாகிஸ்தான் தரப்பினர், இந்தியர்களின் தாக்குதலுக்கு முன்னரே தாக்கத் தொடங்கிவிட்டனர். தொடர்ந்து தீவிரமான தாக்குதல்களை முன்னெடுத்தனர்.

கன்வல்ஜீத் சிங் கூறுகிறார், "அவர்களின் தீவிரத் தாக்குதல் தாக்குப்பிடிக்க முடியாத அளவு இருந்தது. முக்கால் மணி நேரத்தில் எங்கள் மீது 3000 குண்டுகளை கொண்டு தாக்கினார்கள்".

பட மூலாதாரம், BRIG KANWALJIT SINGH

பாகிஸ்தானியர்கள், துப்பாக்கியை செருகுமாறு ஓட்டைகள் விடப்பட்டு, கான்கிரீட்டால் கட்டப்பட்ட 11 பாதுகாப்பு சாவடிகளை (Pillbox) கிராமம் முழுவதும் அமைத்திருந்தார்கள். அவை ஒவ்வொன்றிலும் குறைந்தது மூன்று வீரர்களும், இலகு ரக மற்றும் நடுத்தர ரக இயந்திர துப்பாக்கிகளும், ஸ்டென் ரக துப்பாக்கிகளும் இருந்தன.

கர்னல் மன்மோகன் சிங் சொல்கிறார், "எங்களது 25 பவுண்ட் துப்பாக்கிகளால் அவர்களின் பாதுகாப்பு சாவடிகளுக்கு சாதாரண சேதத்தைக் கூட ஏற்படுத்தமுடியவில்லை. அவர்களை தடுக்க ஒரே வழியாக, உயிரை பணயம் வைத்து, ஓடிச்சென்று அவர்களுடைய பில் பாதுகாப்பு சாவடிகளுக்குள் நுழைந்துவிட்டோம். கையெறி குண்டுகளை அவர்கள் மீது வீசியெறிந்து அவர்களை கொன்றோம்".

சகாக்களையே தாக்கிய டாங்கிகள்

பர்க்கிக்கு 250 மீட்டர் தொலைவில் இருந்த சீக்கிய ரெஜிமெண்ட் வீரர்களுக்கும் பாகிஸ்தான் வீர்ர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்திய வீரர்கள் பாதுகாப்பு சாவடிகளை நோக்கி ஊர்ந்து சென்று, கையெறி குண்டுகளை வீசியெறிந்து துப்பாக்கிச் சூட்டை நிறுத்தினார்கள்.

16-ஆவது மைல்கல்லுக்கு அருகே நின்று, அங்கு வந்து கொண்டிருக்கும் டாங்கிகளுக்காக காத்துக் கொண்டிருக்குமாறு கர்னல் லெஃப்டினெண்ட் கன்வல்ஜீத் சிங்குக்கு உத்தரவு வந்தது.

எட்டு மணி வரை டாங்கிகள் வரவில்லை. எனவே, அவர் ரேடியோவில் கர்னல் அனந்த் சிங்கிடம் உரத்த குரலில் சப்தமிட்டார், "முன்னேற உத்தரவிடுங்கள்". பாயிபண்ட் என்று குறிப்பிட்டு அவரை அழைத்தார்.

பட மூலாதாரம், BRIG KANWALJIT SINGH

படக்குறிப்பு,

1965 போரில் லெஃப்டிணெண்டாக இருந்த பிரிகேடியர் கன்வல்சிங் மற்றும் கர்னல் பி.பி.எஸ் விர்க்

'பாயிபண்ட்' என்பது ரகசிய குறியீடு என்று கன்வல்ஜீத் சிங்குக்கு தெரியும். அதன் அர்த்தம் டாங்கி. 20 நிமிடத்தில் அங்கு வந்த டாங்கி, கண் முன்னால் என்ன இருக்கிறது என்று தெரிந்துக் கொள்ளாமல் உடனடியாக குண்டு தாக்குதல் நடத்தத் தொடங்கிவிட்டார்கள்.

இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், இந்திய வீர்ர்கள் ஏற்கனவெ பர்க்கிக்கு வந்துவிட்டது அவர்களுக்கு தெரியவில்லை. அந்த டாங்கியில் இருந்தவர்கள் தனது சகாக்களின் மீதே தாக்குதல் நடத்திவிட்டார்கள்!

கன்வல்ஜீத் சிங் உடனே டாங்கியை நோக்கி கத்திக் கொண்டே ஓடினார். டாங்கியை ஓட்டியவருக்கு கன்வல்ஜித்தின் கூக்குரல் கேட்கவில்லை. எனவே அவர் டாங்கியின் மீது ஏறி, தனது ஸ்டென் துப்பாக்கியால் ஓசை எழுப்பினர். வெளியே தலைகாட்டியவரிடம், தாக்குதலை நிறுத்திவிட்டு, இடப்புறமாக தாக்குங்கள் என்று சொன்னபிறகே நிலைமை மாறியது.

முதலுதவி

காயமடைந்த இந்திய வீரர்களுக்கு முதலுதவிகூட வழங்க முடியவில்லை. அவர்களை தொட்டு பார்க்கக்கூடவில்லை, ஏனெனில் யுத்தக்களத்தில் ஒவ்வொரு நிமிடமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

பர்க்கியை அடைவதற்கான கடைசி 90 மீட்டர் மிகவும் கடினமானதாக இருந்தது. ஆனால் சீக்கிய ரெஜிமெண்டின் வீர்ர்கள், "போலோ ஸோ நிஹால் சத் ஸ்ரீ அகால்" என்று முழக்கமிட்டுக் கொண்டே தீரத்துடன் முன்னேறினார்கள்.

பட மூலாதாரம், BRIG KANWALJIT SINGH

அதுவரை யுத்தகளத்தில் வீரத்துடன் சாகசம் செய்துக் கொண்டிருந்த பாகிஸ்தானி வீர்ர்கள் சோர்வடைய தொடங்கினார்கள். அவர்களின் உற்சாகம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது.

அப்போது வானத்தில் வீசப்பட்ட இரண்டு தீப்பந்தங்கள் இந்திய தரப்புக்கு உற்சாகமளித்தது. வெற்றி பெற்று பர்க்கியை கைப்பற்றியதற்கான சங்கேத குறியீடான அது, இந்திய வீரர்களை நடனமாட வைத்த்து.

செந்நிறமாக மாறிய ஏரி நீர்

பிரிகேடியர் கன்வல்ஜீத் சிங் நினைவுகூர்கிறார், "அடுத்த நாள் தன்னுடைய சகா, லெஃப்டினெண்ட் பி.எஸ் சஹலுடன் நான் ஒரு பதுங்க குழியில் இருந்தேன். தாகத்தால் தவித்த நான் தண்ணீர் வேண்டும் என்று ஒரு சிப்பாயிடம் கேட்டேன். அவர் ஒரு குவளை நீர் கொண்டுவந்தார்…

அதை ஒரு மிடறு அருந்திவிட்டேன், ஆனால் சுவை வித்தியாசமாக இருந்த்தால், தண்ணீரை பார்த்தேன், அது செந்நிறமாக இருந்தது.

படக்குறிப்பு,

பிபிசி ஸ்டுடியோவில் ரெஹான் ஃபைஜலுடன் பிரிகேடியர் கன்வல்சிங்

கன்வல்ஜீத் சிங் தன்ணீர் ஏன் இப்படி இருக்கிறது, எங்கிருந்து கொண்டு வந்தாய் என்று கேட்டார். அவர் அருகிலிருந்த ஒரு ஏரியை சுட்டிக்காட்டினார். அங்கு சென்று பார்த்தால் ஏரி முழுவதும் செந்நிறமாக இருந்தது.

ஏரியில் பாகிஸ்தான் படையினரின் சடலங்கள் மிதந்து கொண்டிருந்தது. அவர்கள் உடலில் இருந்து வெளியேறிய ரத்தம், ஏரி நீரை செந்நிறமாக்கியிருந்தது. எனக்கு இருந்த தாகமோ தொண்டையை அடைத்தது.

வேறுவழியில்லாமல், உப்பு கலந்த நீர் கண்ணில் இருந்து வழிய, ரத்தம் கலந்த நீரில் ஒரு மிடறை விழுங்கினேன். ஆனால் அடுத்த நிமிடமே வாந்தியெடுத்து விட்டேன்."

பாகிஸ்தான் கதாநாயகர் அஜீஜ் பட்டி

பாகிஸ்தான் தரப்பில் பர்க்கியை பாதுகாத்தவர் பஞ்சாபின் 17ஆம் படைப்பிரிவின் தலைவர் மேஜர் ராஜா அஜீஜ் பட்டி. மிகுந்த வீரத்துடன் அவர் யுத்தத்தை எதிர்கொண்டார். இந்திய தரப்பினரின் துப்பாக்கிச் சூட்டினால் யுத்தத்தின் இரண்டாவது நாளில் அவர் வீரமரணம் எய்தினார்.

பட மூலாதாரம், DEFENCE.PK

படக்குறிப்பு,

1965 போரில் வீரதீர செயல்களை புரிந்த மேஜர் அஜீவ் பட்டிக்கு மரணத்திற்கு பிந்தைய விருதாக நிஷான் ஏ ஹைதர் விருது வழங்கப்பட்டது

அவரை வீழச்செய்த குண்டு அவரை தாக்கியபோது, அவர் ஒரு மரத்தின் உச்சியில் நின்றுக் கொண்டு இந்திய தரப்பினர் மீது குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தார்.

பிரிகேடியர் கன்வல்ஜீத் சிங் சொல்கிறார், "எங்கள் மீது பாகிஸ்தானி தரப்பினரின் கடுமையான தாக்குதல் நடந்து கொண்டிருந்தது. அவர்களை வழிநடத்துபவர்களின் தலைமைப் பண்பே அதற்கு காரணம் என்பது எங்களுக்கு தெரிந்தது. நீண்ட நேரம் எங்கள் தாக்குதலை சமாளித்த அவர், சிறந்த வழிகாட்டி, மாவீரர்.

1965 போரில் பாகிஸ்தானுக்காக உயிர் தியாகம் செய்த மேஜர் ராஜா அஜீவ் பட்டிக்கு, மரணத்திற்கு பிந்தைய விருதாக நிஷான் ஏ ஹைதர் விருது வழங்கப்பட்டது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :