குரங்கு செல்ஃபி காப்புரிமை: சட்டப் போராட்டத்தில் வென்ற புகைப்பட கலைஞர்

குரங்கு செல்ஃபியின் காப்புரிமை படத்தின் காப்புரிமை ©DAVID J SLATER

''குரங்கு செல்ஃபி" புகைப்படம் தொடர்பாக விலங்குகள் நல உரிமைக் குழுவுக்கு எதிரான இரண்டு வருட சட்டப் போராட்டத்தில் வென்றுள்ளார் ஒரு புகைப்பட கலைஞர்.

2011-ம் ஆண்டு இந்தோனீசிய வனப்பகுதியில், பிரிட்டிஷ் புகைப்பட கலைஞர் டேவிட் ஸ்லேட்டரின் காமராவைப் பறித்துக்கொண்ட 'நாருடோ' என்ற மக்காக் இன குரங்கு தன்னை தானே செல்ஃபி எடுத்துக்கொண்டது.

புகைப்படத்திற்கான காப்புரிமை பாதுகாப்பு குரங்குக்கு பொருந்தாது என அமெரிக்க நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், புகைப்படத்தின் மூலம் குரங்கும் பயனடைய வேண்டும் என பீட்டா கூறியிருந்தது.

"குரங்கு சார்பாக" பீட்டா செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், வருங்காலத்தில் இந்தப் புகைப்படத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 25 சதவிகிதத்தை தானம் செய்ய புகைப்பட கலைஞர் டேவிட் ஒப்புக்கொண்டுள்ளார்.

குரங்கு செல்ஃபியை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 25 சதவிகித பணத்தை, நாருடோவின் வாழ்விடத்தைப் பாதுகாக்க பணியாற்றும் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனத்திற்கு புகைப்படகலைஞர் டேவிட் அளிப்பார் என்று பீட்டாவும், டேவிட்டும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை WILDLIFE PERSONALITIES/DAVID J SLATER

"பீட்டாவின் இந்த வழக்கு விலங்குகளின் அடிப்படை உரிமைகள் குறித்து சர்வதேச விவாதத்திற்கு வழிவகுத்தது" என்கிறார் பீட்டாவின் வழக்கறிஞர் ஜெப் கேர்.

இதற்காக நிறைய முயற்சிகளில் ஈடுபட்டதாகவும், புகைப்படத்திற்கான காப்புரிமையை பெற்றதே தனக்கு போதுமானது என்றும் புகைப்பட கலைஞர் டேவிட் கூறியுள்ளார்.

'நாருடோ v டேவிட் ஸ்லேட்டர்' என இந்த வழக்கு பற்றி பேசப்படுகிறது. ஆனால், குரங்கின் அடையாளமும் சர்ச்சைக்குரியதாக உள்ளது.

புகைப்படத்தில் உள்ள குரங்கு, நாருடோ என்ற பெண் குரங்கு என பீட்டா கூறுகிறது. ஆனால் டேவிட்டோ, இது வேறு ஆண் குரங்கு என கூறுகிறார்.

இரண்டு வருட சட்டப்போராட்டத்திற்கு பிறகு சான் பிரான்சிஸ்கோவின் உள்ள அப்பீல் நீதிமன்றத்தின் நீதிபதிகள், டேவிட்டிற்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளனர்.

"இந்த வழக்கு மனிதர் அல்லாத விலங்குகளுக்கு சட்ட உரிமை வழங்குவது குறித்த முக்கிய பிரச்சனையை எழுப்பியுள்ளது" எனவும் பீட்டாவும், டேவிட்டும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :