"ரோஹிஞ்சாக்களை மியான்மர் திருப்பி ஏற்க வேண்டும்" - ஷேக் ஹசீனா

மியான்மரிலுள்ள ரக்கைன் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைகளால் தப்பியோடிய பல லட்சக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்களை மியான்மர் திரும்ப ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தியுள்ளார்.

"ரோஹிஞ்சாக்களை மியன்மார் திருப்பி ஏற்க வேண்டும்" - ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், EPA

ஓர் அகதிகள் முகாமை பார்வையிட்டபோது பேசுகையில், எந்தக் குற்றமும் செய்யாத மக்கள் துன்புறுவதால், மனிதநேயத்தோடு இந்த நிலைமையை அணுக வேண்டும் என்று ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.

கடந்த மாதம் மியான்மரில் வன்முறைகள் தொடங்கிய பின்னர் சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் ரோஹிஞ்சா மக்கள் அந்நாட்டு எல்லையை கடந்து வெளியேறியுள்ளனர்.

ரோஹிஞ்சா ஆயுதப்படையினரை குறிவைத்து தாக்குவதாக தெரிவிக்கின்ற மியான்மர் ராணுவம், பொது மக்களை இலக்கு வைப்பதாக கூறப்படுவதை மறுத்துள்ளது.

ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரோஹிஞ்சா ஆயுதப்படையினர் நடத்திய தாக்குதலுக்கு கொடூர வன்முறை நடவடிக்கைகளால் அரசு படைப்பிரிவுகள் பதிலடி வழங்கியதாக அந்நாட்டை விட்டு வெளியேறியோரில் பலர் தெரிவித்துள்ளனர்.

மியான்மரை விட்டு வெளியேறியபோது, நிலக் கண்ணிவெடிகளால் ஊனமுற்ற ரோஹிஞ்சாக்களோடு பிபிசி பேசியுள்ளது.

மியான்மரின் படை, சமீபத்தில் நிலக் கண்ணிவெடிகளை புதைத்து வைத்துள்ளதாக கூறப்படும் வங்கதேசத்தின் குற்றச்சாட்டை மியான்மர் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

பட மூலாதாரம், Oli Scarff/Getty Images

பௌத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் வாழும் முஸ்லிம் சிறுபான்மையினர்தான் ரோஹிஞ்சா மக்கள். இவர்களை "சட்டப்பூர்வமற்ற குடியேறிகள்" என்று கூறுகின்ற மியான்மரில், இவர்கள் நீண்டகாலமாக சித்ரவதை அனுபவித்து வருகின்றனர்.

மியான்மரில் இதற்கு முன்னதாக வெடித்த வன்முறையால் தப்பியோடிய லட்சக்கணக்கான ரோஹிஞ்சா மக்கள் வங்கதேசத்தில் உள்ளனர்.

இரண்டு அதிகாரப்பூர்வ அகதிகள் முகாம்களில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் நிறைந்துள்ளனர். புதிதாக இங்கு வந்துள்ளோருக்கு உணவு, உறைவிடம் மற்றும் மருத்துவ உதவி அவசரமாக தேவைப்படுவதாக உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

"குற்றமறியா மக்கள்...துன்பப்படுகிறார்கள்"

அதிகாரப்பூர்வ முகாம்களில் ஒன்றான குடுபாலாங் முகாமை பார்வையிட்டபோது, ஷேக் ஹசீனா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

"என்னுடைய தனிப்பட்ட கருத்து மிகவும் தெளிவாக உள்ளது. அவர்கள் இந்தப் பிரச்சனையை மனிதநேயத்தோடு அணுக வேண்டும்" என்று ஷேக் ஹசீனா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ரோஹிஞ்சா எனப்படும் நான் யார்?

காணொளிக் குறிப்பு,

ரோஹிஞ்சா

"இந்த குற்றமறியாத மக்கள், குழந்தைகள், பெண்கள் துன்பப்படுவதால் இதனை கூறுகிறேன். இவர்கள் மியான்மரை சேர்ந்தவர்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் இவர்கள் அங்கு வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் தங்களுடைய குடிமக்கள் அல்ல என்று எப்படி மியான்மர் மறுக்க முடியும்?" என்று ஷேக் ஹசீனா கேள்வி எழுப்பியுள்ளார்.

மியான்மர் திருப்பி ஏற்றுக்கொள்ளும் வரை, ரோஹிஞ்சா மக்களுக்கு வங்கதேசம் உறைவிடம் வழங்கும் என்று வங்கதேச பிரதமர் தெரிவித்துள்ளார்.

வன்முறை நடவடிக்கைகளில் ஆயுதப் படையினரின் பங்கை கண்டித்த அவர், மியான்மர் அரசு இந்த நிலைமையை மேலும் பொறுமையோடு கையாண்டிருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

1970களில் இருந்து மியான்மரில் ஏற்படும் வன்முறைகளை அடுத்து ரோஹிஞ்சா குடும்பங்கள் வங்கதேசத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. ஏறக்குறைய 32 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட அகதிகள் வங்கதேசத்திலுள்ள இரண்டு அதிகாரப்பூர்வ முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போதைய நெருக்கடியினால் மக்கள் அகதியாக வருவதற்கு முன்னரே 3 லட்சம் ரோஹிஞ்சாக்கள் எவ்வித ஆவணமும் இல்லாமல் வங்கதேசத்தில் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ரோஹிஞ்சா முஸ்லிம்கள் வங்கதேசத்தில் இருப்பதால், உள்ளூர் மூலவளங்களில் பற்றாக்குறை ஏற்படுகிறது, குற்றச்செயல்பாடுகள் அதிகரிக்கிறது, கோக்ஸ் பஜார் பகுதியில் சுற்றுலாவை பாதிக்கிறது என்று அந்நாடு தெரிவித்து வருகிறது.

ரோஹிஞ்சா மக்கள் இடம்பெயரக் காரணம் என்ன?

காணொளிக் குறிப்பு,

ரோஹிஞ்சா மக்கள் இடம்பெயரக் காரணம் என்ன

இந்த ஆண்டின் தொடக்கத்தில். வங்காள விரிகுடாவில் இருக்கின்ற 'தென்கார் சார்' என்ற தீவிற்கு, இந்த அகதிகளை அனுப்பிவிடுகின்ற திட்டத்தை வங்கதேசம் முன்வைத்தது..

பருவகால இயற்கை சீற்றங்களால் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக, மனிதர் வாழ்வதற்கு அந்த தீவு பொருத்தமற்றது என்று மனித உரிமை குழுக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கண்டனங்கள் அதிகரிப்பு

ரோஹிஞ்சா நெருக்கடி தொடர்பாக மியான்மர் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்காக போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

பட மூலாதாரம், STR/AFP/Getty Image

ரக்கைன் மாநிலத்தில் நடத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன சுத்திகரிப்புக்கு சிறந்த உதாரணம் என்று ஐ.நா மனித உரிமை ஆணைய தலைவர் சேத் ராத் அல்-ஹூசைன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், மியான்மர் படைப்பிரிவுகள் சட்டத்தை மதித்து, வன்முறையை நிறுத்தி, எல்லா சமூகங்களின் குடிமக்கள் இடம்பெயர்வதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், மியான்மர் அதனுடைய தேசிய வளர்ச்சியை பாதுகாப்பதற்கு எடுக்கின்ற முயற்சிகளுக்கு சர்வதேச சமூகம் ஆதரவு அளிக்க வேண்டும் என்று எண்ணுவதாக சீனா தெரிவித்திருக்கிறது.

பயங்கரவாத தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் ஐக்கிய நாடுகள் மாமன்றம் மற்றும் பிற நாடுகளில் இருந்து வந்துள்ள அறிக்கைகளை பெற்றிருப்பதாக தெரிவித்துள்ள மியான்மர் வெளியுறவு அமைச்சகம், ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க பணிபுரிகிறபோது, அரசு படைப்பிரிவுகள் உரிய கட்டுபாடுகளுடன் செயல்பட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது.

ரோஹிஞ்சா நெருக்கடி பற்றி விவாதிக்க ஐக்கிய நாடுகள் மாமன்றத்தின் பாதுகாப்பு பேரவை கூட்டம் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

தொடரும் நெருக்கடியில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள்

காணொளிக் குறிப்பு,

தொடரும் நெருக்கடியில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :