முக அடையாளம் மற்றும் ஓஎல்இடி திரை வசதிகளுடன் வெளியாகியுள்ள ஐஃபோன் X

'எட்ஜ் டூ எட்ஜ்' திரைவசதி மற்றும் ஹோம் (முகப்பு) பட்டனே இல்லாத தனது உயர்ரக ஸ்மார்ட்ஃபோனை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஐஃபோன் X

ஐபோன் X - என்பது இங்கு எண் பத்தை குறிக்கிறது. மேலும், இது தனது உரிமையாளரை கண்டறியும் வகையிலான பழைய கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பு முறையை விடுத்து தற்போது முக அடையாள அமைப்பை முறையை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு FaceID என்று பெயரிட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், இம்முறையானது வெளிச்சம் இல்லாத இருட்டு பகுதியிலும், 30,000 இன்ஃப்ரா ரெட் புள்ளிகளை உருவாக்கி அதன் மூலம் பயனரை சரிபார்ப்பதால், இது பழைய TouchID தொழில்நுட்பத்தைவிட பாதுகாப்பானது என்று தெரிவித்துள்ளது.

இதுவரை ஆப்பிள் வெளியிட்டுள்ள செல்பேசிகளிலேயே இதுதான் விலை உயர்ந்ததாகும்.

தொடர்பான செய்திகள்:

நவம்பர் 3-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் 64 ஜிபி நினைவகம் கொண்ட ஸ்மார்ட்ஃபோன் 999 அமெரிக்க டாலராகவும், 256 ஜிபி நினைவகம் கொண்ட ஸ்மார்ட்ஃபோன் $1,149 அமெரிக்க டாலராகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 64 ஜிபி நினைவகம் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் நோட் 8 திறன்பேசி 930 அமெரிக்க டாலராக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Apple

"ஐபோன் X ஸ்மார்ட்ஃபோனானது அடுத்த தலைமுறைக்கான ஐபோன்களின் வன்பொருள் தொழில்நுட்பத்தின் மாதிரியை உருவாக்கும் ஒரு நீண்டகால முதலீடு" என்று சிசிஎஸ் இன்சைட் என்னும் திறன்பேசி ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஜியோப் பிளாபர் கூறியுள்ளார்.

"ஓஎல்இடி திரை மற்றும் புதிய வடிவமைப்பானது வருங்கால ஐபோன்களின் மாதிரியாக இருக்கும் என்னு கருதப்படும் அதே வேளையில், ஆப்பிள் முதலில் போதுமான பொருட்களைப் பெறுவதற்கான சவாலை சமாளிக்க வேண்டும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய ஓஎல்இடி திரையுடன் வெளியிடப்பட்டிருக்கும் ஐபோனுக்கு மாறுவதன் மூலம் மிக துல்லியமான கருப்பு மற்றும் சரியான நிறங்களை முன்பிருந்ததைவிட காணவியலும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மற்ற முன்னணி திறன்பேசி தயாரிப்பாளர்களான LG மற்றும் சாம்சங் ஆகியவை இதுபோன்ற தொழில்நுட்பத்தை தங்கள் திறன்பேசிகளில் ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றன.

ஆப்பிளின் விலை மதிப்புமிக்க ஸ்மார்ட்ஃபோன்

இத்திறன்பேசி வெளியிடப்படும் வரை ஆப்பிளின் விலை மதிப்புமிக்க திறன்பேசியாக 969 அமெரிக்க டாலர்கள் விலையுள்ள ஐபோன் 7 இருந்தது.

தனது மற்ற போட்டியாளர்களைவிட பயன்பாட்டாளர்களை திறன்பேசியில் அதிகளவு செலவிட வைக்கும் ஆப்பிளின் இந்த திறனை "புத்திசாலித்தனமானது" என்று வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Reuters

"தேவையை கட்டுப்படுத்துவது மற்றும் தயாரிக்கப்படும் எண்ணிக்கையை சமன் செய்வதற்காகவே அதன் விலையை அதிகமாக நிர்ணயிப்பதன் ஒரு காரணியாக இருக்கும்" என்று Strategy Analytics என்னும் நிறுவனத்தை சேர்ந்த நீல் மவ்ஸ்டோன் கூறுகிறார்.

"ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை அடைய வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்தும் பங்குதாரர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திறன்பேசிகளின் விலையை அந்நிறுவனம் கூட்டிகொண்டே வந்திருக்கிறது. குறிப்பாக $1000 மதிப்புள்ள ஒரு திறன்பேசியை உருவாக்குவதற்கான எண்ணத்தில் ஆப்பிள் நிறுவனம் நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது."

"தங்களது முதன்மையான தயாரிப்பின் விலையை கூட்டுவது என்பது அந்த இலக்கை அடைவதற்கான ஒரு வழியாகும்" என்று அவர் கூறினார்.

தானியங்கி முக அடையாளம் :

FaceID என்னும் தானியங்கி முக அடையாள முறையை பயன்படுத்தி ஆப்பிள் பே'யில் பணம் செலுத்தவோ அல்லது ஸ்மார்ட் ஃபோனை இயக்க பயன்படுத்தவோ இருப்பதில் உள்ள பயன்பாட்டாளர்களின் முன்தயக்கங்களுக்கு ஆப்பிள் பதிலளித்துள்ளது.

ஆனால், முந்தைய தொழில்நுட்பமான டச் ஐடியில் 50,000த்தில் ஒரு தடவை உரிமையாளர் அல்லாத எவரோ ஒருவர் திறன்பேசியை திறக்கவியலும் என்றிருந்த நிலையில், இப்புதிய FaceID தொழில்நுட்பத்தில் அவ்வாய்ப்பு 10 இலட்சத்தில் ஒன்று என்ற பாதுகாப்பான நிலையை எட்டியுள்ளது.

இருந்தபோதிலும், ஐபோன் X திறன்பேசியில் FaceIDக்கு மாற்றாக TouchID அளிக்கப்படாதது பயன்பாட்டாளர்களிடையே சலலப்பை உண்டாக்கியுள்ளது என்று வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

"இது பயன்பாட்டாளர்களுக்கு மிகக் கடுமையான தடை" என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கிரியேட்டிவ் ஸ்ட்ரடஜீஸ் நிறுவனத்தை சேர்ந்த கரோலினா மிலனேசி கூறியுள்ளார்.

"ஆப்பிள் நிறுவனம் தானியங்கி முக அங்கீகார அமைப்பு முறையை பாதுகாப்பானது மற்றும் எல்லா நேரங்களிலும் உபயோகிக்க இயலும் என்று உறுதிப்படுத்தும் வரை பயனாளர்கள் ஒருவித தயக்கத்துடனே இருப்பார்கள்" என்று அவர் தெரிவித்தார்

"பயன்பாட்டாளர்களை பொறுத்தவரை டச்ஐடி முறையானது முடிந்த ஒன்றாக கருதப்படாத நிலையில், அதை மேலும் மேம்படுத்த ஆப்பிள் நிறுவனம் ஏன் முயற்சிக்கவில்லை என்று அவர்கள் கேட்கலாம்." என்று அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Apple

ஐபோன் X ஸ்மார்ட் ஃபோனின் சிறப்பம்சங்கள்:

•5.8 (14.7) அங்குல திரையுடைய இது ஒரு அங்குலத்திற்கு 458 பிக்சல்களை கொண்டுள்ளது. இதன்மூலம் ஆப்பிளின் மிகவும் தெளிவான அதிக பிக்சல்களை கொண்ட திறன்பேசியாக இது உருவெடுத்துள்ளது. மேலும், இதற்கு "சூப்பர் ரெட்டினா" என்னும் புதிய பெயரும் அளிக்கப்பட்டுள்ளது.

•ஹோம் பட்டன் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ள நிலையில் திறன்பேசியில் திரையின் கீழ் பகுதியில் தேய்ப்பதன் மூலம் செயலிகளை இயக்கும் அமைப்பும், மற்றும் பக்க பட்டன் ஒன்றை அழுத்துவதன் மூலம் மெய்நிகர் உதவியாளரான சிரியை இயக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

•போர்ட்ரைட் நிலையை பயன்படுத்தும்போது எடுக்கும் புகைப்படத்தின் பின்புறத்தை மங்க வைக்கும் மற்றும் முன்புற/பின்புற கேமராக்களை பயன்படுத்தும்போது ஒளியளிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

•இது முந்தைய ஐபோன் 7 திறன்பேசியைவிட இரண்டு மணிநேரம் கூடுதல் பேட்டரி ஆயுளை அளிக்கும்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :