மனித மூலதனக் குறியீடு: இலங்கை, நேபாளத்தை விட பின்தங்கியது இந்தியா

கல்விக் கூடாரம்.

பட மூலாதாரம், SAM PANTHAKY/AFP/Getty Images

படக்குறிப்பு,

காஷ்மீரில் இருந்து குஜராத்துக்கு இடம் பெயர்ந்தவர்களின் பிள்ளைகளுக்கு அகமதாபாத் ரயில் நிலையம் அருகே ஒரு கூடாரத்தில் பாடம் நடத்துகிறார் ஒரு காஷ்மீரி இளைஞர்.

உலகப் பொருளாதார மன்றம் என்னும் அமைப்பு உலகின் 130 நாடுகளில் உள்ள மனித மூலதனத்தை ஆய்வு செய்து அளித்த அறிக்கையில் இந்தியாவுக்கு 103வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, நேபாளம் மற்றும் சில பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகள் போன்றவை 'உலக மனித மூலதனக் குறியீடு 2017' அறிக்கையின் தரவரிசையில் இந்தியாவைவிட மேலே உள்ளன.

மனித மூலதனம் என்பது என்ன? உலகப் பொருளாதாரத்தில் மதிப்புக் கூட்டும் வல்லமையை மக்களுக்கு அளிக்கும், அறிவும் திறமையுமே மனித மூலதனம் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. சுருக்கமாக: மக்களுக்குள்ள அறிவும், திறமையுமே மனித மூலதனம்.

கல்வி மட்டுமல்ல வேலையும்...

மனித மூலதனத்தை ஒரு நாடு எப்படி வளர்த்தெடுக்கிறது என்பதே அந்த நாட்டின் நீண்டகால வெற்றியைத் தீர்மானிக்கும்.

முறை சார்ந்த கல்வி மட்டுமே மனித மூலதனத்தைத் தீர்மானிப்பதில்லை.

அறிவையும், திறமையையும் உள்ளடக்கிய இந்த மூலதனம், பயன்படுத்துவதன் வாயிலாக வளரக்கூடியது என்றும், பயன்படுத்தாமல் கிடப்பதன் மூலம் தேயக்கூடியது என்றும் இந்த மனித மூலதனக் குறியீட்டு அறிக்கை தெரிவிக்கிறது.

படக்குறிப்பு,

சென்னை மாநகராட்சிப் பள்ளி ஒன்றில் செயல்வழிக் கற்றல் முறையில் படிக்கும் சிறுமிகள்.

திறன், வளர்ச்சி, வேலை, சிறப்பு அறிவு ஆகிய நான்கு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த நான்கு காரணிகளிலும் ஒரு நாடு எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறதோ அதற்கேற்ப குறியீட்டுப் புள்ளிகள் வழங்கப்பட்டன.

அதிகபட்சப் புள்ளி 100. ஒவ்வொரு நாடும் பெற்ற புள்ளிகளுக்கு ஏற்ப தரப்பட்டியல் உருவாக்கப்பட்டது.

தமது மக்களுக்கு ஒரு நாடு எவ்வளவு நல்ல கல்வியையும், திறன்களையும் அளித்து, தரமான வேலைவாய்ப்பையும் அளித்துள்ளதோ அதற்கேற்ப இப்பட்டியலில் நல்ல தரவரிசையைப் பெற்றுள்ளன என்பதே இதன் பொருள்.

இந்தப் பட்டியலில் 77.12 புள்ளிகளுடன் நார்வே முதலிடத்திலும், 35.48 புள்ளிகளுடன் ஏமன் கடைசி இடத்திலும் உள்ளன.

நார்வே, பின்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய சிறிய ஐரோப்பிய நாடுகளுக்குப் பிறகு அமெரிக்கா நான்காவது இடத்தில் உள்ளது. பிராந்திய அளவிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் சிறந்த இடத்தில் இருக்கின்றன.

ஆப்பிரிக்க நாடுகளும், தெற்காசியாவும் மிகவும் பின்தங்கி இருக்கின்றன.

இந்தியா: யாருக்கு மேல்? யாருக்கு கீழ்?

67 புள்ளிகளுடன் சீனா 34-ஆவது இடத்தில் இருக்கிறது. மலேசியாவுக்கு 33-ஆவது இடம் கிடைத்துள்ளது.

வியட்நாம் 64 -ஆவது இடத்திலும், இந்தோனேசியா 65-ஆவது இடத்திலும், 61.19 புள்ளிகளுடன் இலங்கை 70-ஆவது இடத்திலும் உள்ளன.

சௌதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளும் உகாண்டா, ஜமைக்கா, மியான்மர், கம்போடியா, நமீபியா போன்ற நாடுகளும் இந்தியாவைவிட தரவரிசையில் உயர்ந்த இடத்தில் உள்ளன.

55.29 புள்ளிகளுடன் இந்தியா 103-ஆவது இடத்தில் உள்ளது.

பங்களாதேஷ் 51.75 புள்ளிகளுடன் 111-ஆவது இடத்திலும், 46.34 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 125-ஆவது இடத்திலும் உள்ளன.

பட மூலாதாரம், FAYEZ NURELDINE/AFP/Getty Images

படக்குறிப்பு,

மாலை நேரத்தில் தொழில்நுட்பப் பயிற்சி பெறும் சௌதி தொழிலாளர்கள்.

சிங்கப்பூரும், ஜப்பானும் மட்டுமே முதல் 20 இடங்களுக்குள் உள்ள ஆசிய நாடுகள். இந்தப்பட்டியலில் முதலிடங்களில் உள்ள நாடுகள் தமது மக்களின் கல்வி வளர்ச்சிக்கு நீண்டகாலமாக அதிக முக்கியத்துவம் அளிப்பவையாகவும், தமது மக்கள் தொகையில் பெரும்பகுதியை திறன்சார்ந்த வேலைகளில் ஈடுபடுத்துபவையாகவும் உள்ளன என்று குறிக்கிறது இந்த அறிக்கை.

திறமை வளர்க்க முதலீடு

கல்வியின் மூலமாகவும், வேலைவாய்ப்பின் மூலமாகவும் திறமையை வளர்ப்பதற்கு செய்யப்படும் முதலீடு என்பது மனித மூலதனத்தை மேம்படுத்துகிறது என்பதே இந்த அறிக்கையின் மையக்கருத்து.

உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கு மட்டுமல்ல, அரசியல், சமூக, குடிமையியல் நிறுவனங்களின் செயல்பாட்டுக்கும் மனித மூலதனம் முக்கியமானது என்கிறது இந்த அறிக்கை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :