தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை காவல்துறை மிரட்டுவதாக டிடிவி தினகரன் புகார்

கர்நாடக மாநிலம் குடகில் ஒரு தனியார் விடுதியில் தங்கியுள்ள தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக காவல் துறையினர் அங்கு சென்று மிரட்டுவதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தினகரன்

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், தமிழ்நாட்டில் இருந்து 5 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 30 காவல்துறையினர் குடகிற்குச் சென்று அங்கு தங்கியுள்ள சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டுவதாகக் குற்றம் சாட்டினார்.

தன்னுடைய ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இல்லாவிட்டால், அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என தமிழக காவல் துறையினர் மிரட்டுவதாகவும் அவர்கள் ஆதரவளிக்க முன்வந்தால் அவர்களுக்கு 10-15 கோடி ரூபாய் வழங்கப்படும் என ஆசைகாட்டுவதாகவும் தினகரன் கூறினார்.

இது தொடர்பாக கர்நாடக மாநில காவல் துறையிடம் புகார் அளிக்கப்படும் என்றும் விரைவில் நீதிமன்றத்தை நாடி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் தினகரன் கூறினார்.

தன் மீதும் நடிகர் செந்தில் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான பழனியப்பன் மீது தவறான தகவல்களின் அடிப்படையில் ஒரு கொலை வழக்கில் அவரை விசாரித்துவருவதாகவும் தினகரன் குற்றம் சாட்டினார்.

தன் அணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களை யாரும் மிரட்டவில்லையென செய்தியாளர்களைச் சந்தித்து அவர்கள் விளக்கிய நிலையிலும்கூட, அவர்கள் யார் வற்புறுத்தலிலாவது தங்கியிருக்கிறார்களா என தொடர்ந்து கேள்வியெழுப்பப்படுவதாகவும் தினகரன் கூறினார்.

ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் என்பவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பழனியப்பனை நாமக்கல் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்திருப்பதாக இன்று காலையில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனைக் குறிப்பிட்ட தினகரன், அவர் கைதுசெய்யப்படவில்லையென்றும் நீதிமன்றத்தை நாடியிருப்பதாகவும் கூறினார்.

செவ்வாய்க்கிழமையன்று நடந்த பொதுக்குழுக் கூட்டம், உண்மையான பொதுக்குழுக் கூட்டம் அல்லவென்றும் அவர்கள் எடப்பாடி மற்றும் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் என்றும் தெரிவித்த தினகரன், கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர்கள் நடத்துவது எப்படி பொதுக்குழுவாகும் எனக் கூறினார்.

தனக்கு ஆதரவாக 21 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் எடப்பாடி அணிக்குள்ளேயே தனக்குப் பல 'ஸ்லீப்பர் செல்கள்' இருப்பதாகவும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நேரத்தில் அவர்கள் வெளிப்படுவார்கள் என்றும் தினகரன் கூறினார்.

கட்சியைக் காப்பாற்ற தான் எந்த எல்லைக்கும் செல்வேன் என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்போது தனது ஆதரவு எம்எல்ஏக்கள் தான் சொல்வதைக் கேட்டு செயல்படுவார்கள் என்றும் தினகரன் கூறினார்.

வழக்கமாக செய்தியாளர்களை சிரித்த முகத்துடன் சந்திக்கும் தினகரன், இன்று செய்தியாளர்களின் சில கேள்விகளுக்கு கடும் எரிச்சலடைந்தார்.

'உங்களுக்கு ஆதரவாக எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்' என்பது போன்ற கேள்விகளைக் கேட்ட செய்தியாளர்களைக் கடுமையாக கடிந்துகொண்டார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :