மலேசிய பள்ளியில் தீ விபத்து: 22 மாணவர்கள் உள்பட 24 பேர் பலி

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஒரு இஸ்லாமிய மதக் கல்வி வழங்கும் பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட குறைந்தபட்சம் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption மாணவர்கள் உறங்கிக்கொண்டிருந்த மேல் தளத்தில் உள்ள அறையில் தீ விபத்து ஏற்பட்டது

தஃபீஸ் தாருல் குரான் இட்டிஃபாக்கியா என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பள்ளியில், மலேசிய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 05.40 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்தது.

இரும்புக் கம்பிகளை உடைய சன்னல்களைக் கொண்ட ஒரு விடுதி அறையினுள் சிக்கிக் கொண்டதால் வெளிவர முடியாமல் அவர்கள் உயிரிழந்ததாக் கருதப்படுகிறது.

"கடந்த 20 ஆண்டுகளில் மலேசியாவில் நிகழ்ந்த ஒரு மோசமான தீ விபத்து இது," என்று அந்நாட்டின் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குனர் கிருதீன் திராமன் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

இறந்தவர்களில், 13 முதல் 17 வயதுக்கு உட்பட்ட ஆண் மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் ஆகியோர் அடக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குரான் கற்றுத் தரப்படும் இந்த இஸ்லாமிய தஃபீஸ் பள்ளிகளில் மாணவர்கள் அங்கேயே தங்கிப் படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption இறந்தவர்களின் உறவினர்கள்

"உள்ளே இருந்து திறக்க முடியாதபடி உலோகக் கம்பிகளால், அந்தக் கட்டிடம் சூழப்பட்டிருந்தது. அதனால், அம்மாணவர்கள் சன்னல் வழியாகத் தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். அவையும், இரும்புக் கம்பிகளைக் கொண்டிருந்ததால் அவர்களால் தப்பிக்க முடியவில்லை," என்று தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இணை இயக்குனர்சொய்மான் ஜாஹித் அப்பள்ளிக்கு வெளியே கூடியிருந்த செய்தியாளர்களிடம் கூறினார்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் இன்னும் விசாரணை மேற்கொண்டு வந்தாலும், மின் கசிவு அல்லது எரிந்து கொண்டிருந்த கொசுவர்த்திச் சுருள் ஆகியவை இவ்விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption தீ விபத்து நிகழ்ந்த அறையினுள் இருக்கும் எரிந்து போன படுக்கைகளும் சேதமடைந்த சன்னல்களும்

இந்தத் தீ விபத்தை நேரில் பார்த்த, அந்தப் பள்ளிக்கு அருகில் இருந்த ஒரு வீட்டில் வசித்த ஒருவர், "அந்தக் குழந்தைகள் உதவிக்காக அழுது கொண்டிருந்தனர். ஆனால், ஏற்கனவே கதவு முழுவதும் தீ பரவி இருந்ததால், என்னால் அவர்களுக்கு உதவ முடியவில்லை," என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

இறந்தவர்களின் உடல்கள் "முற்றிலும் எரிந்த நிலையில்" இருந்ததாகக் கூறியுள்ள கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் அமர் சிங், "துரதிர்ஷ்டவசமாக அங்கு ஒரே ஒரு கதவுதான் இருந்தது. அதனால், அவர்களால் தப்பிக்க முடியவில்லை. கருகிய உடல்கள் ஒன்றின் மேல் ஒன்றாகக் கிடந்தன," என்று கூறியுள்ளார்.

சில நிமிடங்களிலேயே தீயணைப்பு வாகனங்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், ஒரு மணி நேரத்துக்குள் தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்தால் உண்டான புகையை சுவாசித்ததால், மூச்சுத் திணறலுக்கு ஆளானவர்கள் உள்பட பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் அமர் சிங்

மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் ட்விட்டர் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். வருங்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்ப்பதற்காக, இது குறித்த விசாரணை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு அமைச்சர் லோக பால மோகன் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

மதக் கல்வி அளிக்கும், வரைமுறைப்படுத்தப்படாத இத்தகைய தனியார் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இப்பள்ளிகளில் 200க்கும் மேலான தீ விபத்துகள் நடந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கைவிடப்பட்ட தொழிற்சாலையில் எஞ்சியிருந்த கந்தகம் தீப்பற்றி எரிந்தது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்